பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)212


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

39. கூற்றுவ நாயனார் புராணம்
- - - - -
 

தொகை
 

“ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்”

- திருத்தொண்டத் தொகை (6)
 

வகை
 

“நாதன் றிருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப
வோதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே”

     - திருத்தொண்டர் திருவந்தாதி (47)
 

     விரி
 

3930.     துன்னார் முனைக டோள்வலியால் வென்று சூலப் படையார்தம்
நன்னா மந்தந் திருநாவி னாளு நவிலு நலமிக்கார்
பன்னா ளீச ரடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநற் றிருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.
 
     புராணம் :- கூற்றுவ நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி,
ஆசிரியர், நிறுத்த முறையானே, ஏழாவது, வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தில்,
ஆறாவது கூற்றுவ நாயனாரது புராணம் கூறத் தொடங்குகின்றார்.
 
     தொகை:- களந்தைப் பதியின் முதல்வராகிய கூர்மையுடைய வேலை ஏந்திய
கூற்றுவருக்கு அடியேனாவேன்.
 
     ஆர் - கூர்மை; ஆரெயிற் றழுந்தினர் (சிலப். 5, 124); ஆர் - அழகு
என்றலுமாம். “கோதை நெடுவேல்” என்று இதனை ஆண்டது வகைநூல். ஊரும்
பேரும் பண்பும் உரைத்தவாறு.
 
     வகை:- கோதை....கூற்றுவனே - மாலையணிந்த நெடிய வேறபடையை ஏந்திய
களந்தைப் பதியின் முதல்வராகிய கூற்றுவரே; நாதன்....பொறித்தமையால் - தமது
முடியிற் சிவபெருமான் சூட்டிய அவரது திருவடியினையே தமக்கு அரசமுடியாகச்
சூட்டிக்கொண்டு நன்மை செய்யும் சிவஞானத்தைத் தமது திருவுள்ளத்திற் பதிய
வைத்தமையால்; அது...வைத்தான் - அச்சிவஞானமே தமக்கு உற்ற துணையாகத்
தாங்கக் கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுதும் தனது ஒரு செங்கோலின்கீழ் அடங்கி
வாழச் செய்தார்.
 
     நாதன் றிருவடி - நாதனுடைய திருவடி; முடியாக இருக்கும்படி இறைவர் இவரது
முடியிற் சூட்டிய திருவடி; விரிவு புராணத்துள் “பாதமலரளிக்க”