பக்கம் எண் :

பெரியபுராணம்213

     (3935) என்னுமிடத்துக் காண்க. நல்லபோதம் - போதமாவது முக்கட் புனிதரை
அறிந்தனுபவிப்பது; இது நன்மை தருவதால் நல்லபோதம் என்றார்; பொறித்தல் -
அகலாது பதியவைத்தல்; கைகொடுத்தல் - துணையாகத் தாங்குதல்; ஓதம் - கடல்;
ஒரு கோல்
- ஒப்பற்ற தனது ஆணையாகிய செங்கோல்.
 
     ஊரும் பேரும் பண்பும் வரலாறும் வகைநூலுள் வகுக்கப்பட்டவாறு காண்க.
விரிவு விரிநூலுட் கண்டுகொள்க.
 
     3930. (இ-ள்) களந்தை முதல்வனார் - களந்தை முதல்வராகிய கூற்றுவனார்;
துன்னார்...வென்று - பகைவர்கள் எதிர்த்து நின்ற போர்களில் தமது தோளின்
வல்லமையாலே வெற்றிகொண்டு; சூலப்படையார்தம்...நலமிக்கார் - சூலப்படையினை
ஏந்திய சிவபெருமானது நல்ல திருநாமத்தினைத் தமது நாவினாலே நாடோறும்
சொல்லும் நன்மையில் மிகுந்தவர்; பன்னாள்....முயன்றார் - பலநாள்கள் இறைவரது
அடியார்களுடைய பாதங்களைப் பணிந்து துதித்து முதன்மையாகிய நல்ல
திருத்தொண்டிலே முயன்றனர்.
 
     (வி-ரை) துன்னார் - பகைவர்; துன்னுதல் - சேர்தல்; “நோனார்” - சேராதவர்;
(தொல். பொ. புற - 17). இந்நாயனார் குறுநில மன்னர் மரபு என்ப.
 
     முனைகள் - போர்களை; நலம்மிக்கார் - சிறப்பால் மேம்பட்டார்.
 
     சூலப்படையார் - சிவபெருமான்; நன்னாமம் - நன்மைதரும் சிவநாமம்;
“அரன், நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றே” (அரசு. நீலக்குடி). நன்மையாவது
வீடுபேறு.
 
     திருநாவில் - சிவனது நல்ல நாமநவிலப் பெறும் பேறுபற்றித் திருநா என்றார்.
“திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்” (அரசு - பாதிரிப்புலியூர்.).
 
     நாளும் - எப்போதும். நல்நாமம் - திருவைந்தெழுத்து; பிறவிப் பிணிக்கு
மருந்தாகலின் நல்நாமம் என்றார்; “வாயின் வைக்குமளவின் மருந்தாகி.”
 
     அடியார் பாதம் பணிந்தேத்தி - அடியார்களை வணங்கி வழிபட்டு
அமுதூட்டுதல் முதலாயின செய்து.
 
     முன்னாகிய நற்றிருத் தொண்டு - முன்னாதல் - முதன்மை பெறுதல்;
திருத்தொண்டு - அரன்பணியும் அடியார் பணியும்.
 
     முயன்றார் - முயன்று செய்தனர்; முயற்சியாவது இடைவிடாது நினைந்து
செய்தல்.
 
     களந்தை - பதியின் பெயர்; “களப்பாளன் - என்பது வகைநூல்; தலவிசேடம்
பார்க்க.
 
     முதல்வனார் - முதன்மையாவது ஆட்சிபுரியுந் தன்மை.            1
 
3931. அருளின் வலியா லரசொதுங்க வவனி யெல்லா மடிப்படுப்பார்
பொருளின் முடிவுங் காண்பரிய வகையாற் பொலிவித் திகல்சிறக்க
மருளுங் களிறு பாய்புரவி மணித்தேர் படைஞர் முதன்மாற்றார்
வெருளுங் கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார்.          2
 
     (இ-ள்) அருளின் வலியால் - சிவன் றிருவருட்டுணையின் வல்லமையாலே;
அரசு....அடிப்படுப்பார் - அரசர்களும் அஞ்சி ஒதுங்கிக் கீழ்ப்படும்படி நிலமுழுதும் தம்
ஆட்சியின் கீழே வரும்படி செய்வாராகி; பொருளின்...பொலிவித்து - பொருள்களின்
எல்லையும் காணமுடியாத வகையினாலே விளங்கச் சேர்த்து; இகல்....முதல் - போரில்
வென்றி பெறும்படியாக மருட்சி செய்யும் யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள்,
அழகிய தேர்கள், படைவீரர் என்றிவை முதலாகிய,