பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்769

காண்க; "மன்றல் கமழு மலர்ப்புன்னை மணஞ்சூழ் சோலை யுப்பளத்தின், முன்றிறோறுஞ் சிறு மடவார் முத்தங் கொழிக்கும் மறைக்காடு" (1529).
     கடற்கானல் - கானல்போல அகன்ற கடற்கரை; கழிக்கானல் என்பதும் காண்க; மக்கள் குடியில்லாத தன்மையும், துர்க்கையின் (காடுகாள்) இடமாகியகாடாதலும் குறிப்பு; நம்பிகள் தேவாரம் பார்க்க.
     அரும் தமிழ் மாமறை - திருப்பதிகம்; பதிகப்பாட்டுக் குறிப்புப் பார்க்க.
     கொண்டல்பயில் மணற்கோடு சூழ் - கடிய கடற்காற்றினாற் றிரட்டப்பட்ட மணல்மேடுகள் குன்றுகள்போல உயர, அவற்றின்மேல் அங்குக் கடலினின்றும் நீர் பருகிக் கிளம்பும் மேகங்கள் பயின்று செல்வன; இங்கு மழையும் மணல் மலைகளும் இன்றும் காணவுள்ள இதன் தன்மையணிநயம் கண்டு களிக்க; "கடிதாய்க் கடற்காற்றுவந் தெற்றக் கரைமேல்" (நம்பி - தேவா).
     தொண்டருடன் தொழுது - கோடிக்குழகர் இடம் வேறு குடிகளும் தொண்டர்களும் இல்லாத குறிப்புப்பெறத் தம்முடன் வந்த தொண்டர்களோடும் தொழுது என்றார்.
     தொண்டருடன்...தோன்றலார் - இவ்வடி முற்றுமோனை; சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்கள் இதனுடன் முற்றுப்பெறும் நிலையின் குறிப்புப்போலும்; மேலே வரும் திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திருஉசாத்தானம் என்பவை பாண்டிநாடு செல்லும் வழியில் அமைந்தவை.
     தொழுது அணைந்தார் - தொழுது மேற்சென்றனர்.
     தோன்றலார் - பெருமையுடையார்; தலைவர்; சீகாழியில் வந்தவதரித்தவர் என்ற குறிப்புமாம்.
622
திருஅகத்தியான்பள்ளி
திருச்சிற்றம்பலம் பண் - காந்தாரம் - 2-ம் திருமுறை
வாடிய வெண்டலை மாலை சூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்கு மாக நிவந்தெரி
ஆடிய வெம்பெரு மான கத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட் கில்லையாம் பாவமே.
(1)
ஞானமல் குந்தமிழ் ஞான சம்பந்தன் மாமயில்
ஆலுஞ் சோலை புடைசூ ழகத்தியான் பள்ளியுட்
சூல நல்ல படையா னடிதொழு தேத்திய
மாலைவல் லாரவர் தங்கண் மேல்வினை மாயுமே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- (1) அகத்திய முனிவர்க்காக அம்மையுடன் மணவாளக்கோலம் கொண்டெழுந்தருளிய இறைவரை இங்கு வழிபடுபவர்களது வினை மாயும்.
     பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வாடிய வீந்த; கொள்ளி - வீந்தாரை இடுகாட்டுள் எரிக்கும் குறைக்கொள்ளி; அதனை இறைவர் ஆடும்போது கைவிளக்குப் போலப் பேய்க்கணங்கள் பிடித்துச் சூழ்வன; "பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார், தீயுகந்தாடல்" (பிள் - குறிஞ்சி - சிராப்பள்ளி - 7); எரிப்பதற்கேயன்றி விளக்கும் ஆக; - (2) துன்னம் - தைத்தல்; உடை - கோவணவுடை - "துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது" (திருவா - சாழல்); உன்னம் - உன்னுதல்;