பக்கம் எண் :

782திருஞானசம்பந்தநாயனார் புராணம்

கொண்டனர் முன் உரைகாரர்; அது பொருந்தாமையறிக கானஅதர் - காட்டுவழிகள்; இங்குக் கூறியன புன்புலவைப்பு இடங்களினின்றும் செறிந்த முல்லைக்காடுகள்; அந்நாளில் புதுக்கோட்டையினின்றும் வெள்ளாறு தாண்டிச் செட்டிநாட்டுப் பகுதிகளின் வழித் திருக்கொடுங்குன்றம் செல்லும்வழி, செறிந்த காட்டுவழிகளாய்க் கிடந்தன என்பது அறியப்படும்; ஆயினும் இடையிடையே மக்கள் வாழும் ஊர்களும் இருந்தன என்ற நிலை, மான் கன்று குறித்த தன்மையாற் கருதவும்படும்.
     திருக்கொடுங்குன்றம் - இது பிரான்மலை என வழங்கும்; பல மலைகளின் இடையில் விளங்குவது; தலவிசேடம் பார்க்க. பாண்டிநாட்டிற் பிள்ளையார் வழிபட்ட முதற்பதி இதுவாம்.
629
2528.கொடுங்குன்றத் தினிதமர்ந்த கொழும்பவளச் செழுங்குன்றை
யடுங்குன்ற முரித்தானை வணங்கியருந் தமிழ்பாடி
நெடுங்குன்றும் படர்கானு நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதின்மதுரைத் தொன்னகர்வந் தணைகின்றார்.
630
     (இ-ள்.) கொடுங்குன்றத்து...பாடி - திருக்கொடுங்குன்றத்தில் இனிது விரும்பி வீற்றிருந்தருளிய கொழும்பவள மலைபோன்றவராகிய, யானையினை உரித்த இறைவரை வணங்கி அருந்தமிழ்மாலை பாடி; நெடுங்குன்றும்...கடந்து - நீண்ட குன்றுகளையும் படர்ந்த காடுகளையும் நிறைந்த நாடுகளையும் நடந்துசென்று; மதி...அணைகின்றார் - சந்திரனைத் தீண்டும்படி உயர்ந்த மலைபோன்ற மதில்களையுடைய மதுரையென்னும் பழமையாகிய நகரத்தினை வந்து அணைகின்றாராயினார்.
     (வி-ரை.) கொழும்பவளச் செழுங்குன்று - நிறம்பற்றிச் சிவபிரானைப் பவளக் குன்றாக உவமித்தார்; உவமையாகுபெயர்; "தெள்ளு பேரொளிப் பவள வெற்பென" (1644); கொழுமை - விளைவு முற்றியதன்மை; செழுமை - பெரிதாந்தன்மை.
     அடுங்குன்றம் - யானை; அடும் - கொல்லும். குன்றம் போல்வதனைக் குன்றமென்றார்.
     நெடுங்குன்றும் படர்கானும் நிறைநாடும் கடந்து நெடுங்குன்று - அழகர்மலை - சோலைமலை - சிறுமலை முதலாயின; படர்கானி - அம்மலைகளை அடுத்துப் படர்ந்த காடுகள்; நிறைநாடு - அக்காடுகளை அடுத்துள்ள மருதநிலச் செல்வ வளங்கள் நிறைந்த நாட்டின் பகுதிகள்; இதனாற் கொடுங்குன்றத்தினின்றும் மதுரைவரையில் இடைப்பட்ட நிலப்பகுதிகள் குறிஞ்சியும் முல்லையும் மருதமும் என்ற முத்திறத்தினும் பட்டன என்பது அறிவிக்கப்பட்டது. இன்றும் இவை இன்ன தன்மையவாய்ச் சிறந்து விளங்குதல் காணத்தக்கது. படர்கான் - மலையை அடுத்து நிலப்பரப்பில் நீண்டு படர்ந்த தன்மையும், நிறைநாடு - ஆற்றுவளத்தால் நெல்வயல்கள் முதலியவற்றின் செல்வங்களும் மருதநில மக்கட் கூட்டமும் நிறைந்த தன்மையும் உணர்த்தப்பட்டன.
     மதிதொடும் குன்றமதில் மதுரை - மதிதொடும் மதில் என்க; மதி தொடுதல் - சந்திர மண்டலத்தைத் தீண்டுவபோன்றுயர்தல்; பூமண்டலத்திற்கு மிக அணிமையில் உள்ளது சந்திரன் ஆதலின் மதிதொடும் என்றார்; குன்றமதில் - குன்றுபோலுயர்ந்த மதில்; எண்பெருங் குன்றங்களே மதில்போன்று சுற்றிச் சூழ்ந்த என்ற குறிப்புமாம். "பிறைசேரும் கொடுங்குன்றம்" (தேவா) என்ற குறிப்புக் காண்க. மதிச்சார்ந்த அறிவு எனக்கொண்டு; மதிதொடும் - நல்லறிவு வெளிப்படும் நிலை பெறுகின்ற குறிப்புமாம்.