பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்425

  மொழிந்தருள் செய்ய - சூலை தந்தருளியதே யன்றி மொழிந்தும் அருளிச் செய்தனர். எச்சவும்மை தொக்கது; இம் மொழியும் சூலை போலவே மிக்க வேதனைக்கிடமாதலும், அதனாலே நாயனார் வாள் கொண்டு குடர்கிழித்து உயிர் நீத்தலும் பின்னிகழ்ச்சிகளாதல் காண்க.
 

391

  3546. (வி-ரை) எம்பிரான் - எமது பெருமானே!; விளி முன்கூறியபடி முன்னின்று மொழிந்த இறைவரை நோக்கிக் கூறியது.
  எந்தை.....வழிவழிச் சார்ந்து வாழும் - என் தந்தையும், அவர் தந்தையும், தந்தை இன்னும் இருமரபும் பற்றிய எல்லாரும் என்க. வழிவழிச் சார்ந்து வழி வழியாகத் தொடர்பு விடாமற் சிவச்சார்பு பூண்டு. நீரே ஏகாரம் தேற்றம்; பிரி நிலையுமாம்.
  கூட்டம் - குலம் - குடும்பம்.
  வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை அதுபற்றி வாழ்ந்து வருவதனால் உலகில் சிறக்க நிகழும் வாழ்க்கை; "மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையரார்" (1915) என்றும், "மறிவளருங் கையார் பாதம், பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்" (2210) என்றும், இவ்வாறு வருவன பலவும் காண்க. இவ்வாறு எண்ணும் திரமும் தகுதியும் விளங்கப் பெருமை கொள்ளுதலே அன்பின்றிறமாய் ஒருவனைச் சிவனடிச் செலுத்தி உய்விக்க வல்லது; இவ்வெண்ணங்கள் தாமும் இந்நாள் மக்களுள் மறைந்து வருதல் வருந்தத் தக்கது.
  என்னை பெருமிதம் படக்கூடிய திறம். தம்பிரான் - தங்கட்குக் கடவுள்;
  வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே - கூட்டமெல்லாம் வழிவழிச் சார்புடன் வாழ்ந்து வரும் என்நோயினை அவ்வாறன்றி இன்று புதிதாகவும் வலிந்தும் ஆட்கொள்ளப்பட்ட ஒருவனோ வந்து தீர்ப்பவன்; தீர்ப்பது தகுதியாமா? ஆகாது, என ஓகாரவினா எதிர்மறைப் பொருள் தந்தது.
  வம்பு - எவரும் செய்யாத புதுமை; வல்வழக்கு என்ற குறிப்பும் தருவது; ஒருவனே இகழ்ச்சிக் குறிப்புப்பட நின்றது. ஏ - வினா;
  கொண்டான் - கொள்ளப்பட்டான்; செயப்பாட்டு வினை.
 

392

  3547. (வி-ரை) மற்றவன் - அருணெறி வழியடிமைத் திறத்தின் வேறாகிய அவன் - அபலவன் - என்பது குறிப்பு. தீர்க்கில் - தீர்ப்பதினும்.
  தீர்க்கில் தீராதொழிதல் நன்றால் - தீர்ப்பதனை விடத் தீராமலே எனது உயிர் ஒழிதல் நலமேயாம்; நன்றால் - உறுதிப் பொருள் தந்தது. நன்மையாவது பத்தி நெறியிற் பிழை படாதிருத்தல். மற்று அவன் தீர்த்தல் உடல் ஆசையினால் பிழைக்குடன் பட்டுச் சிவாபராதத்துக் குடன்பட்ட பாவம் சாரச் செய்யும்; ஆதலால் தீராதொழிதல் நன்று என்றார்.
  பெற்றம்......யாரே - செய்யும் பெருமை - பெருமையாவது சிறியதைப் பெரிதாக்கியும், பத்திவைராக்கியச் சார்பாகிய பெருமையினைச் சிறிதாக்கியும் அருளிச் செய்தல்; பெருமை - அதன் (உட்கிடை) உள்ளுறையினைக் குறித்தது; யாரே - ஒருவருமிலர் என, வினா இன்மை குறித்த எதிர்மறை; உமது அருட்பெருமையின் உள்ளீடு எவராலும் அறிதற்கரிது என்றபடி; பெருமை - இகழ்ச்சிக் குறிப்புடனும் நின்றது, பெருமை யில்லாதவருக்கும் பெருமையுண்டாக்குவர் என்பதும் குறிப்பு.
  உற்ற....செய்தீர் - ஏகாரங்களிரண்டும் பிரிநிலை; உற்ற வம்பென ஆண்டு கொண்டதனால் உற்ற; ஆம் உறுதி - (மேன்மை) ஆக்கம் தரும் நன்மை. ஆம் - உமக்குப் பொருந்திய என்றலுமாம்.
  கரந்தார் - கரத்தல் மறைதல்.