| |
| கற்பனை:-1. சிவபெருமானிடத்துச் செய்யும் வழியடிமைத் திறம் என்றும் குன்றாத இயல்பில் வரும் பற்றுடையது வேளாளர் குலம். (3619). |
| 2. இறைவரது திருநீற்றின் அடைவே மெய்ப்பொருளாவது (3620); ஏனையவை பொருளல்ல. |
| 3. அந்த மெய்ப்பொருளை அடைதற்குரிய வழிகளுள் சிறந்தது சிவனடியார்க்கு அமுதூட்டி வழிபடுதலாம். (3620) |
| 4. அடியாரை ஊட்டி மகிழும் நியமத்தினை நியதியாக மேற்கொண்ட பெரியோர் தமது உடைமை முழுதும் மாளக் கண்டாலும் விடாது, உள்ளன வற்றை விற்றும் அப்பணிசெய்து அந்நியமத்தினிற்பர் (3622). உலகியல் உடைமைகள் எவற்றினும், அப்பணியே பெரிதெனக் கொண்டு ஒழுகுவர், உறுதிப் பொருளைப்பெற வேண்டுமாயின் உலகியற் பொருள்களைப் பெரியனவாக எண்ணும் தன்னை அறவேண்டும். இளையான்குடி மாற நாயனார் புராணம், சிறுத்தொண்ட நாயனார், இயற்பகையார் முதலிய பெரியோர் சரிதங்கள் எல்லாவற்றின் உள்ளுறையும் காண்க. |
| 5. சூது என்பது ஐம்பெரும் பாதங்களுள் ஒன்று; அதுவும் பயன்படுத்தும் வகையால் நற்சூதாகும் நிலையும், அதுவே வீடு பேற்றுக்கு வழியாகும் நிலையும் உண்டு (3623-3627) |
| 6. சூது ஆடுதல் என்பதும் ஓர் கலை அறிவு; அதனைப் பயில்வதனால் கேடின்று; ஆனால் பயன் படுத்தும் வகையாற்றான் கேடுவரும். மூர்க்கநாயனார் தங்கும் வகையாற்றாம் முன்பு நற்சூது கற்றிருந்தார். ஆனால் உடைமைகளிருந்தபோது அதனைப் பயன்படுத்தவில்லை. இலம்பாடு நேர்ந்து அடியார்க்கமுது முன் ஊட்டிப் பின் உண்ணும் தம் நியதி பிழையாத வகையே அதனைப் பயன்படுத்தி, அதனால் வந்த பொருள் முற்றும் அப்பணியிற் செலுத்தினார். அதுவே வீடுபேறுக்குச் சாதனமாயிற்று. |
| 7. சிவன் பதிகளிலும் விழாக்களிலும் சூதாடுதல் மிகப்பெரும் பாவம்; அஃது அறவே விலக்கத்தக்கது. ஆனால் ஒரோ வழி அவ்வூதியத்தைச் சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படுத்தும் வகையாய் அவ்வாறு பயிலும் சூதினுக்கு அத்தொழிலுடையாரை உறுதிப் பொருள்பெறவழியாய் நிற்றலாகியதொரு பயனும் உண்டு. |
| |