பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்783

     மதுரைத் தொன்னகர் - மதுரை என்ற பெயர்ப்பொருள்பற்றி 36வது மதுரையான திருவளையாடல் (நம்பி திருவிளையாடற் புராணம்) பார்க்க.
     நிறைநாடுங் கடந்து - பிள்ளையார் சமயநல்லூர் என்று இப்போது வழங்கும் இடத்திற் றங்கி மதுரைக்கு எழுந்தருளினர் என்றும், அதனால் அது அப்பெயர் பெற்றதென்றும் ஒரு கர்ணபரம்பரை வழக்குமுண்டு; இதன் பொருத்தமும் உண்மையும் ஆராய்தற்பாலன.
     அணைகின்றார் - அணையும் செயல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு செல்லுதல் குறிக்க நிகழ்காலத்தாற் கூறினார்; இத்தொடர்ச்சி யிவ்வாறே மேல் "ஞானத் தமுதுண்டா ரணைகின்றார்" (2546) என எழுவாயுடன் சேர்த்துத் தொடர்ந்து கூறப்பட்டு மேற்சென்று வரலாற்றுமுறையில் நிறைவெய்த நிற்பது கண்டுகொள்க சொல்லும் பொருளும் ஒத்தியலும் தன்மை புலப்பட யாத்த கவித்திறமும் காண்க.
வேறு
2529.இந்நிலை யிவர்வந் தெய்த, வெண்பெருங் குன்ற மேவும்
அந்நிலை யமணர் தங்கட் கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம் பதைப்பத்தீக்கனாக்க ளோடுந்
துன்னிமித் தங்க ளங்கு நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.
631
     (இ-ள்.) இந்நிலை இவர் வந்து எய்த - இவ்விடை இவ்வாறு இவர் வந்து எய்துவாராக; எண் பெருங்குன்றம் மேவும் அந்நிலை - எண் பெருங்குன்றங்களின் மேவிய அந்நிலையில்; அமணர் தங்கட்கு...நிகழ்ந்தன - அமணர்களுக்கு வரும் அழிவை முன்னால் அறியச்செய்து பலமுறையும் காரணமின்றி அச்சங்கொண்டு மனம் பதைக்கும்படி தீக்கனாக்களுடனே அவ்விடத்துத் துன்னிமித்தங்கள் நிகழ்ந்தனவற்றை; சொல்லலுற்றாம் - இனிச் சொல்லத் தொடங்குகின்றோம்.
     (வி-ரை.) இந்நிலை - அந்நிலை - இதுவரை இங்குப் பிள்ளையாருடன் கூடிச் சென்றிருந்த வரலாற்றின் நினைவினை இனி அங்குப் பாண்டிநாட்டில் அமணர் நிலைபற்றிய வரலாற்றிற் புகச் செலுத்துதற்கு இந்நிலை என்றும், அந்நிலை அமணர் என்றும் கூறிய கவிமாண்பு காண்க அணிமையும் சேய்மையுமாகிய இகர அகரச் சுட்டுக்கள், பிள்ளையார் நமக்கு அணியராதலும் அமணர் சேயராதலும் குறித்து நிற்கும் நயமும் காண்க.
     எண் பெருங்குன்றம் - மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டுக்குன்றுகள். ஆனைமலை முதலாயின. இவை ஒவ்வொன்றிலும் சமணர் பள்ளிகளமைத்து ஆயிரம் ஆயிரம் அமண குருமார்கள் தங்கித் தங்கள் சமயம் பரப்பி வந்தனர்; "ஆனை மாமலை யாதியாய விடங்க ளிற்பல வல்லல்சேர், ஈனர்" (தேவா) இவற்றை "அஞ்சனங்கௌஞ்சங் கோவர்த் தனந்திரி கூடங் காஞ்சி, குஞ்சரஞ் சைய மேம கூடமே விந்தமென்னு, மஞ்சிவர் வரைக ளெட்டும் வைகுறு மமணர்" (திருவிளை - யானையெ 7) என்று கோவை செய்தனர் பரஞ்சோதியார்; இவை நாகமலை, பசுமலை, பன்றிமலை, யானைமலை முதலாக வழங்கப்படுவன. சிவ நெறியின் மாறுபட்ட முனிவர்களின் செயல்களால் இவை ஒவ்வோர் காலத்தில் யானை - நாகம் - பசு முதலிய உருவுடன் மதுரையை அழிக்கவர, இறைவரது திருவிளையாடல்களால் தாம் அழிவுபட்டுக் கல்லுருவுடன் மதுரையைச் சூழ்ந்து நின்றன என்பது வரலாறு. அவ்வுண்மையைப் புதுப்பிக்கப் பிற்றை நாளில் இக்குன்றங்களில் சமணர் பள்ளிகளை நிறுவிச்சி நெறிக்கு முரண்பட்டு அழிவு தேடினார்கள். ஆனால் சைவம் அழியாது தாம் அழிவு