பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்765

உரைக்கத்தக்கதாதலின் ஆண்டுரைக்கப்பட்டது; "வேணுபுரக்கோ னெழுந்தருள விடைகொண்டிருந்த வாகீசர்" (1555) என்றது காண்க. இனி, இவ்வாறன்றித் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருந்த அரசுகளைப் பிள்ளையார் காணச் சென்று கண்டு கலந்திருந்த பின்னர் அவர்பானீங்கிச் சீகாழிச் செல்ல ஒருப்பட்டபோது அவர் திருவுள்ளமுவந்து விடைகொடுக்கத் தாம் விடைகொண்டருளினர் என்ற வரலாற்றை இங்கு வைத்து ஒப்புநோக்குக. "திருவாயிற் புறத்தணைந்து நாவினுக்கு, வேந்தர் திருவுள்ள மேவ விடை கொண்டருளி, யேந்தலா ரெண்ணிறந்த தொண்டருட னேகினார்" (புரா - 948); இறைவர்பால் அருள்பெற்று விடைகொண்டு என்றும், வாகீசர்பால் அருள்செய்து விடைகொடுத்து என்றும் கூறிய கருத்துக்களையும் நோக்குக.
     மன்னும் காதலினால் அருமையுறக் கலந்து - இப்போது பிரிதலினால் இருவர்க்கு மிடைநின்ற காதல் குறையாது நிலைபெற்றுள்ளது என்பார் மன்னும் என்றார். அவ்வாறு மன்னுதல் பின்னர் பாண்டிநாட்டு நிகழ்ச்சிகளின்பின் பிள்ளையார் திருக்கடவூர் தொழுது அமைந்துறையுநாளில் தாமே நினைந்துகொண்டு "வாகீசமாமுனிவர் எந்நகரி லெழுந்தருளிற் றென்றடியார் தமைவினவி"க் கேட்டு அவரைக் காணத் திருப்பூந்துருத்திக் கெழுந்தருளிய வரலாற்றா னறியப்படும். முன்னரும் "பின்னாக வெய்த விறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்" (2172) என்றதும் கருதுக; கலந்து - அளவளாவிக்கொண்டு.
     கதிர்ச் சிவிகை - ஒளிவீசும் முத்துக்களாலாகிய குறிப்பு; "சோதி முத்தின் சிவிகை" (2114).
     காழிநாதர் - என்பதும் பாடம்.
618
2517.திருநாவுக் கரசருமங் கிருந்தா ரிப்பாற்
     றிருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்ற,
     முயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணு முள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்து மோதி வெண்ணீற்
     றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலா மென்ன
     மாதவரார்ப் பொலிவைய நிறைந்த தன்றே.
619
     (இ-ள்.) திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் - அரசுகளும் அங்குத் தங்கியருளினர்; இப்பால் - இங்கு; திருஞானசம்பந்தர்...ஏறி - பிள்ளையார் செழிய நீர்மையுடைய முத்துக்கள் நிரைத்த பெரும்புகழுடைய சிவிகையின்மேல் ஏறி; பெற்றம்...உள்ளத்து - இடபக்கொடியை உயர்த்த இறைவரது திருவடிகளைச் சிரத்தின்மேற்கொண்டு பேணுகின்ற உள்ளத்தோடு; ஒரு நாமத்து...ஓதி - இறைவரது ஒப்பற்ற திருநாமமாகிய திருவைந்தெழுத்தையும்ஒதி; வெண்ணீற்று...தொழுதார் - இறைவரது திருநீற்றினுடன் விளங்கும் திருமேனியை எண்ணிக் கைதொழுதனர்; நெஞ்சில்...நிறைந்தது - உள்ளத்தில் எப்போதும் வருகின்ற அரனாமத்தினாலே, அன்பு உருகிப் பெருகும் கடலின் ஓசைபோல அடியார்களது அரகர முழக்கமாகிய ஆரவார ஒலி உலகமெங்கும் நிறைந்தது; அன்றே - அப்பொழுதே.
     (வி-ரை.) இத்திருப்பாட்டில் அப்போது அரசுகளது நிலையும், பிள்ளையாரது நிலையும், அடியார்களது நிலையும் கூறப்பட்டன.