|
உழவு செய்தொழிலும், விளைபயனும், வடிகாலும் ஆகிய உழவுவகை தெரித்த கவிநலமும் காண்க. |
626 |
2525. (வி-ரை.) தடமெங்கும் - இவை நகரங்களின் அணிமையினும், உள்ளும் இருக்கும் நீர்நிலைகள்; குளிப்பதற்கும் மற்றைப் பயன்களுக்கும் உதவுவன; முன் பாட்டிற் கூறிய வாசத்தடம் - பெரு நீர்நிலைகள்; உழவுக்குதவுவனவாய் நகர்புறத்தே பணிகளின்மேல் அமைவன; "திரை வெள்வளை வாவி" (238) என்ற விடத்துரைத்தவை பார்க்க. |
தடமெங்கும் தொய்யில் நிறம் - பெண்கள் குளித்தலால் அவர்கள் உடலில் எழுதிய தொய்யிலின் நிறம் கவர்ந்து கொண்டு விளங்குவன தடங்கள்; தொய்யில் - நீர்கொடியின் ஒருவகை; இக்கொடி போன்ற கோலத்தைப் பெண்கள் முலைமேல் எழுதுவது முன்னாளில் அணிசெய்யும் வகைகளுள் ஒன்று; "ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற், றொய்யி லெழுதுகோ மற்றென்றான்" (கலி-111); இவ்வாறே கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதுவதும் வழக்கு; தொய்யிலினைச், சந்தனம் - அகில் - தேவதாரம் - குங்குமம் முதலியவை கூடிய கலவைக் குழம்பால் எழுதுவர். |
இடமெங்கும் அந்தணர்கள் ஓதுகிடை யாகநிலை - இடம் - புறநகரில் உள்ள வெற்றிடங்கள்; ஓதுகிடை - மறைபயில் மாணவர்களின் ஓதும் இடம்; வேத பள்ளிக்கூடங்கள்; அந்தணர்கள் - ஓதுவிக்கும் கிடை என்க; ஓதும் - ஓதுவிக்கும் எனப் பிறவினையாக வந்தது; கிடை - பள்ளி; போதுதொறும் மாணவர் கூடிக் கிடத்தற்கிடமாதலின் கிடை எனப்படும்; யாகநிலை - யாகங்கள் செய்யும் சாலைகள்; அந்தணர்கள் என்பதனை இதனுடனும் கூட்டுக; (1208 - 1209 பாட்டுக்களில்) சண்டீச நாயனார் புராணத்துள் இவைபற்றி உரைத்தவையும் பார்க்க. |
மடம் - சைவ மடங்கள்; தக்கவன்பர் மடங்கடொறுஞ் சைவ மேன்மை சாற்றுவன" (கழறிற் - புரா. 3) : ஓதுகிடை - அறநிலைகளையும், யாகநிலை - மழைக்குக் காரணமாதலின் பொருணிலைகளையும், புனைவதுவை என்றது இன்பநிலையையும், தொண்டர்குழாம் என்பது வீட்டுநிலையினையும் குறிப்பின் உணர்த்துவதும் காண்க. இக்கருத்தை விரித்து முன்காட்டிய கழறிற்றறிவார் புராணப் பாட்டில் கூறியதும் கருதுக. மடங்கள் துறவற நிலையினையும், மனைகள் இல்லற நிலையினையும் குறிப்பித்தலும் காண்க. |
மனை எங்கும் புனை வதுவை - "மங்கல வினைக ளெங்கும் மணஞ்செய் கம்பலைகளெங்கும்" (80) வதுவை கல்யாணம். |
நடமெங்கும் - நட ஒலி - நடம் - ஆடல் இடம்; ஒலி - அதற்கேற்ற பாடல் ஒலி. |
ஓவா - நீங்காத; ஓவா என்பதனை முன்கூறிய எல்லாவற்றுடனும் தனித்தனிக் கூட்டுக; நிறமும், கிடையும், நிலையும், குழாமும், வதுவையும், ஒலியும் ஓவாத பதிகள் என்க; நடமும் ஒலியும் நித்தியுமா கவுள்ளவற்றோடு வதுவையைச் சார்த்தி அவற்றின் பொருட்டு நடமும் ஒலியும் ஆகிய மங்கலத் துழனிகள் உள எனக் கூறிய நயமும் காண்க; ஆடல்பாடல்கள் நகர்களின் நித்திய மங்கலங்களுமாம். |