பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்256

சேனையில் பணிசெய்வோர்; மின்னும்...கொணர்ந்தனர் - விளங்கும் ஒளியினையுடைய
பெரிய முடியினைச் சூடிய வேல் ஏந்திய சோழரது முன்னே கொண்டு வந்தனர்.
 
     (வி-ரை) மன்னும் - பழமையாகிய புகழ்நீடிய; நிலைபெற்ற.
 
     வாயிலின் வாய் முன் வந்த - இத்தலைக்குவியல்களை அரசர் கண்காணிக்கும்
வேளையிலன்றி முன்னர் நகரினுள்ளே கொண்டு போதல் அதன் சுபத்தன்மைக்கும்,
தூய்மைக்கும் பலவாற்றானும் பொருந்தாமையின் அவற்றை முன் கொண்டு
வந்தாரேனும் நகர வாய்தலில் வைத்தனர் என்பதாம். நகர்வாயில் -
அரண்மனைவாயில் என்பாருமுண்டு.
 
     வேல் - ஆயுதப்பொது; வெல்வதற்குக் கருவியாயுள்ளது என்பது பற்றி வந்த
பெயர். வளவன் - வளமுடையவன். சோழரது மரபுப் பெயராய் வழங்குவது,
ஏனையோர்க்கு இத்தகைய பொய்யாத(காவிரி) நீர்வள மின்மையால்; இங்குப்
புகழ்ச்சோழரைக் குறித்தது. வளவன்தன் - வளவனுடைய.
 
     தானையுளோர் - சேனைப்பணிவீரர்.                             32
 
3974. மண்ணுக் குயிரா மெனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றினடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.                      33
 
     (இ-ள்) மண்ணுக்கு......மன்னவனார் - மண்ணுலகத்தினுக்கு உயிரே போன்றவர்
என்று சொல்லத்தக்க அம்மன்னவனார்; எண்ணில்....யாவையினும் - எண்ணினால்
பெருகிய தலைகள் யாவையுள்ளும்; நண்ணி...ஒன்றின் நடு - சென்று கொண்டு வரும்
தலை ஒன்றின் நடுவிலே - (உச்சியிலே); கண்...கண்டனரே - எண்ணப்படுகின்றதாகிய
ஒரு சிறு சடையினைக் கண்டனர்.
 
     (வி-ரை) மண்ணுக்கு உயிராம் எனும் - “மண்ணில் வாழ்தரு மன்னுயிர்
கட்கெலாங், கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்” (99) என்றதும்,
ஆண்டுரைத்தவையும் காண்க. “நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்ன னுயிர்த்தே
மலர்தலை யுலகம்” (புறம் - 386); எண்ணில் - எண் (இலக்கம்)ணினால்; அளவினால்.
 
     நண்ணிக் கொணரும் - காணும் பொருட்டு குவியலினின்றும் எடுத்துக்
கொணரும் (3975)
 
     கண்ணுற்ற - கண்ணுதல் - நினைத்தல்; சிவனது சிறந்த அடையாளமென்று
எண்ணப்படுதல்; “சடையான்” “கபர்த்தன்” என்பன சிவனுக்கே யுரிய பெயர்கள்.
நடுக்கண் - நடுவிடத்திலே என்றலுமாம்.
 
     நடுக்கண்ணுற்றதொர் புன்சடை - நடுக்கண் - சிவனது தீக்கண்;
ஆகுபெயராய் நடுக்கண்ணினையுடைய சிவன் என்று கொண்டு அவனது
அடையாளமாய்ப் பொருந்திய என்றலுமாம். நடுக்கண் - இப்பொருளில்
சிவனையுணர்த்திப் பின் அவனது அடையாளமான என இருமடியாகுபெயர். சிவனுக்குப்
பொருந்திய சடை என்றலுமாம். புன்சடை - சிறுசடை; ஓர் - ஒன்று.         33