பக்கம் எண் :

780திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     ஓவா நற்பதிகள் - இவை புதுக்கோட்டைச் சீமையுனுட்பட்டு இந்நாளில் இந்தியாவினுள் வந்த பதிகள்; நன்மையாவது மேற்கூறியாங்கு உறுதிப்பொருள்கள் நான்கினையும் தருதற்கிடனாயிருத்தல்; இவ்வாறு நன்மை என்றும் ஓவாப் பதிகள் என்று ஆசி கூறியதன் பயனாக; ஆசிரியரது தெய்வத் திருவுள்ளத்தினும் மெய்த்திருவாக்கினும் பட்ட இப்பாட்டிற் கூறிய பேரறங்களின் வழிவழித் தோன்றியவைகளாய், இந்நாட்டுப் பகுதியில் செட்டிநாட்டு நகரத்து நல்வணிக மக்களின் பலவகைப்பட்ட, சைவப் பேரறச் சாலைகளும் எங்கெங்கும் இந்நாளினும்; இனியும் ஒவாது பெருக விளங்கிவருவன என்பது ஈண்டுக் கருதத்தக்கது; இப் பதிகள் அறந்தாங்கி, மிழலைநாட்டுப் பெருமிழலை முதலாயின என்பது கருதப்படும்.
627
     2526. (வி-ரை.) நீர்நாடு - என்பது சோழமன்னர்களின் நேர் அரசாட்சிக்குட்பட்ட சோழநாட்டின் பகுதி குறித்தது.
     புறவில்...நிலங்கடந்து - இவை காடும் காடுசார்ந்த இடங்களாகிய முல்லை நிலப் பகுதிகளும் குறித்தன; புறவு - முல்லைப்புறவம்; அடர்ந்த காடுகளல்லாத சிறு காடுகளையுடைய நிலம்; குறும்புதல்கள் - சிறு தூறுகள் காடாரம்பம் என்பது வழக்கு; "காரு மாலையு முல்லை"; (தொல் - பொ - அகத் - 6) என்றபடி முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது காரும், சிறுபொழுது மாலையுமாம்; முகைமுல்லைக்கடி - முல்லைப் பூ; அத்தினைக்குரிய பூ; முல்லையரும்புகள் மாலையில் விரியும் தருணத்தில் மிக்க மணம் வீசு மியல்புடைமை குறிப்பு; இத்தகைய முல்லைப்பகுதிகளுடன் இந்நிலப்பகுதி விளங்குதல் காணலாம்.
     போர்நாடும்...வைப்பு - போர்நாடும் சிலைமறவர் வைப்பு - இவை முடி மன்னர்களுக்குச் சிலகாலம் கீழ்ப்பட்டும் பலகாலம் கீழ்ப்படாமலும், தனிச் சிற்றரசுகளாய் அக்காலத்தில் தத்தம் பகுதிகளுள் அமைந்து ஆட்சி செலுத்திவந்த சிற்றரசர்களின் குறுநிலங்கள். இவர்கள் கொங்கர், மறவர், குறும்பர் என்று பலவாறும் அறியப்படுவர்; பேரரசர்களுக்குத் திரைகொடாமலும் அடங்காமலும் பகைத்தும், பற்பல காலங்களில் தொல்லை விளைத்த நிலைகள் சரிதவாயிலாக அறியப்படும்; பேரரசர்கள் தமக்குள் போர் நிகழாமல் எல்லை காவலாக இவ்வைப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதும் அந்நாள் வழக்கு; இந்நாளினும் அத்தகைய இராசதந்திர முறைகள் கையாளப்படுதல் பல நாடுகளிலும் காணலாம்; இவ்வைப்புக்களில் வாழும் மறவர் முதலிய குறுநில மன்னர்கள் பேரரசர்களுடன் போர் செய்தலும் அவர்க்குப் போர்த்துணையாதலும் உண்டு; Warlike tribes என்பர் நவீனர்.
     போர்நாடுஞ் சிலைமறவர் - போரை நாடிநிற்றல் வீரர்க்குரிய தன்மை என்பர்; "தமிழ்நாட்டெல்லையுள் தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசை இரண்டு திசையினும் பெறாத கரிகாலன், போரிலே பேராசையுடையனாதலின் வடதிசை பெருந்திசையாதலின், பகைபெறலாமென்று கருதி ஆண்டுச் சேறற்கு விரும்பி என்று, "அசைவிலூக்கத்து நசை" (சிலப் - இந்திர - 98) என்றதன் கீழ் அடியார்க்கு நல்லார் எழுதிய உரை காண்க; தமது போர்க்குத் துணையாக இவர்களைப் பிற அரசர் நாடும் என்றலுமாம்; இம்மக்கள் பலரும் இந்நாளிலும் வேந்தர்க்குற்றுழிப் போர்த்துணையாகச் செல்லும் நிலையும், இப்பகுதியில் இந்நாளிலும் இம்மறவர் பயின்று வாழ்தலும் காண்க. இவர்கள் இந்நாடுகளின் பழங்குடி மக்கள் என்பது பற்பல சரித வரலாறுகளாலறிவர். போர் இவர்களை நாடிவரும் கொடுஞ் செயல்களை