பொருது அற்ற தலைக்குவியல்கள் எண்ணில போயினபின் - பொருதற்ற தலை - போரில் வெட்டப்பட்ட தலைகள்; எண்ணில போயினபின் - குவியல்கள் பலவற்றையும் அனுப்பியபின். |
நிதியின்....பற்றினர் - வென்றவர், வெல்லப்பட்ட அரசனூரில் பொருள் கவர்தல் போர் முறையாம்; ஆனால் இவை இந்நாளிற்காணும் பழிப்புடைய அநீதச் செயல்களும் அட்டூழியங்களும் அல்ல; இவை போர்முறைப்படி காத்துக்கொண்டு செய்யப்படுவன. பரி கரி இவைகளைக் கொண்டு செல்லுதல் இவை மீளவும் அப்பகையரசுக்கு ஓர்காற் பயன்படாமை கருதியும், மங்கையரைக் கொள்ளுதல் நீதிமுறையிற் காவலின் பொருட்டுமாம். “இரணத்தொழில்” என இதனை மேற் குறித்தல் காண்க. 30 |
| 3972. | அரண்முற் றியெழுந் தவமைச் சர்கடாம் இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர் முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள் தரணித் தலைவன் கழல்சார் வுறவே. 31 |
(இ-ள்) அரண்....அமைச்சர்கள்தாம் - அரணத்தினை முற்றுகையிட்டு அழித்த அமைச்சர்கள்; இரணத்தொழில் விட்டு - அப்போர்த்தொழில்களை விட்டு நீங்கி; நீள்....சார்வுறவே - பூமியின் நீள் தலைவராகிய புகழ்ச் சோழரது கழலினைச் சென்று சாரும் பொருட்டு; முரணுற்ற சிறப்பொடு எயில்சூழ் கருவூர் முன்னினர் - முரண்வென்றுகொண்ட சிறப்புடனே மதில்சூழ்ந்த கருவூர்ப்பதியினைச் சேர்ந்தனர். |
(வி-ரை) அரண்முற்றி எறிந்த - அரண் - பகைவனுடைய அரணம்; கோட்டை; முற்றி - முற்றுகையிட்டு. முற்றுதல் - உழிஞைத்திணை ஒழுக்கம்; எறிதல் அழித்தல் இரணம் - போர். |
முரண்உற்ற சிறப்பு - முரண் - பகை; முரணினரை வென்று பொருந்திய புகழ்; மேன்மை; முரண் வென்று உற்ற என்க. முரண் - வலிமை என்றலுமாம். |
தரணி நீள் தலைவன் - என்க; புகழ்ச்சோழர்; தரணி - தரிப்பது; தாங்குவது; நீள்தரணி என்றவாறே கொண்டு அழியும் இத்தரணியேயன்றி அழியாத சிவலோகத்தும் மேம்பாடு பெறும் தலைவர் என்ற குறிப்புப்பட வைத்தார் என்றலுமாம். சார்தல் - சென்று சேர்தல். |
முன்னினர் - முன் சேர்ந்தனர்; வெற்றியிற்கொண்ட பகைவரது சின்னங்கள் முதலியவற்றைப் பின்னர்ச் சேனைவீரர்கள் கொணர அமைச்சர் அரசர்பால் முன்சென்று சேர்ந்தனர். மேற்பாட்டுப் பார்க்க. |
எதிர்ந்த - என்பதும் பாடம். 31 |
| 3973. | மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய் முன்வந் தகருந் தலைமொய் குவைதான் மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன் றன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர். 32 |
(இ-ள்) மன்னும்...குவைதான் - நிலைபெற்ற கருவூர்த் திருநகரத்தின்வாய்தலில் முன்னே கொண்டுவரப்பட்ட கருந்தலைகள் தொக்க குவியலை; தானையுளோர் - |