பக்கம் எண் :

772திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     இருவினையும் பற்றறுப்பார் - இரு வினைகளும் பற்றுதலை அறுப்பவர்; இருவினை - நல்வினை தீவினை என்ற இரண்டும்; இவை யிரண்டும் பொன்விலங்கும் இருப்பு விலங்கும்போல ஒப்பற்ற பிறவிக்கு ஏதுவாதலின் இவையிரண்டும் அறுக்கற்பாலன; "இருள்சே ரிருவினையும் சேரா" (குறள்); அடைந்தார்க்குப் பிள்ளையார் தமது பதிகங்களாகிய புணையைத் தந்தருளிப் பிறவிக்கடல்களைக் கடப்பித்தருளுவர் என்பது "அணைவுற வந்தெழும்...புணையருள்" (1991) என்றவிடத்துரைக்கப்பட்டது காண்க.
     பிறபதி - அணிமையிலுள்ளன; இவை திருக்களந்தை, திருக்களர் முதலாயின என்பது கருதப்படும்.
     பணிந்தருள்வார் - என்பதும் பாடம்.
624
     2523. (வி-ரை.) கருங்கழி - கடலுடன் தொடர்புடையன. கடல் நீர் உள்ளே பாய்ந்து பரந்துநிற்கும் கழிகள்.
     வேலைப் பாலைக்கழி - கடலின் அருகில் அமைந்த கழிகள்; வேலைப்பாலை - கடற்கானல். கழிப்பாலை என்ற பதியின் பெயர் இக்காரணத்தாற் போந்தது.
     நெய்தல் கடந்தருளி - திருவுசாத்தானத்தினின்றும் சோழநாட்டுத் தென்மேல்பாற் றிசைநோக்கிச் சென்றருளும் பிள்ளையார் சோழநாட்டின் தெற்கில் கடல்சார்ந்த இடங்களிற் பயணம் செய்யவேண்டியது நாட்டின் நிலைமையாதலின் கழிகளையுடைய கடல்சார்ந்த நிலங்களைக் கடந்து சென்றருளினர்; கழிகள் நாடும் கடலுமாக இடைப்பட்ட நிலப்பரப்புக்களில் உள்ளன.
     திருந்தியசீர்ப் புனல் நாட்டுத் தென்மேல்பாற் றிசை - திருந்தியசீர் என்றது காடும் கானலும் திருத்தி நாடாகிய சிறப்பு; இது சோழ அரசாங்கத்தார் நாடுதிருத்திச்செய்த பல செயல்களையும் குறிக்கும். காடு வெட்டித் திருத்துதல், கானல்களைச் சமன் செய்தல், கால்கள் வெட்டுதல், குடியேற்றுதல் முதலிய பல பெருஞ்செயல்களைச் சோழப் பெருமன்னர்கள் அந்நாளில் செய்தனர் என்பது கல்வெட்டுக்களாலும் நாட்டு நடப்புச் சரிதங்களாலும், நாடு - ஊர் - கால் - முதலியவற்றின் பெயர்களாலும் விளங்கும். ஆசிரியர்பெருமான் தமது அமைச்சுத் திறத்திலும் அநபாய மன்னர் காலத்தில் இத்தகைய செயல்கள் பலவும் செய்தனர். அதற்கணிமையில் முன் வந்த குலோத்துங்கச் சோழர் - கங்கை கொண்ட சோழர் - இராசராசர் முதலிய பல பேரரசர்கள் செய்த இத்தகைய அருஞ்செயல்கள் உண்மைச் சரித வாயிலாக உணரப்படுகின்றன. இவ்வாசியின் பயனாகவே இப்போது மேட்டூர் அணைத்தேக்கத்தினால் காவிரிநீர் கால்வழி கொணரப்பட்டு இப்பதியில் (பட்டுக்கோட்டைத் தாலூகா ஒரு இலட்சம் ஏகர்) பெரும் பரப்பு நிலங்கள் நஞ்சையாகத் திருந்திய சிறப்புப் பெறுகின்றன என்றால் ஆசிரியரது மெய்ம்மைத் தெய்வத் திருவாக்கின் மாண்பு நன்கு உணரக் கிடைக்கின்றது.
     மருங்குமிடை தடஞ்சாலி - மருங்குமிடைதல் - தூறாகக் கிளைத்தெழுதல்; தடஞ்சாலி - நெல்லின் வகைகளுள்ஒன்று! பெரிய செந்நெல் என்பர்; பெருநெல் என்பது வழக்கு; இந்நாட்டுப் பகுதியுள் விளைக்கும் நெல்வகைகளைப்பற்றி அரசுகள் "பெரிய செந்நெற் பிரம்புரி கெந்தசாலி திப்பியமென் றிவையகத், தரியுந்தண் கழனி யணியாரூ ரம்மானே" (சீகாமரம் - 7) என்று அருளியது காண்க.
     மாடு செறிகுலைத்தெங்கு - மாடு - மரத்தின்மேல் பல பக்கங்களினும்; செறிகுலை - நெருங்கிக் காய்த்த காய்களையுடைய குலைகள்.