பக்கம் எண் :

516திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

அங்கு அழைத்துக் கேட்க - தம்முள் மாறுபட்டு வழக்கினுட்பட்ட இருதிறத்தவரையும் அரசன் தன் முன்னே எதிர் எதிர்நிறுத்தி அவ்வவர் வாய்மொழி கேட்டு முறைசெய்யும் நீதிமுறை பற்றியது. "அரசனுஞ் செய்வ தீச னருள்வழி" (சித்தி).
அதற்கு இசைந்தார் - அதற்கு - தண்டியடிகள் கூறிய வழக்கின் நிலைக்கு; இசைந்தார்; வழக்கின் நிகழ்ச்சியின் உண்மையினை ஒப்பியதன்றி, எடுத்துக்கூறிய சூளுறவு நிலைக்கும் தமது இசைவினை அறிவித்தார். வழக்கு நிலைபெறுத்தி முடிக்கும் முறைகள் இரண்டு; (1) வழக்கு மேலிட்டணைந்த இருதிறத்தினரின் இசைவு இருக்குமாயின், அது உலகியல் நீதிக்குப் பொருந்துமாயின் அவ்வழியே முடித்தல் ஒன்று; இதனை Decision on admission என்பர் நவீனர். (2) அவ்வாறு இசைவு இல்லாத போது ஆட்சி - ஆவணம் - அயலார் காட்சி என்ற சான்று முறைகளை ஊன்றிக் கண்டு முடித்தல் மற்றொன்று. ஈண்டு அமணர்கள் வழக்கு நேர்ந்த நிகழ்ச்சியினையும் ஒப்பினார்; ஒட்டிய சூளுறவின்படி அரசன் கண்டு செய்யும் முடிவுக்கும் உட்பட உடன்பட்டனர். ஆதலின் அரசன் அவ்வாறே கண்டு முடிக்கும் நிலை காண்க. திருவாலவாயில் புனல் வாதத்தில் அமணர் ஒட்டி இசைந்தபடி முறை செய்த நிலை ஈண்டுக் கருதத்தக்கது; வழக்கு முடிக்கும் நீதிமுறை பற்றி முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்துள் உரைத்தவை பார்க்க (197 - 209 பார்க்க.)
தொண்டர் முன்போக - தாம் முறைபாடிட்டவ ராதலானும் திருவருள்பெற்ற திருத்தொண்டின் உறைப்பாகிய வீரத்தானும் தண்டியடிகள் முன் சென்றனர் என்க. தடுத்தாட்கொண்ட புராணத்திலும் வழக்குரைத்த வேதியர் தண்டூன்றி முன் சென்றமையும் ஏனையோர் அவர்பின் சென்றமையும் (195 - 196) கருதுக.
மலர்வாவி - தண்டியடிகள் மண் கல்லி எடுத்த தீர்த்தக் குளமாகிய கமலாலயம்.
மன்னன் - திருவாரூர், சோழமன்னர் அரசு புரியும் தலைநகரங்களுட் சிறந்ததாதலின் சோழ அரசர் என்பது கருதப்படும்; திருநகரச் சிறப்புக் காண்க.
முகநோக்கி - கண்காணாராதலின் முகநோக்கிக் கேட்கலாயினன்.
பெருகும் தவத்தீர் - பெருகும் - (3592) பெருமைத்தவம் என்ற முன்னைத் தவமும், திருவருளால் மேலும் பெருகவுள்ளது என்ற மேற்சரித விளைவுக்குறிப்பும் காண்க. இறைவரது திருவருளை அரசன் கனவில் உணர்ந்தானாதலின் இவ்வாறு கூறினான் என்க.
நீர் அருளாற் கண் பெறுமா காட்டும் - என்க; - ஆறு என்பது கடை குறைந்து நின்றது.
பெரியோர் - செயற்கருஞ் செயல் உலகறிய நிகழச் செய்யும் இடம் இதுவாதல் குறிக்க இப்பெயராற் கூறினார்; "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்).
பெரியோர் - என்றே - ஓதி - மூழ்கினார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

18

3610. (வி-ரை.) ஏய்ந்த - முன்பொருந்திய அடிமைத் திறத்தால் வந்தது; "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்).
என் கண் பெற்று - நான் என்ற எழுவாய் தொக்கு நின்றது.
வேந்தனெதிரே - என்றதனை ஈரிடத்தும் கூட்டுக.
திருவாரூர் விரவும் - முன்னின்றித் திருவாரூரில் புதிதாக வந்து புகுந்து உள்ள என்றது குறிப்பு. புதிதின் வந்தவராதலின் தமது தீச்செயல் காரணமாக அதனின்றும் துரத்தப்படவும் உள்ள நிலைக்குறிப்பு.

இவைபற்றி எனது சேக்கிழார் 64 - 73 பக்கங்கள் பார்க்க.