பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்447

  புகழ்ந்துணையாருக்கு இறைவர் அருளிய திறத்தினைப் போற்றிப் பாடியருளினர்; அங்குநின்றும் பல பதிகளையும் வணங்கிச் சென்று திருவாடுதுறையினை யணைந்து கோச்செங்கணார் செய்த திருப்பணியினைச் சிறப்பித்துப்பாடி வைகினர்; பின்னர்க் காவிரித் தென்கரையில் உள்ள திருவிடைமருதும், திருநாகேச்சரமும் பணிந்து, திருக்கலயநல்லூரினை அணைந்து, மெய்ம்மைப் புராண சரிதங்கள் பலவற்றையும் போற்றித் திருப்பதிகம் அருளிச் செய்தனர். பின்பு, திருக்குடமூக்கு, திருவலஞ்சுழி, நல்லூர், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவையாறு பணிந்து, திருவாலம் பொழிலில் அணைந்து பணிந்து இரவு அங்குத் தங்கித் துயின்றருளினர். அப்போது இறைவர் அவரது கனவிலெழுந்தருளி "மழபாடியினில் வருதற்கு நினைக்க மறந்தாயோ"? என்று வினவித் தமது கோலங் காட்டியருள, உணர்ந்து, காவிரியின் வடபால் ஏறித் திருமழபாடியினை அணைந்து வணங்கிப் "பொன்னார் மேனி" என்றெடுத்த "உன்னையல்லாலினி யாரை நினைக்கேனே"என்றுபாடித் துதித்தபின் காவிரியின் இருகரையிலும் உள்ள பதிகளை வணங்கி மேல்பாற் போதுவார். திருவானைக்காவில் எழுந்தருளினர். அங்கு இறைவரைப் பணிந்து பரவி, இறைவர் உறையூர்ச் சோழனது மணியாரத்தைச் சாத்திக்கொண்டருளிய திறத்தினைச் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடி அங்குத் தங்கினர். அந்நாளில் இறைவரது பதிகள் பலவும் சென்றிறைஞ்சித் திருப்பாச்சிலாச்சிராமத்தினை அணைந்தனர்.
  திருப்பாச்சில்பொன்:
  அங்கு இறைவர் திருமுன்பு நின்று பொருட்காதல் பெருக விரும்பிப் பாவ, இறைவர் தாம் நினைந்த பொருள் தாராதொழியவே நேர் நின்று திருத்தோழமைப் பணியால் உள்ளம் புழுங்கிப் புறம் பொருபால் நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உரைப்பார் போல "எத்தனை யாருளா தொழியினும் இவரலா தில்லையே பிரானார்" என்ற கருத்துடன்" வைத்தனன் றனக்கே" என்ற திருப்பதிகம் பாடியருளினர். அவ்வளவில் இறைவனார் நிதிக்குவை யளித்தருள மகிழ்ந்து, அங்கு வைகி அம் மருங்குள்ள பதிகளையும் வணங்கிச் சிலநாள் அமர்ந்திருந்தனர். அதன் பின் திருப்பைஞ்ஞீலி, திருவீங்கோய்மலை முதலாகிய பதிகளையும் வணங்கிப் போய்க் காவிரியைக் கடந்து கொங்கு நாட்டில் திருக்கறையூர்ப் பாண்டிக்கொடு முடியை அணைந்தனர்.
  கொங்குநாடு திருப்பேரூர்:
  அங்கு இறைவரது பொன் மேனியை நோக்கி இவரை நான் மறக்கினும் எனது நா இடைவிடாது அவரது நாம் அஞ்செழுத்தினைச் சொல்லும் என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்தனர். அதன்பின் அங்குநின்றும் பல பதிகளையும் வணங்கிச் சென்று, மேல்கொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரினை ஆதரவினோடும் அடைந்தருளினர். அங்கு நித்தனார் தில்லை மன்று ணின்றாடல் நீடிய கோல நேர்காட்டக் கண்டு பேர் ஆனந்தத்துட் டிளைத்துப் பாடி மகிழ்ந்தனர். அங்கு நின்றும் அருளினாற் போய் அருவரைச் சுரங்களும் நதிகளும் பலபல கடந்து, பலபதிகளும் பணிந்து, திருவெஞ்சமாக் கூடலும் வணங்கிப் போய்த், திருக்கற்குடி மலையில் எழுந்தருளினர். அங்கு இறைவரை வணங்கிப் பதிகம் பாடிப் பலபதிகள் பணிந்து சென்று, திருவாறை மேற்றளி, திருவின்னம்பர் பணிந்து பதிகம்பாடியே திருப்புறம் பயம் சென்று வணங்கி, மேல், இறைவர் மகிழ்ந்த பல பதிகளிலும் வணங்குவாராய்த் திக்கூடலையாற்றூர் சார எழுந்தருளி அங்குச் சேராது திருமுது குன்றத்தினை நேர்நோக்கிச் செல்வாராயினர். அப்போது அவ்வழியில் இறைவர் ஒரு வேதியராகி வந்து நம்பிகளின் முன்பு நின்றனர். அவரை நோக்கித் திருமுது குன்றம் எய்த வழி எது?