பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்767

     அன்றே - அப்பொழுதே; இம்மூன்று நிகழ்ச்சிகளும் அப்போதே ஒருகாலத்து உடன் நிகழ்ந்தன என்க. அசையென்றொ துக்குவாருமுளர்.
     வரும் நாமத்து - பல திருநாமங்களால் என்றுரைப்பாருமுண்டு.
619
வேறு
2518.பொங்கியெழுந் திருத்தொண்டர் போற்றெடுப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழைக்க மறைமுழங்க மழைமுழங்குஞ்
சங்கபட கம்பேரி தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப விருவிசும்பு கொடிதூர்ப்ப,
620
2519.மலர்மாரி பொழிந்திழிய மங்கலவாழ்த் தினிதிசைப்ப,
அலர்வாசப் புனற்குடங்க ளணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்க ணிரைத்தடியா ரெதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையா ரிடம்பலவுங் கைதொழுவார்,
621
2520.தெண்டிரைசூழ் கடற்கானற் றிருவகத்தி யான்பள்ளி
யண்டர்பிரான் கழல்வணங்கி யருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் றொழுதணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
622
     2518. (இ-ள்.) பொங்கி யெழும்...போற்றெடுப்ப - பெருகி எழுகின்ற திருத்தொண்டர்கள் துதிகளை எடுத்திசைக்கவும்; நாற்றிசையும்...மறைமுழங்க - நான்கு திசைகளிலும் மங்கலவாத்தியங்கள் ஓங்கி இசைக்கவும்; வேதங்களின் ஒலி முழங்கவும்; மழை முழங்கும்...எதிரியம்ப - மேகம்போல முழங்கும் சங்குகளும் படகங்களும் பேரி, தாரை, காளம், தாளம் எனும் இயங்களும் எதிரில் முழங்கவும்; இருவிசும்பு கொடிதூர்ப்ப - பெரிய ஆகாய வெளியைக் கொடிகள் மறைக்கவும்;
620
     2519. (இ-ள்.) மலர்மாரி...இசைப்ப - மலர்மாரியைப் பொழிந்தும் மங்கல வாழ்த்துக்களை இனிமைபெற இசைத்துக்கொண்டும்; அலர்வாச...தூபமுடன் - மலர்களைப் பெய்த வாசனையுடைய நீர்நிறை குடங்களையும் அழகிய விளக்குக்களையும் தூபங்களுடனே ஏந்தி; நிலைநீடு...நிரைத்து - நிலைகளில் நீண்ட தோரணங்களை வரிசைபெற அமைத்து; அடியார்...கைதொழுவார் - அடியார்கள் எதிர்கொள்ளச் சென்று கலையுடை அந்தி மதியினைச் சூடிய சடையாரது பதிகள் பலவற்றையும் கைதொழுவாராகி.
621
     இம்மூன்றும் பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
     தோன்றலார் - போற்றெடுப்ப...எதிர்கொள்ள - இடம்பலவும் கைதொழுவாராகி - வணங்கிப் - பாடித் - தொழுது அணைந்தார் என்று முடித்துக்கொள்க.