|
2518. (வி-ரை.) பொங்கி - திரண்டு பெருகி; விருப்பம் பெருகி என்றலுமாம். |
போற்றெடுத்தல் - துதிகளைப் பலவாறும் எடுத்து இசைத்தல். |
தழங்குதல் - மிக்க ஓசையுடன் கூடி இசைத்தல். |
மறை முழங்க - மறைகள் தாமே உரத்த சுரத்துடன் முழங்க; இனி ஓங்கி முழங்கும் பெருமை பெறுவோம் என்று முழங்க என்ற குறிப்புமாம். |
மழை முழங்கும் - மழைபோல முழங்கும்; உவமவுருபு விரிக்க; மழை - மேகக்கூட்டங்கள்; முழங்கும் - பெயரெச்சம்; முழங்கும் சங்கம் முதலியன. |
படகம் - தோற்கருவி வகைகளுள் ஒன்று; சங்கம் - படகம் - பேரி - தானம் - காளம் - தாரை - இவை இயங்களின் வகை; காளம் - எக்காளம். |
எதிர் இயம்பு தலாவது இவற்றின் பற்பல வோசைகளும் ஒன்றினெதிர் ஒன்றாகக் கூடியும் பிரிந்தும் இசைத்தல். |
விசும்பினைக் கொடிகள் தூர்ப்ப என்க; இரண்டனுருபு விரிக்க; தூர்த்தல் - மறைத்தல்; இப்பாட்டில் விரித்தவை பிள்ளையாருடன் சென்ற பரிசனங்களின் செயல்களின் சிறப்பு. |
போற்றிசைப்ப - போற்றெடுப்பார் - மங்கலதூரியந் தழங்க - என்பனவும் பாடங்கள். |
620 |
2519. (வி-ரை.) இப்பாட்டிற் கூறியவை அங்கங்கும் எதிர்கொள்ளும் அடியார் கூட்டங்களின் செயல்களின் சிறப்பு. |
மலர்மாரி பொழிந்து இழிய - எங்கும் பூமழை சிந்த; இழிதல் - மேற்பெய்த மலர்கள் கீழ் வீழ்தல்; மலராகிய மாரி என்க; மலர்களை மாரிபோல என்றலுமாம். |
இனிது மங்கல வாழ்த்து இயம்ப என்க; இனிதாகிய வாழ்த்து; முன் பாட்டில் கூறியவை வாத்திய முதலியவற்றின் மங்கல இசைப்பு; இங்குக்கூறியது தொண்டர் வாக்கினால் வாழ்த்துதல். |
குடங்கள் - விளக்கு - தூபம் இவற்றுடன் என்க; இவற்றை ஏந்தி எதிர்கொள்ள என்பதாம். |
நிலைநீடு - அங்கங்கும் நிறுத்தத்தக்க நிலைகளில் நீண்ட; நிரைத்து - வரிசை பெற அமைத்து. |
கலை - ஒரு கலையினையுடைய. மாலை மதி - அந்தியிற் றோன்றும் பிறை மதி. |
இடம் பலவும் கைதொழுவார் - திருவாலவாயினை நோக்கி எழுந்தருளுவாராயினும் வழி இடைப்பட்ட பதிகளையும் வணங்கிச் செல்லும் மறைபற்றி இடம் பலவும் தொழுவாராகித் தொழுதுகொண்டே சென்றார் அவ்வாறு வழியிடைத்தொழுத பதிகளை மேல்வரும் பாட்டுக்களிற் கூறுவார். |
கைதொழுவார் - தொழுவாராகி; முற்றெச்சம்; தொழுவார் வணங்கித் - தொழுது அணைந்தார் என மேல்வரும் பாட்டின் வினைமுற்றுடன் முடிந்தது. |
கலைமதி - மாலைமதி - என்க; கலைமதி - கலைகள் தேய்ந்து ஒற்றைக் கலையுடன் வந்து அடைக்கலம் புகுந்த பிறை; மாலைமதி - அந்தியில் புதிது தோற்றும் மதி; "குடதிசை மதியது சூடு சென்னி" (தேவா); கலைகளையுடைய மதி என்பாருமுண்டு; அது பிழை. |
621 |
2520. (வி-ரை.) தெள்திரை - தெள்ளிய அலை; இங்குக் கடல் கொந்தளித்து மிகக் கலங்குதலின்றித் தெளிந்த நீருடன் விளங்குதல் குறிப்பு. இங்கு உப்பளங்களிற் பாய்ச்சிக் கூர்மைபெறத் தெளியவைத்த நீரையுடைய என்ற குறிப்பும் |