446 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| சேர்க்கும் என்று ஒரு வாக்கு ஆகாயத்தில் எழுந்தது. அது கேட்டு நம்பிகள் தொழுது சென்று திருவாரூர் சேர்ந்தருளினர். அன்றிரவே இறைவர் ஏவலினால் சிவபூதங்கள் அந்நென்மலை முழுதும் கவர்ந்து திருவாரூர் வீதி முழுமையும் ஆளியங்கா வண்ணம் நிரப்பின. பிற்றைநாட் பகல் ஆரூர் வாழ்வார் கண்டு அதிசயித்து நம்பிகளுக்கு இறைவர் அளித்தன என்று மகிழ்ந்தனர். ஆளியங்கா வண்ணம் தெரு முழுமையும் அடைத்த நெல்லைக் கண்டு பரவையார் மகிழ்ந்து அவ்வவர் மனையெல்லை அளவு உள்ள நெல்லை அவ்வவர் எடுத்துக் கொள்க என்று பறை சாற்றச் செய்தனர். திருவாரூர் நகர் வாழ்வார் அவ்வாறே கொண்டு மகிழ்ந்தனர். நம்பிகள் இறைவரைக் கும்பிட்டெழுந்தருளியிருந்தனர். | | திருநாட்டியத் தான்குடி கோட்புலியார் வனப்பகை சிங்கடி:- | | அந்நாளில் திருநாட்டியத்தான்குடியினின்றும் கோட்புலி நாயனார் வந்து நம்பிகளைக் குறையிரந்து தமது பதியினுக்கு அழைத்துச் சென்றனர். அங்குத் தமது திருமாளிகையில் நம்பிகளை எழுந்தருளுவித்துச் சந்தனம், பூ முதலிய எல்லா உபசாரங்களையும் பூசனையினையும் முறைப்படிமிக்க விருப்பத்தோடும் செய்வித்து வணங்கினர்; பின்னர்த் தமது மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்ற இருவரையும் கொணர்ந்து நம்பிகளைப் பாதம் பணிவித்து. "அடியேனது மக்களாகிய இவர்களை அடிமையாக ஏற்றுக் கொண்டருளித் தேவரீரது திருவடிகளைத் தொழுதிருக்கும்படி கருணை செய்தருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டனர். நம்பிகள் "இவர்கள் எனக்குத் தூய மக்கள்" என்றுகொண்டு, அவர்களை மடியிலிருத்தி உட்கசிவினால் உச்சி மோந்து வேண்டுவனவும் கொடுத்து மகண்மையாகக் கொண்டருளினர். பின்பு இறைவரது திருக்கோயிலுக்குச் சென்று வணங்கிப் "பூணான்" என்று தொடங்கும் திருப்பதிகம் அருளிச்செய்து, அதன் திருக்கடைக்காப்பில் "சிங்கடியப்பன்" என்றே தம்மை வைத்துப் பாடிக் கோட்புலியாரது அருளுரிமையினையும் சிறப்பித்தருளினர். அங்கு நின்றும் திருவலிவலத்தை வணங்கிப் பாடிய திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாட்டுகந்தீர் என்று அருளிச்சென்று, திருவாரூரினை அடைந்து இறைவரை வணங்கி எழுந்தருளியிருந்தனர். | | திருப்புகலூர் செங்கல்செழும்பொன்: | | அந்நாளில் திருவாரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாள் அணுகியது. அதற்குப் பரவையார், விழாவில் அடியார்களுக்குக் குறைவறுக்கும் பொருட்டுப் பொன் கொண்டணைவதற்கு நினைந்து நம்பிகள் திருப்புகலூருக்கு எழுந்தருளி அங்கு இறைவரை வணங்கிப் பாடித் தமது கருத்தினை நிகழ்வித்துக் கும்பிட்டுப், பொன் பெறாமையால் வறிது புறம்போந்து, திருமுன்றிலின் ஒரு மருங்கு அமர்ந்திருந்தனர்; அப்போது திருவருளாலேயோ துயில் வந்தெய்த, அங்குத் திருப்பணிக்குப் பயிலும் சுடுமட்பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணிஅதன்மேல்வெண்பட்டு உத்தரியம் விரித்துப் பள்ளியமர்ந்தனர். சுற்றியிருந்த தொண்டர்களும் துயின்றனர். சிறிதளவில் நம்பிகள் பள்ளியுணர்ந்தெழுந்தனர். இறைவர் திருவருளாலே வேமண் கல்லே பொன்னாயிருந்தமை கண்டனர்; மகிழ்ந்தெழுந்து இறைவரை வணங்கித் "தம்மையே புகழ்ந்து" என்ற பதிகம் பாடித் துதித்து விடைபெற்றுப் போந்து, இடையில் திருப்பனையூர் தொழுது, திருவாரூரில் அணைந்து, பொற்கட்டிகளைத் திருமாளிகையிற் போக்கிப் புற்றிடங் கொண்டாரைத் தொழுது சென்று அமர்ந்திருந்தருளினர். அந்நாள்களில் திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் பணிந்து, அரிசிற்கரைப் புத்தூரினை அணைந்து வழிபட்டு அங்குப் |
|
|
|
|