பக்கம் எண் :

764திருஞானசம்பந்தநாயனார் புராணம்

      (இ-ள்.) வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் - வேதநெறியை வளரச்செய்தற்கும் சைவத்தை விளக்கம் செய்தற்கும்; வேதவனத்து...போந்து - திருமறைக்காட்டின் இறைவரை மீண்டும் புகுந்து திருவடிகளில் தலை பொருந்த வீழ்ந்து வணங்கி எழுந்து பாடியும் போற்றியும் பரவியும் அவரது அருள்விடையினைப் பெற்றுக்கொண்டு புறம்பு போந்து; மாதவத்து...நீங்கி - மாதவமுடைய திருநாவுக்கரசர் மறுக்கவொண்ணாதபடி அவரை வணங்கி அருள்செய்து விடைகொடுத்து நிலைபெற்று பெருவிருப்பத்தினாலே அருமைபொருந்த அளவளாவி நீங்கிச்சென்று; கதிர்ச் சிவிகையின்...நாடர் - ஒளிவீசும் முத்துச்சிவிகையின் பக்கத்தில் காழிநாடுடைய பிள்ளையார் அணைந்தனர்.
     (வி-ரை.) வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் - "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க" (1899) என்று முகப்பிற் கூறியபடி பிள்ளையார் இந்த இரண்டும் செய்தற்கே திருவவதரித்தருளினாராதலானும், அவை இனி இப்போது பாண்டிநாட்டில் நிகழவுள்ளமையானும் அத்தொடக்கத்தில் புகுவார் அவ்வாறருளும்படி அந்நினைவுடனே திருமறைக்காட்டிறைவரை வணங்கியருள்பெற்று விடை கொண்டனர் என்க.
     வேதம் வளர்த்தல் - வேத வேள்விகளை நிகழச்செய்தல்; சைவம் விளக்குதல் - பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாதொழிதலை நீக்கி விளங்கச்செய்தல்; பிறவினை வாய்பாடுகளாற் கூறியது அவனருள்கொண்டு செய்வித்தல் குறித்தது.
     வேதவனத் தருமணியை - வேதம் வளர்க்கவும் சைவம் விளக்கவும் செய்யத்தக்க பெருமான் இவரே என்ற குறிப்புப்பெற இவ்வாற்றாற் கூறினார்; என்னை? வேதங் காப்புச்செய்து அடைத்த கதவினைத் திறக்க அருளி வேதத்தையும் சைவத்தையும் வளர்த்தும் விளக்கியும் அருளிய பண்பும் சதுரப்பாடு காட்டியருளியது பற்றி என்க.
     மீண்டும் புக்கு - அன்று முன்னரும் "சென்று பணிந்து போந்" தனராதலின் (2513) மீண்டும் புக்கு என்றார்.
     பாடிப் போற்றிப் பரசி - பாடுதல் - பதிகம் பாடுதல்; போற்றுதல் - துதித்தல்; பரசுதல் - புகழ்களைப் பரவிநிற்றல்; இப்பதிகம் கிடைத்திலது!
     அருள்பெற்று விடைகொண்டு - அருள்பெற்று - தாம் நினைந்து வேண்டினார் வேண்டியவாறே அருள்செய்யப்பெற்றனர். "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்" என்ற இத்தலத் திருத்தாண்டகம் ஈண்டுக் கருதத்தக்கது.
     விடைகொண்டு - தலத்தை நீங்குமுன் அவ்விறைவர்பால் விடைகொண்டு புறப்படுதல் மரபு.
     மாதவத்து...கலந்து நீங்கி - மாதவம் - முன்னைத் தவமும் இம்மைத் தவமுமாகப் பெருந்தவ முனிவராம் தன்மை; "வருஞானத் தவமுனிவர்" (1266), "அப் பரமுனிவன்" (1694); அருள்செய்து - அரசுகள் தம்முடன் எழுந்தருளாது அங்கு தங்குதற்கு அருள்புரிந்து; விடைகொடுத்து - திருப்புகலூரினின்றும் தம்முடன் தொடர்ந்துவந்தும், இனியும் தொடர அமைந்தும், நின்ற அவரைத் தவிர்த்து அங்குத் தங்கியருளவேண்டினாராதலானும், தமது பிரிவாற்றாத அவரை அரிதாங் கருத்தின் இசைய வைத்தாராதலானும், அங்குத் தங்குகின்ற அவர்பால் அங்கு நீங்குகின்ற பிள்ளையார் விடைகொண்டார், என்னாது விடை கொடுத்தார் என்றார்; "மறாதவண்ணம்" என்ற குறிப்புமிது; ஆயின் அவரும் இவர்பால் விடை கொண்டனரன்றோ? எனின், அது அவரது செயலாய் அவர்தம் புராணத்துள்