பக்கம் எண் :

776திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     பதிகக் குறிப்பு :- இறைவனாரது இடம் திருவுசாத்தானமே; பதிகப் பாட்டுக்களின் மகுடம் பார்க்க.
     பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நீரிடைத் துயின்றவன் - திருமால்; இராமன்; தம்பி - இலக்குமணன்; இப்பாட்டில் இப்பதியிற் பூசித்துப் பேறுபெற்றார்களைக் கூறியருளினார், உலகர் இது கண்டு வழிபட்டுய்யும்பொருட்டு; இவர்கள் இராமன் சரிதத் தொடர்புடையோர்; இராமன் தமர்களுடன் இங்குவந்து பூசித்து மந்திரோபதேசம் கேட்டுப் பேறுபெற்றனன் என்ற தல வரலாறு காண்க; துயின்றவன் - அனுமன்; எண்ணும்மைகள் தொக்கன; - (2) கொல்லை - மருதநிலத்துக்குரிய; வலிய என்றலுமாம்; திருமறைக்காட்னின்றும் இதுவரை நெய்தற்றொடர்பு; இனித் தென்மேல் பால் சென்றால் கிடைப்பது "நிறைமருதம்" (2523); இவ்விரண்டிற்கும் இடையே இங்கு உற்றது முல்லைத் தொடர்பு என்று குறிக்க முல்லையார் புறவணி என்றார். இது நாட்டியலின் சிறப்புக் கூறியது; முதுபதி - பழம்பதி; புதிதாய்க் காடு திருத்தப்பட்டதன்று என்பது; - (3) தாமலார் போலவே - தாமே உண்ணின்று இயற்றுவித்தும் புறத்தோற்றத்தில் இவரல்லாது வீரபத்திரர் இயற்றியதாகத் தோன்ற; ஊமனார் தம்கனா ஆக்கினான் - ஊமன் கனாக்கண்டாற் சொல்ல மாட்டாததுபோலத் தக்கனும் தன் வேள்வி யழிவுபட்டுத் தானும் பட்டதைச் சொல்லமாட்டாது ஆட்டுத்தலை பெற்றனன் என்றது குறிப்பு; பேசவல்லவர்களும் கனவின் செய்தியை முற்றும் உரைக்க வல்லவரல்லர்; ஊமன் எவ்வாறுரைப்பன், அதிலும் (தமிழ் அறியாத) ஆரிய ஊமன் உரைப்பது பின்னும் குளறும்; "தக்கன் பெருமகன் ஆரிய ஊமன், கனவென ஆக்கிய கூடற் பெருமான்" (கல்லாடம்) - திரு. வ. சு. செ. குறிப்பு. ஒரு நொடி - தக்கன் வேள்வி செற்றதற்கும் காமனை எரித்தற்கும் ஆக முன்னும் பின்னும் வட்டி உரைக்கவைத்த இடைநிலைத் தீபம்; கனா ஆக்கினான் - கனாப்போல என்க; சொல்லொணாத நிலை பொதுத் தன்மை; உவமவுருபு தொக்கது; பயன்பற்றிவந்த உவமம்; சேமமா - அடைந்தார்க்குச் சேமம் ஆக; ஆக என்பது ஆ - என நின்றது; ஆக - உண்டாக; - (6) குறிதரு - யோகக்குறி; - (8) அங்கே - அப்பொழுதே - அவ்விடத்தே - அச்செயலிலே.
     குறிப்பு :- இப்பதிகத்தின் இரண்டு பாட்டுக்கள் சிதலமாயின!
     தலவிசேடம் :- திருவுசாத்தானம் - காவிரித் தென்கரை 107-வது பதி, திருக்கோயிலூர் என வழங்கும்; இராமன், இலக்குமணன், சாம்புவான், சுக்கிரீவன், அனுமான் முதலியோர் பூசித்த தலம்; பதிகம் முதற் பாட்டுப் பார்க்க; இராமன் மந்திரோபதேசம் பெற்றமையால் சுவாமி மந்திரபுரீசுவரர் எனப்பெறுவர்; தலப்பெயரும் இக்காரணத்தாற் போந்ததென்பர்; உசாவுதல் - கேட்டல்; இது மாமரங்கள் மிக்க காடாயிருந்தமையால் சூதவனம் எனப்பட்டுச் சுவாமியும் சூதவனேசுவரர் எனவும்படுவர்; இலிங்கத் திருவுருவம் வெண்ணிறமான சுயம்புமூர்த்தி; சுவாமி - மந்திரபுரீசுவரர்; அம்மை - பெரியநாயகி; பதிகம் 1. அணிமையில் திருப்பணி நிறைவேறிப் பெருஞ்சாந்தியும் செய்யப்பட்டுள்ளது.
     இது முத்துப்பேட்டை நிலயத்தினின்றும் வடக்கே மட்சாலையில் ஒரு நாழிகையளவில் உள்ளது.
 
2524.சங்கங்கள் வயலெங்குஞ் சாலிகழைக் கரும்பெங்குங்
கொங்கெங்கு நிறைகமலக் குளிர்வாசத் தடமெங்கும்