|
  |  |  | 
  |  | செம்மைபுரி - செம்மை - சிவத்தன்மை; புரிதல் இடைவிடாது சொல்லுதல்; செம்மைபுரி   நா - என்றது இடைவிடாது சிவன் றிறமே சொல்லும் தன்மையிற் பழகிய நா; "நான் மறக்கினுஞ்   சொல்லுநா நமச்சிவாயவே" (தேவா) என்ற கருத்து இங்குப் பொருந்தக் காணத்தக்கது; "அண்ணலா   ரடிகண் மறக்கினு நாம வஞ்செழுத் தறியவெப் பொழுது, மெண்ணிய நாவே யின்சுவை பெருக விடையாற   தியம்பும்" (3241) என்று ஆசிரியர் விரித்தருளியமையும் காண்க. | 
  |  | இன்பமுறும் காதல் - பஞ்சாக்கரத்தினை எண்ணும்போது இன்பம் வருகின்ற காதலுடன் பயிலல்   வேண்டும் என்பதாம். "காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, யோதுவார்." (தேவா.) | 
  |  | நமச்சிவாய நற்பதமே - அஞ்செழுத்து இறைவரது திருநாமமாதலின் பதம் என்றார்; "திருநாம   மஞ்செழுத்தும் செப்பா ராகில்", "அஞ்சுபதம்" (தேவா); நன்மையாவது வீடுபேறு தரும் தன்மை.   ஏகாரம் பிரிநிலை. | 
  |  | எடுத்து ஓதி - உரிய ஒலிபெற ஓதி; மான்தம் மந்தம் உரை என்ற மூன்றனுள் உரை   - எனப்படும் நிலையில் ஓதி. வாசகம் = பாஷியம்; மந்தம் - உபாஞ்சு என்பர். | 
  |  | ஒருநாள் போல் வருநாளில் - ஒருநாள் போலவே எல்லா நாள்களினும்; வலம் வரும் நாட்களில்   எல்லா நாட்களினும் என்பது குறிப்பெச்சம்; வருதல் - வலம் வருதல். ஒழுகிவரும் என்றலுமாம்.  நாளில் - காலத்தில் என்ற பொருளில் வந்தது. | 
  |  | நாளில் எழுந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. | 
  |  | 3 | 
  |  | 3595. (வி-ரை.) குடபால் தீர்த்தக் குளம் - கமலாலயம் என வழங்கும் அழகிய தீர்த்தக்குளம்.   இது இலக்குமி தவஞ் செய்த தீர்த்தம் என்ப. | 
  |  | பாங்கு எங்கும் - கீழ்ப் பக்கம் திருக்கோயில் இருத்தலால் சுற்றுப்புறம் ஏனைய மூன்று   பக்கமும் எல்லாவிடத்தும். | 
  |  | அமணர் பாழிகளாய் - அமணர்களது மடங்களும் குகைகளும் இருக்கைகளுமாக ஆக்கப்பட்டு. | 
  |  | இடத்தாற் குறைபாடு எய்துதலால் - அஃதாவது அமணர் அங்குக் குளத்தின் பரப்பைக் குறுக்கித்   தூர்த்துத் தங்கள் பாழிகளாக்கி அமைத்துக்கொண்டமையால் குளத்தின் பரப்புக் குறுகிற்று என்பதாம்.   திருவாரூரில் கோயிலும், குளமும், ஓடையும் முறையே ஐயைந்து வேலிப் பரப்புடையன என்பர்.   சுயநலத்துக்காக இவ்வாறு பொதுவிடங்களில் இடங்களை ஆக்கிரமித்துத் தங்கள் சொந்த இருக்கை   இடங்களைப் பரப்பிக்கொள்ளுதல் முன்னை நாளினும், இந்நாளினுங் காணும் மனிதரின் கேடான இயல்புகளுள்   ஒன்று; இடம் சுருங்கிய காரணத்தாலே என்க. | 
  |  | அங்கு அந்நிலைமைதனை - அறிந்தே - அந்த இடத்திற் சென்று அந்நிலையின் உண்மையினையும்,   அதனை நீக்கும் இன்றியமையாத தகுதியினையும் அறிந்து கொண்ட பின்னரே; ஏகாரம் தேற்றம். கண்டு   என்னாது அறிந்து என்றது சரிதக் குறிப்பு. | 
  |  | ஆதரவு - மிக்க அன்பு; தண்டியடிகள் செயல், அழுக்காறு, குரோதம் முதலிய எவ்விதத் தீய   எண்ணங்களாலும் தூண்டப்பட்டதன்று என்பது. | 
  |  | பெருகக் கல்ல வேண்டும் - குளத்தின் இடப்பரப்பு முன்போலப் பெருகிய அளவில் அமைவதாக   ஆக்குதற்குக் கல்லியிடுதல் வேண்டும்; கல்லுதல் - தோண்டுதல்; குடைதல்; வெட்டுதல். | 
  |  | எழுந்தார் - முயற்சியினை மேற்கொண்டார்; முயன்ற நிலை வரும் பாட்டிற் கூறுதல் காண்க. |