பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)206

     தொண்டரை ஆக்குதல் - தீக்கை, உபதேசம், பயிற்சி, உதவி முதலிய
செயல்களினால் தொண்டர்களை உண்டாக்குதல்; அவரவர்க் கேற்ற தொழில்
செய்வித்து
- அவ்வவர் தகுதிக்கு - உடல்நிலை உள்ளநிலை பக்குவம்
முதலியவற்றுக்கு - ஏற்கும்படி தகுதியுள்ள சரியைத் தொழில்களைச் செய்யும்படி பழக்கி;
இவை - திருவலகு, திருமெழுக்கு, திருமஞ்சனம், திருமாலை, திருவிளக்கு முதலாயின.
இவைபற்றிப் புராணத்தினுள் (3925 -3926) பார்க்க; அக்கணத்துக்கு - அந்த அடியார்
கணங்களுக்கு; நாயகம் - முதன்மை; கொண்டல் கொண்டேறியமின் - மேகத்தி
னுட்கொண்டு ஆகாயத்திற் சென்ற மகள்; கண்டல் - தாழை; கோலமடல்கள் - அழகிய
நீண்ட இலைகள்; வெண்சோறு - தாழைப்பூவின் உள்ளீடாகிய பகுதி சோறு
எனப்படுவது; மின்னுக்கொடி போல்வதால் பெண் என்றும், தாழை உயர்ந்தோங்கி
வெள்ளிய உள்ளீடு உள்ள பூக்களை வெண்சோறு என்றும், அவற்றை ஏந்துதல்
மேலிருந்த மகளுக்குச் சோறு அளித்தல் என்றும் உருவகித்தார்; தாழைப் பூச்சோறு பல
பகுதிகளாயிருத்தல் சோற்றின் சிறு உருண்டைகள் போன்றிருத்தலும் காண்க.
 
     மின்னுக்கு - மின்னாகிய மகளுக்கு; கடற்காழி - கடற்கரையினையுடைய காழி;
கடற்காழிக் கணநாதன் - முதனூலாட்சி போற்றப்பட்டது; கணநாதனே - நாயகம்
பெற்றவன்
என்று கூட்டுக. காண் - கண்டுகொள்க. முன்னிலையசையுமாம்.
 
     ஊரும் பேரும் முதனூல் தொகுத்தது; அவற்றுடன் திருத்தொண்டின் பண்பும்
வரலாறும் வகைநூல் வகுத்தது; இவை விரியும்நிலை விரிநூலுட் கண்டு கொள்க.
 
3923. (இ-ள்) ஆழி...வனப்பினது - கடல் சூழ்ந்த பெரிய நிலவுலகத்தில் எல்லா
உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரது திருமுலைப்பாலமுதத்தினை
உண்டருளியதனால் வாழ்வு அளித்த திருஞானசம்பந்த நாயனார் வந்தவதரித்தருளிய
அழகிய பெருமையினை யுடையதாகிய; அளப்பில்லா...மாநகர் - அளவுபடாது ஊழியிற்
பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாது மிதந்து நின்று உலகம் மீள
உளதாதலுக்கு ஒரு முதலாகிய சீகாழிப்பதியிலே; மறையவர்...கணநாதர் - வேதியர்
குலத்தலைவராய் விளங்கியவர் கணநாதரென்பவர்.
 
     (வி-ரை) ஆழி மாநிலம் - கடல் சூழ்ந்த பெரு நிலப்பரப்பாகிய நிலவுலகம்.
 
     அகிலமு மீன்றளித்தவள் - உலகுயிர்களை யெல்லாம் பெற்றெடுத்து
வளர்க்கின்றவளாகிய உமையம்மையார்.
 
     வாழி - வாழ்வு தருபவர்; வாழ்வுடையவர்.
 
     வந்தருளிய - வருதற்கிடமாகிய; வருதல் - அவதரித்தல்; வனப்பு - அழகு;
ஈண்டு இப்பதிக்கு அழகாவது நன்மக்கட் பேறாக அந்நாயனாரைப் பெறுதல்; ''நன்கலன்
நன்மக்கட் பேறு'' (குறள்) “வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகு” (1909).
 
     வனப்பினதாகிய - மாநகர் - என்று கூட்டுக. பண்புத் தொகை.
 
     காவலர் - தலைவர்; காத்தலாவது அக்குலத்துக்குரிய மேம்பட்ட சைவவொழுக்க
நிலைகளை வழுவாமல் ஓங்கும்படி காத்து வளரச் செய்தல்.
 
     மறையவர் குலம் - நாயனார் அவதரித்த மரபு கூறியவாறு.
 
     வெள்ளத்தும் - உம்மை உயர்வு சிறப்பு. உலகினுக்கு ஒருமுதல் - என்றது
உலகம் மீள உளதாதற்கு ஆதரவாயிருத்தல்; பிரம தீர்த்தத்தினைக் “கருப்பம்போல்”
(1956) என்றதும் காண்க.