| அன்றே - அப்பொழுதே; கலிக்காமர் நேரே முன்பு முறையிட்டதற்கு மறுமொழி ஒன்றும் தராது என்க. மேல்விளைவு நிகழ்தற் பொருட்டுத் திரோதன சத்தியால் மறைவு செய்தபடியாம்; நம்பிகள் சங்கிலியார் திறத்து இடையாடின போது. இறைவர் செய்தவை ஈண்டுக் கருதத் தக்கன. |
| தீர்க்க - அறிவார் - என்பனவும் பாடங்கள். |
| 393 |
3548 | வன்றொண்டர் தம்பாற் சென்று வள்ளலா ரருளிச் செய்வார் "இன்றுநம் மேவ லாலே யேயர்கோ னுற்ற சூலை சென்றுநீ தீர்ப்பா யா"கென் றருள் செயச் சிந்தை யோடு நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவ லூரர். | |
| 394 |
| (இ-ள்) வன்றொண்டர்....அருளிச் செய்வார் - வன்றொண்டரிடத்து வள்ளலாராகிய இறைவர் அருளிச் செய்வாராகி; இன்று நம்....அருள் செய - இன்றைக்கு நமது அருளாணையினாலே ஏயர்கோன்பால் பொருந்திய சூலையினை "நீ சென்று தீர்ப்பாயாக!" என்று அருளிச் செய்ய; சிந்தையோடு,,,,நாவலூர் மணத்துடன் உடல் நன்கு மகிழ்ச்சியடைந்து நாவலூர் நம்பிகள் துதித்து வணங்கினார். |
| (வி-ரை) வன்றொண்டர் தம்பாற் சென்று - சென்று என்பது ஈண்டுவெளிப்பட்டு என்ற பொருளில் வந்தது. |
| நம் ஏவலாலே உற்ற சூலை நீ தீர்ப்பாயாக - நமது ஏவலாலே பொருந்திய அதனை நம் ஏவலாலே நீ போய்த் தீர்க்க. நோய்த்தீர்வு முறைகளில் எது எதனால் விளைந்ததோ அக்காரணம் பற்றியே அது தீர்க்கத் தக்கது என்பது ஒருவகை முறை. ஒப்பு முறை மருத்துவம்
(Homeopathy) என்பர். அக் குறிப்புப்பட நிற்றல் காண்க. சென்று - செல்லுதலினாலே என்ற குறிப்பும் காண்க. |
| சென்று - அவன் அழையாமல் நீயே முற்பட அவனிடம் சென்று என்க. பிழையல்லாததைப் பிழை என்று கொண்டதன் பொருட்டும், நம்பிகள் விருப்பப்படி நட்புப் புரியவும் அவர்பாற் சூலையினை ஏவியதனோடு நம்பியாற்றீரும் என்று அருளிய இறைவர், பிழை யுடன்பட்டு நட்பு வேண்டியதன் பொருட்டு நம்பிகளைக் கலிக்காமனார்பாற் செலுத்திய நிலை ஊன்றி உணரத் தக்கது. இருதிறமும் ஒப்ப நாடி அருள்புரியும் இறைவரது கருணையின் விளக்கம் காண்க. மேல் விளைவினும் கண்டுகொள்க. |
| ஆக - என்பது ஈற்றகரம் கெட்டு நின்றது. வியங்கோளின் அகரந் தொகுத்தல் விகாரம். ஆக - ஆசி புரிந்து, தீர்க்கும் சத்தி கொடுத்த அருள் மொழி. |
| நன்று சிந்தையோடு மெய்ம்மகிழ்ந்து - மகிழும் தன்மை சிந்தைக்கே யாதலின் ஒடு உருபை அதனுடன் சார்த்தி ஓதி, மெய்(உடல்)யினை அதனைச் சாரப் பின் வைத்தார். உடல் மகிழ்தலாவது சிந்தை மகிழ்ந்தமையால் உளவாகும் மெய்ப்பாடுகளாகிய மயிர் முகிழ்த்தல், பரவசமாதல், விதிர்த்தல், ஆனந்தக் கண்ணீர் பொழிதல் உடல் பூரித்தல் முதலிய அடையாளங்கள் வருதல்; நன்று - மிகவும். |
| 394 |
3549 | அண்ணலா ரருளிச் செய்து நீங்கவா ரூரர் தாமும் விண்ணவர் தம்பிரானா ரேவலால் விரைந்து செல்வார் கண்ணிய மனத்தின் மேவுங் காதலாற் கலிக்கா மர்க்குத் திண்ணிய சூலை தீர்க்க வருதிறஞ் செப்பி விட்டார். | |
| 394 |