| கேளிரேயாகி - முன்னிருந்த பகைமையும் செற்றமும் ஒழிந்து நண்பரேயாகி; இந்த மாறுதல் முன் கூறிய எல்லா நிகழ்ச்சிகளின் மூலமாக இறைவரருளால் கலிக்காமனாரது உயிர் (சூக்கும சரீரத்துள்) நுண்ணுடலினுள் தங்கிய நிலையில் உளதாயினவாறு அவ்வச் செயல்களின் றொடர்ச்சிகளுள் வைத்து உய்த்துணர்ந்து கொள்க. அருளினால் - என்பது இத்துணையும் ஒன்று சேர்த்துக் கூறியபடியாம்; கேளிர் - நண்பர்; பெரும்பான்மை நட்புமிகுதி யுடைமைபற்றி உறவினர்க்கும் வரும். |
| "கெட்டேன்" என விரைந்தெழுந்து - கெட்டேன் என்ற சொல் வாக்கினின்று எழுதலும், உடல், கிடந்த நிலையினின்று எழுதலும் ஒருங்கே விரைவின் உடனிகழ்ந்தன என்க; "தொழுதெழுவாள்" (குறள்) என்புழிப் போல. |
| கையில் வாளினைப் பிடித்துக்கொள்ள - நம்பிகள் கையிற் பற்றிய உடைவாளினை அவர் குறிக்கொண்ட செயல் செய்யாதவாறு தம் கையால் இறுகப் பிடித்துக்கொள்ள; "அரசனும் பெரியோர் செய்கை, யிருந்தவா றிறுவென் கெட்டே னென்றெதிர் கடிதிற் சென்று, பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனர் வாளுங் கையும்" (596) என்ற எறிபத்த நாயனார் புராணவரலாறும், "தங்கணிடந்தப்ப வுதவுங் கையை, ஏறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக்கொண்டு" (829) என்ற திருக்கண்ணப்பதேவர் புராண வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. |
| வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார் - தாம் வேண்டியவாறு பிழைநீங்கும் நண்பு பெற்றமையாலும், இறைவரருள் வெளிப்பட்ட இடமாதலாலும் நிலமுற வீழ்ந்து வணங்கினர்; பகை நீங்கிய எறிபத்த நாயனாரும் புகழ்ச்சோழ நாயனாரும்(முன் குறித்த அந்நிகழ்ச்சியிற்) றிருவருள் வெளிப்பாட்டின்பின் ஒருவரை யொருவர் அடிவீழ்ந்து வணங்கிய நிலை (599) யும் காண்க. மேற்பாட்டுப் பார்க்க. |
| 404 |
3559 | மற்றவர் வணங்கி வீழ, வாளினை மாற்றி யேயர் கொற்றவ னாரு நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்; அற்றைநா ணிகழ்ந்த விந்த வதிசயங் கண்டு வானோர் பொற்றட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற. | |
| 405 |
| (இ-ள்) மற்று....வீழ - இவ்வாறு நம்பிகள் வணங்கிவீழக் கண்டு; வாளினை....வீழ்ந்தார் - ஏயர் கோனாரும் வாளினை அகற்றி நம்பிகளது சத்திக்கும் கழலணிந்த திருவடிகளிற் பணிந்து வீழ்ந்தனர்; அற்றைநாள்....போற்ற - அன்று நிகழ்ந்த இந்த அதிசயத்தினைக் கண்டு தேவர்கள் இந்நிலவுலகத்தவர்கள் துதிக்கச் சிறந்த அழகிய கற்பக முதலிய மலர்களை மழைபோலப் பொழிந்தனர். |
| (வி-ரை) மற்று - முன் கூறியவாறு. அவர் - நம்பிகள், வாளினை மாற்றி - நம்பிகள் பற்றிய வாளினை ஏயர்கோனார் பிடித்துக்கொண்ட பின், நம்பிகள் அதனை விட்டு நிலமிசை வீழ்ந்து வணங்கியதனால் அந்த வாள் ஏயர்கோனார் கையில் வந்தது; அதனை மாற்றினார் என்பது; மாற்றுதல் பிடித்த நிலையினின்றும் மாற்றுதல்; வேறாக எறிந்துவிடுதல். |
| குரைகழல் - குரைத்தல் - ஒலித்தல்; கழல் - வீரக்கழல்; கழலையணிந்த திருவடிக்கு வந்தது - தாணியாகுபெயர்; ஏயர்கோனாரது பகைமையை நீக்கி வெற்றி கொண்ட |