பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்771

தினில் நிறைந்த பதிகள் பிறவற்றையும் மகிழ்ச்சி பொருந்திய அன்பினாலே வணங்கி; பண் ஆர்ந்த...செல்கின்றார் - அங்கங்கும் பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் துதித்துக்கொண்டே செல்கின்றாராகி,
623
     2522. (இ-ள்.) திருஉசாத்தானத்து...பாடி - திருஉசாத்தானம் என்னும் பதியினில் தேவதேவராகிய. இறைவரது திருவடிகளைப் பணிந்து, பொருந்திய செந்தமிழ்ப் பதிகத்தினை அப்பதியினில் திருமால் வழிபட்ட படியினை வைத்துப் பாடியருளி; இருவினையும்....பணிந்தணைவார் - தம்மை வந்தடையும் அடியார்களுக்கு நல்வினை தீவினை என்ற இரண்டும் பற்றுதலை அறுக்கும் பிள்ளையார் அளவில்லாத திருத்தொண்டர்களுடனே பெருகும் விருப்பத்தை உடையவராகிப் பிற பதிகளையும் பணிந்து சென்றணை வாராய்;
624
     2523. (இ-ள்.) கருங்கழி...கடந்தருளி - கரிய கழிகளையும் கடலின் பக்கத்துள்ள நெய்தனிலத்தையும் கடந்து சென்றருளி; திருந்தியசீர்...நோக்கி - திருந்திய சிறப்புக்களையுடைய காவிரி நாடாகிய சோழநாட்டின் தென்மேல்பால் திசையினை நோக்கி; மருங்குமிடை...வழிச்சென்றார் - பக்கங்களில் நெருங்கிய தூறுகொண்டு எழும் பெரிய சாலி என்னும் நெற்பயிர்களையும், எப்பக்கங்களிலும் நெருங்கிய காய்களையுடைய குலைகளைக்கொண்ட தென்னைகளையும், நெருக்கமாய் வளரும் கமுகுகளையும் சூழக்கொண்ட நிறைந்த மருத நிலத்தின் வழியே சென்றருளினர்.
625
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
     2521. (வி-ரை.) நுதலாரை அவர் மகிழ்ந்த கடிக்குளத்தில் இறைஞ்சி என்க. கடிக்குளம் - பதியின் பெயர்.
     எண்ஆர்ந்த இடும்பாவனம் ஏத்தி - "மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூஉய்" (1), "நெறிநீர்மையர் - குறிநீர்மையர்" (6); "பொருளார்தரு மறையோர்" என்ற பதிகத்துட் பிள்ளையார் அறிவுறுத்தருளிய குறிப்பு.
     மண்ஆர்ந்த பதி - மேல் உலகமும் கீழ் உலகுக்கு வந்து வழிபட்டு உய்யும்படி மண்ணுலகிற் பொருந்திய பதிகள். "புவனியிற் போய்ப் பிறவாமையில்" என்ற திருவாசக முதலியவை காண்க.
     பதிபிற - இவை இடும்பாவனத்தினின்றும் பாண்டிநாட்டினை நோக்கிச் செல்லும் வழியில், அதற்கும் திருஉசாத்தானத்துக்கும் இடையில் உள்ள தில்லை விளாகம் முதலாயின என்பது கருதப்படும்.
     பண்ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே - "பண்ணொன்ற விசைபாடும்" (தேவா) இதனைக் கடிக்குளமிறைஞ்சி - இடும்பாவனம் ஏத்தி என்பவற்றுடனும் தனித்தனி கூட்டுக.
     இடும்பாவனம் ஏத்தி - "இடும்பாவன மிதுவே" என்ற மகுடம் கொண்டு அதனுள் எழுந்தருளிய இறைவரைப் போற்றிய குறிப்பு.
     தமிழ்பாடி - பரவியே - தமிழ்பாடுதல் - திருப்பதிக மருளிச்செய்தல்; பரவியே - என்றது வேறு வகையாலும் போற்றுதல் குறித்தது.
623
     2522. (வி-ரை.) திருப்பதிகம் மால் போற்றும்பாடி பாடி - திருமால் இப்பதியினில் வந்து வழிபட்ட வரலாற்றைச் சிறப்பாக வைத்துப் பாடியருளி; இங்கு மால் என்றது இராமாவதாரத்தை; "நீரிடைத் துயின்றவன்.....தொழ" என்று பதிகத் தொடக்கத்தில் விளக்கமாய்ப் பிள்ளையார் அறிவித்தருளியதை ஆசிரியர் காட்டியபடி. மலர் போற்றும்படி என்ற பாடம் பிழை.