பக்கம் எண் :

பெரியபுராணம்207

3924. ஆய வன்பர்தா மணிமதிற் சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநற் றிருப்பணி யாயின நாளுமன் பொடுசெய்து
மேய வத்திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினிலவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
 
3925. நல்ல நந்தன வனப்பணி செய்பவர் நறுந்துணர் மலர்கொய்வோர்
பல்மலர்த்தெடைபுனைபவர், கொணர்திரு மஞ்சனப் பணிக்குள்ளோர்,
அல்லு நண்பக லுந்திரு வலகிட்டுத் திருமெழுக் கமைப்போர்கள்
எல்லை யில்விளக் கெரிப்பவர், திருமுறை யெழுதுவோர் வாசிப்போர்
, 3
 
3926.     இனைய பஃறிருப் பணிகளி லணைந்தவர்க் கேற்றவத் திருத்தொண்டின்
வினைவி ளங்கிட வேண்டிய குறையெலா முடித்துமே
விடச்செய்தே,
அனைய வத்திறம் புரிதலிற் றொண்டரை யாக்கியன் புறுவாய்மை
மனைய றம்புரிந், தடியவர்க் கின்புற வழிபடுந் தொழின்மிக்கார்.         4
 
     3924. (இ-ள்) ஆய அன்பர் தாம் - அவ்வாறாகிய அன்பர்; அணிமதில்....செய்து
- அழகிய மதில் சூழ்ந்த சீகாழிப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள
திருத்தோணியப்பருக்கு நல்ல திருப்பணியாயினவற்றை நாடோறும் அன்புடனே செய்து;
அத்திருத்தொண்டனில் விளங்குவார் - அத்திருத்தொண்டுபுரி நிலைமையில் சிறப்புற்று
விளங்குவாராய்; விரும்பி.....பயில்விப்பார் - விருப்புடன் வந்து அணைகின்ற
அன்பர்கட்குத் தூய்மையுடைய கைத்திருத்தொண்டாகிய சரியை நிலைகளில் அவர்களை
அவ்வத்துறைதோறும் பயிலச் செய்வாராய்,                             2
 
     3923. (இ-ள்) ஆழி...வனப்பினது - கடல் சூழ்ந்த பெரிய நிலவுலகத்தில் எல்லா
உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையம்மையாரது திருமுலைப்பாலமுதத்தினை
உண்டருளியதனால் வாழ்வு அளித்த திருஞானசம்பந்த நாயனார் வந்தவதரித்தருளிய
அழகிய பெருமையினை யுடையதாகிய; அளப்பில்லா...மாநகர் - அளவுபடாது ஊழியிற்
பெருகிய பெருங்கடல் வெள்ளத்திலும் ஆழாது மிதந்து நின்று உலகம் மீள
உளதாதலுக்கு ஒரு முதலாகிய சீகாழிப்பதியிலே; மறையவர்...கணநாதர் - வேதியர்
குலத்தலைவராய் விளங்கியவர் கணநாதரென்பவர்.
 
     3925. (இ-ள்) வெளிப்படை; நல்ல திருநந்தனவனத்தின் பணி செய்வோரும், நறிய
துணர்களில் பூத்த மலர்களைக் கொய்வோர்களும், பலவகைப்பட்ட மலர் மாலைகளைப்
புனைபவர்களும், சென்று திருமஞ்சன நீரினைக் கொணரும் பணிக்கு உள்ளவர்களும்,
இரவும் பகலுமாகத் திருவலகும் திருமெழுக்கும் அமைப்போர்களும், அளவு படாத
திருவிளக்கு எரிப்பவர்களும், திருமுறைகளை எழுதுவோர்களும், அவற்றை
வாசிப்பவர்களும்.
                                              3
 
     3926. (இ-ள்) இனைய.....பல் திருப்பணிகளில் - இவ்வாறாகிய பற்பல
திருப்பணிகளிலே; அணைந்தவர்க்கு......விளங்கிட - வேண்டி வந்து அணைந்த
அன்பர்களுக்கு அவரவர்க்கேற்ற அவ்வத் திருத்தொண்டின் செயல்கள்
விளங்கும்படியாக; வேண்டிய.....செய்தே - அவர் வேண்டிய குறைகளை யெல்லாம்
அறுத்து நிறைவாக்கி முடித்துப் பொருந்தும்படி செய்தே; அனைய.....ஆக்கி -
அவ்வாறாகிய அத்திறங்களைச் செய்தமையாலே தொண்டர்களைப் பெருகும்படி
உளராக்கி; அன்புறுவாய்மை மனையறம் புரிந்து - அன்பு பொருந்திய
வாய்மையினையுடைய இல்லறத்தினை நடத்தி வாழ்ந்து; அடியவர்க்கு.......மிக்கார் -
சிவனடியார்களுக்கு இன்பம் பொருந்தும்படி வழிபடுகின்ற தொழிலிற் சிறந்து
விளங்கினார்.
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
 
     3924. (வி-ரை) திருத்தோணி நாயனார் - தோணியப்பர்.
 
     நல்திருப்பணியாயின....செய்து - நன்மையாவது நன்மைகளெல்லாவற்றுள்ளும்
சிறந்த நன்மையாகிய வீடு பேற்றுக்குச் சாதனமாயிருத்தல். ஆயின - ஆக்கச்சொல்
தகுதியும் பிறவும் குறித்தது; அன்பொடு - அன்பு அடிப்படையாக வன்றிச் செய்யும்
பணிகள் பயனில என்பது; “ஆகுல நீர பிற” (குறள்).