|
அங்கு - இப்பால் - என்பன அரசுகள் பாலும் பிள்ளையார்பாலும் செல்லும் இடங்குறித்த சுட்டுக்கள்; வாசிப்போர்களது நினைவு இதுவரையும் இருபெரு மக்களின்பாலும் செலுத்தப்பட்டுவந்த நிலையில் அரசுகள்பால் செல்வதனை அம்மட்டோடு அங்கு நிறுத்தவும், இனி முழு நினைவும் பிள்ளையார்பால் கொண்டு செலுத்தவும் இவ்வாறு அங்கு என்று சேய்மைச் சுட்டாலும், இப்பால் என்று அணிமைச் சுட்டாலும் கூறினார். |
திருஞானசம்பந்தர் - ஏறிப் பேணும் உள்ளத்து ஓதி - தொழுதார் எனக் கூட்டி முடிக்க. பெற்றம் உயர்த்தவர் - என்றது வெற்றிக்குறிப்பு. |
தாள் சென்னியின்மேற் பேணும் - தாம் சிவிகையின்மீதேறியபோது தமது சிரத்தின்மேல் திருவடியை ஏற்றிக்கொண்டார்; "பூங்கழலினை யுச்சிமேற் கொண்டே - மலர்நித்திலச் சிவிகைமேற் கொண்டார்" (2129) என்றது காண்க. |
உள்ளத்து ஓதி - என்க; உள்ளத்தோடு ஓது தலாவது ஒன்றியிருந்து நினைந்து ஓதுதல். மானதம், மந்தம், உரை என்ற மூன்றனுள் மானதமாகக் கனித்தல் என்க. |
ஒருநாமத் தஞ்செழுத்தும் ஓதி - "ஆலை படுகரும்பின் சாறு போல அண்ணிக்கு மஞ்செழுத்தி னாமத் தான்காண்" (தாண்); ஒரு நாமம் - ஒப்பற்ற நாமம்; இது போல உறுதிப் பயன்தரும் நாமம் பிறிதில்லை என்றதாம். |
உள்ளத்து - ஓதி - மனத்துட் கணித்து என்றும், உள்ளத்துடனே வாசிகமாக எடுத்துப் போற்றி என்றும் உரைக்கநின்றது; "சிவாயநம வெனப்பேசி" (ஏயர்கோன் - 158); "வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நானறி யேன்மறு மாற்றம்" (நம்பி - தேவா - ஒற்றியூர் - தக்கேசி); "உண்ணிலும் பசிப்பினு முறங்கினுநின், ஒண்மல ரடியலா லுரையா தென் நா" (தேவா - பிள் - காந்தார பஞ் - ஆவடுதுறை - 9) முதலியவை காண்க. |
வெண்ணீற்றொளி விளங்கும் திருமேனி தொழுதார் - இது பிள்ளையார் இறைவரது திருமேனியை மனத்துட் கண்டு தொழுதுகொண்ட நிலை அஞ்செழுத்தோதியபோது அதனாற் குறிக்கப்படும் இறைவரது திருமேனி நிலைகள் நினைவினுள் கணிக்கப்பட்டுத் தொழவரும் என்க; உண்மை விளக்கம் (30 - 44); திருவருட்பயன் - திருமூலர் திருமந்திரம் முதலிவை பார்க்க. |
வெண்ணீற்றொளி விளங்கும் திருமேனி - "வெண்ணீற்றொளி போற்றி" (2114) என்றபடி "கதிர்ச் சிவிகை" (2516) திருவெண்ணீற்றின் ஒளியினை ஒத்தலால் திருநீற்றினை நினைவூட்ட, அந்நினைவு தானும் முறையே அவ்வொளி விளங்கும் திருமேனியை நினைவூட்டியதென்க. |
நெஞ்சில் வரும் நாமத்து - ஆர்ப்பு என்று கூட்டுக; நாமம் நெஞ்சில் வரு தலாவது எப்போதும் அதனையே நினைவுட்கொண்டிருத்தல்; "கொடிமே லிடபமும்...வடிவேல் வடிவுமென் கண்ணு ளெப்போதும் வருகின்றவே" (பொன்வண் - அந் - 20) என்ற கழறிற்றறிவார் திருவாக்கு இங்கு நினைவுகூர்தற்பாலது; மாதவர் - சுற்றியிருந்த தொண்டர் குழாம்; "மாதவர் துயிலுமித் திருமடம்" (2600) என்பது காண்க; திருத்தொண்டர்கள் எப்பொழுதும் அரனாமத்தையே நினைந்து நெஞ்சிற் கொண்டாராதலின் அந்நாமத் தொலிபெருக்கி அரகரவென்று ஆர்த்தனர் என்க; "அடியாரின்பமெய்தி...சிவம்பெருக்கு மொலிநிறைத்தா ருலக மெல்லாம்" (1448). |
அன்புருகும் கடலாமென்ன - வைய நிறைய ஆர்த்தல் கடலின் செயலாதலின் இங்கு நிகழும் அன்பின் பெருக்கில் எழும் ஒலியை அன்புருகும் கடல் என்றார். கடல் நீரினால் நிறையவேண்டுதலின் அன்புருகிய நீர்மை என்றார்; உள்ளம் உருகுதல் - அன்பின் தன்மையாதலும் காண்க; உருகுமன்புக் கடல் என்க. |