பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)222


சிவமயம்

சுந்தரமூர்த்தி நாயனார் துதி
- - - - -

தொகை

 
“ஆரூர னாரூரி லம்மானுக் காளே”

- திருத்தொண்டத் தொகை (6)

வகை

“கூற்றுக் கெவனோ புகறிரு வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி யாமித் தர ணியிலே”

- திருத்தொண்டர் திருவந்தாதி (48)

விரி

3938. தேனுங் குழலும் பிழைத்ததிரு மொழியாள் புலவி தீர்க்கமதி
தானும் பணியும் பகைதீர்க்குஞ் சடையார் தூது தருந்திருநாட்
கூனுங் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றே னேழு பிறப்பின் முடங்குகூன்.               9
 
     தொகை;- நம்பி ஆரூரனாகிய நான் முன்கூறிய நாயன்மாருக் காளாவதுமன்றித்
திருவாரூரில் எழுந்தருளிய இறைவருக்கும் ஆளாயிருக்கின்றேன்.
 
     அம்மானுக்கு - அம்மானுக்கும் என எச்சவும்மை விரிக்க. இத்திருப்பாட்டில்
முன்கூறிய அடியார்களுக்குத் தனிதனியே ஆளாயிருப்பதன்றி அம்மானுக்கும் என்க.
 
     வகை; - திருவாரூரன்.....இடுதரும் - நம்பியாரூரது பொன்முடிமேல் சூட்டப்
பெறும் மாலையினையும், (அவர் உண்ணும்) இனிய அடைக்காயமுதினையும், கொண்டு
கொடுக்கும்; அக்கோற்றொத்து.....பெற்றமை - அந்தக் கோல் பிடித்த (நற்பணி
செய்யப்பெற்ற) கூனனும் தனது கூன் நீங்கப்பெற்றுக் குருடனும் தனது கண்பெற்ற
செய்தியை; சாற்றி...தரணியிலே - எடுத்துக் கூறித் துதித்து (அச்சார்பு பற்றித்) திரிகின்ற
மக்கள் வாழ்கின்ற இவ்வுலகிலே; கூற்றுக்கு எவனோ புகல்? இயமனுக்கு என்ன
புகலிடம் உள்ளது? (நம்பிகளைத் துதிக்கும் எம்மிடம் எங்குமில்லை).
 
     கூற்று - இயமன்; எவனோ புகல் - புகல் - அடையும் இடம்; புகுமிடம்.
எவனோ - எங்கு எவ்விடத்து என்றலுமாம்; துதிக்கும் எம்மிடத்தில் இல்லை என்பது
குறிப்பெச்சம். திரியும் - அச்சார்பு பற்றித் திரியும் அதனால்; ஏற்றுத் தொடையல் -
ஏறச்செய்யும் தன்மையுடைய மாலை; ஏற்று - சூட்டும் நிலை; இன் அடைக்காய் -
இனிய தாம்பூல வகை; இடுதரும் - கொண்டு கொடுக்கும் காரணத்தால் என்று காரணப்
பொருளில் வந்தது; - அந்தப் பேறு பெற்ற; கோல் தொத்து - கோலைப்பிடித்து
நடக்கும்; தொத்துதல் - செல்ல உதவுதற்காகச் சார்ந்து பற்றுதல்; அகரச்சுட்டினைக்
குருடனும் என்பதுடனும் கூட்டுக; சாற்றித் திரியும் பழமொழியாம் - திரிதல் -
விளங்கப் பலரும் அறியப் பேசி விளம்பரப்படுத்தல்; பழமொழியாம் - பழமொழி
போல ஆயிற்று; பழமொழி - உலகறி பழஞ்சொல். கண்பெற்றமை - கண்பார்வை
பெற்ற செய்தி பரவையார்பால் தூது தரும் திருநாளில் இது நிகழ்ந்ததென்பது
விரிநூலுட் காணப்படும்.