பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)210

வர்களை வழிபட்டனர்; அதன் பயனால் ஆளுடைய பிள்ளையாரது திருவடி
வழிபாட்டினை யடைந்தனர்; அதன் பயனாக இறைவரது உலகினை எய்திக்
கணநாதராகித் திருத்தொண்டின் நிலைபெற்றனர் என்றிவ்வாறு காரண காரிய முறையிற்
கண்டுகொள்க.
 
     சரியை நிலையினாற் சங்கம வழிபாடும், அதனால் குருவழிபாடும், அதன்மூலம்
இறைவனை யடைதலும் வருவன என்ற ஞானநூல் உண்மைகளையும் ஈண்டு வைத்துக்
கண்டு கொள்க.
 
     சுடர் - ஞானவொளி; “பொன்னின் வெண்டிருநீறு புனைந்தென”வெள்ளிய
ஒளிவீசுதல்.
 
     மானம் - பெருமை; நன்மை - சிவச்சார்பு; பெருமை - பெருவலிமை (16).
 
     வழித்தொண்டு - முற்செய் தவத்தின்வழி முன்கூறியபடி தொடர்புண்டுவரும்
திருத்தொண்டு.
 
     நிலைபெறுதல் - மீளாத நிலையடைதல். 6
 
3929.    உலக முய்யநஞ் சுண்டவர் தொண்டினி லுறுதிமெய் யுணர்வெய்தி
அலகி றொண்டருக் கறிவளித் தவர்திற மவனியின் மிசையாக்கும்

மலர்பெ ரும்புகழ்ப் புகலியில் வருங்கண நாதனார் கழல்வாழ்த்திக்
குலவு நீற்றுவன் கூற்றுவனார்திறங் கொள்கையின்மொழிகின்றாம்.
 
     (இ-ள்) உலகமுய்ய....எய்தி - உலகுயிர்களுய்யும் பொருட்டு விடத்தினை உண்ட
சிவபெருமானது திருத்தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியாகிய மெய்யுணர்ச்சி
பொருந்தப்பெற்று; அலகில்....வாழ்த்தி - அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர்
தொண்டில் அறிவு அளித்து அவர்களது திறங்களை உலகிலே ஆக்கும் விரிந்த பெரும்
புகழினையுடைய சீகாழியில் அவதரித்த கணநாதனாருடைய திருவடிகளைத் துதித்து;
குலவு...மொழிகின்றாம் - விளங்கும் திருநீற்றுச் சார்பு பூண்ட வண்மையுடைய
கூற்றுவநாயனாரது திறத்தினைக் கொள்கையின்படி மேற்சொல்லப் புகுகின்றோம்.
 
     (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த
சரிதத்தினை வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனி, மேற்கூறப்புகும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்கின்றார்.
 
     உலகமுய்ய நஞ்சுண்டவர் - தேவர்களுய்ய நஞ்சு உண்டதனை உலகம் உய்ய
என்றார்; தேவர்களுய்தி பெற்று அவ்வவர்க்குப் பணித்த உலககாவலைச் செய்ய
நின்றாராதலின்; அன்றியும் தேவருய்ய உண்டருளிய கருணையை உலகம் திருநீல
கண்டத்தினால் விளங்க வறிந்துய்யும்படி என்ற கருத்துமாம்.
 
     தொண்டினில்....எய்தி - உறுதியாவது எஞ்ஞான்றும் பிறழ்வுறாமை;
மெய்யுணர்வு - துணிந்த முடிந்த உண்மை நினைவு; திருத்தொண்டே வீடுபேற்றுக்கு
வழியாவது என்ற உறைப்பு.
 
     அலகில்....ஆக்கும் - “தொண்டரை ஆக்கி” என்ற வழிநூற் பகுதிக்குப்
பொருள் விரிக்குமாற்றால் சரிதவரலாற்றை வடித்து முடித்துக் காட்டியபடி.
அறிவளித்தல் - அவ்வத்தொண்டின் தொழில் அறிவும், அதுஞானநெறிக்கு வழியாகும்
திறத்தைஅறியும் அறிவும் தருதல்; திறம் ஆக்கும் திறத்தினை விளங்கி
ஓங்கச்செய்யும்.
 
     குலவும் - விளக்கஞ் செய்கின்ற; விளங்குகின்ற; நீற்று வண்மை -
நீற்றிநெறியின் உறைப்பு.                                            7