பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்781

யுடையார் என்ற குறிப்பும் காண்க. ஆசிரியர் அமைச்சியலின்கீழ் இவர்களை இன்னராக அறிந்த திறம்பற்றி இவ்வாறு கூறிக் காட்டியருளினார்; "கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகொணரச் சிந்தை களி கூர்ந்து" (புகழ் - புரா - 11 - 12), "அளந்ததிறை முறைகொணரா அரசனுள் னொருவன்" (மேற்படி 16); "அதிகனவனணித்தாக, வோங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான்" (மேற்படி - 17) என்று வரும் புகழ்சோழ நாயனார் புராண வரலாறும், சேரர் பெருமானாராகிய கழறிற்றறிவார் நாயனார் ஆளுடைய நம்பிகளை நோக்கிச் சோழ நாட்டுக்கு எழுந்தருளும்போது "கொன்னா ரயில்வேல் மறவர்பயில் கொங்கர்நாடு கடந்தருளி" (கழறிற் - புரா - 50); "குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத், துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற்சுரமும் பலகடந்து" (மேற்படி - 51) என்ற வரலாறும் ஈண்டு வைத்துக் கருதற்பாலன.
     புன்புல வைப்பு - நீர்நாடுபோலப் பரந்த நீர்பாயும் வயல்களையின்றிச் சிறுசிறு புன்செய் நிலப்பரப்புக்களைவுடைய நிலப்பகுதிகளும் சிற்றூர்களும்.
     போர் நாடும்...வைப்பு - குறிஞ்சிநிலமும் மக்களும், தொழிலும் பிறவும் கூறிய தமிழ்நயமும் காண்க.
     புன்புலை வைப்பு என்பது பாடமாயின் இங்கு வாழ்நரின் "கொல்லெறி குத்தென் றார்க்கும்" ஓசைகளின் செயல்களும் "ஆறலை துண்ணும் வேடர் அயற்புலங்கவர்ந்து" என்ற செயல்களும் குறிப்பதாகக் கொள்க.
     சீர்நாடும் - சிறப்பினை நாடிய நிலையில் உள்ள; அக்காலத்துத் தனது முன்னைச் சிறப்பினையிழந்து, இனிப் பிள்ளையாரருளாலே சீர்பெற நின்றநிலை குறிப்பு. சீர்கள் நாடியடையும் இடமாகிய என்ற குறிப்புமாம்.
     நகை முல்லை - என்பதும் பாடம்.
628
     2527. (வி-ரை.) மன்றல் மலர்ப் பிறங்கல் - பிறங்கல் குன்று; குன்றுபோலப் பெருந் திரட்சியாக என்றது பொருள்; உபசாரம்; நதிகள் தாம் வரும் குறிஞ்சி முல்லைநிலங்களினின்றும் மலர்களைக் குவியல்களாகவே அடித்து அலைத்து இரு கரைகளிலும் ஒதுக்கிச் செய்கின்றன என்பது.
     நதிகள் பல - இவை தென் வெள்ளாறும், பாம்பாறும் அதன் பல கிளைகளும், பிறவுமாம்.
     சென்று - அணைந்து - கடந்து. ஏறி - செல்லுதல் - நதிகளின் இறங்குதுறைகளை நோக்கி வழிகண்டு நடந்துசெல்லுதலும், அணைதல் - அவற்றின்கண் சேர்தலும், கடத்தல் - அவற்றை ஊடே கடந்துசெல்லுதலும், ஏறுதல் - அக்கரையில் தாண்டி ஏறிச் செல்லுதலும் குறித்தன. இந்நிலப் பகுதியில் இச்செயல் ஒவ்வொன்றும் தனித்தனி பெருமுயற்சி வேண்டப்படும் தன்மையனவாதல் குறிப்பு; பிள்ளையாரது இவ்வழிச் செலவு இத்துணை விரைவிலும் இலகுவிலும் இயன்றதென்பார் ஒவ்வோர் வினையெச்சச் சொல்லாற்றலாற் கூறி வழிகடத்திச் செல்லுவது ஆசிரியரது கவிநலன்.
     திரிமருப்பின்...கானஅதர் - திரிமருப்பின்கலை - கலை - ஆண்மான்; திரிமருப்பு - முறுக்குடையனவாய்ப் பிளவுபட்ட கொம்புகளையுடையவை கலை மான்; மான் - மானின் பெட்டை; கன்று - அவற்றின் கன்றுகள்; தெறித்தல் - துள்ளிக்குதித்தல்; உகைத்தல் - கூட்டமாகச் சரித்தல்; கலையும் மானும் கன்றும் என உம்மைத் தொகை; மான்கள் கூட்டமாகச் செல்லுமியல்பும் காண்க; இங்கு ஆண் மான்களுடன் சேரும் பெட்டை மான்கள் ஈன்ற மான் கன்றுகள் துள்ளிப் பாயும் என்றுரை