பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்258

     முற்றும் மாறிச் சிவாபராதம் நிகழ்ந்த பழி சூழ்ந்தமையே இவரது மனத்தை
முற்றும் இடங் கொண்ட பண்பு காணத்தக்கது; முன்னரும் தமது யானையைக்
கொன்றனர் என்று கேட்டவுடன் மிக்க சினத்துடன் போர் குறித்துச் சென்றபோது
அதுசெய்தவர் அடியவர் எனக் கேட்டுக் கண்ட அக்கணமே அந்நிலை முற்றும் மாறித்
தம்மையும் கொல்லும்படி உடைவாளினை நீட்டிப் பணிந்த பண்பும் இங்கு நினைவு
கூர்தற்பாலது.
 
     திருநீற்றின் நெறிகாக்கும் பண்பே மேலிட்டும், அரசர்திருக் காக்கும்
நிலைகீழிட்டும் இவர்பால் நிகழ்ந்த இயல்பு, அடிமைத் திறத்திற் கோளரி போன்ற
எறிபத்த நாயனாரால் “என்னே! அம்பலவாணர் தொண்ட ரறிவதற் கரியா” ரென்று
இச்செம்பியன் பெருமையுன்னிப் பாராட்டவும், “பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்
சோழர்க்கடியேன்” என்று சிவநெறிகாத்து உயிர் ஈந்து தீப்புகும் இவ்வரிய
செயல்பற்றியே திருத்தொண்டத் தொகையினுள் ஆளுடைய நம்பிகள் போற்றவும்
பெற்றது இவரது அன்பின் பெருமை! என்க.
 
     3975. (வி-ரை) குறித்து எதிர் சென்று - சடை தெரியப்பார்த்தருளி -
தலையினைக் கொணர்ந்தவன் கையில், கொணரும் தூரத்தே அதனடுவுள் ஒரு
புன்சடை கண்டனர்; இது நிருவிகற்பக் காட்சி. அஃது அவ்வாறுதானோ? என்று பெயர்
- சாதி - குணம் - சன்மம் - பொருள் என்ற பொருட்டன்மைகள் ஐந்தும் தெரிந்து
இனிது விளங்க உணரும் சவிகற்பக் காட்சி பெற்றுத் துணிவு பெறும் பொருட்டு
நினைந்து செய்த செயல்களைக் குறித்து என்றும், எதிர்சென்று என்றும், சடை
தெரியப்பார்த் தருளி
என்றும் விரித்துக் கூறினார்.
 
     கைத்தலை - இவர்க்குக் காட்டக் கையிற் கொணர்ந்த தலை. கைதொழுது - 3-ம் வேற்றுமைத் தொகை;
 
     கண்ணீர் - இரக்க மிகுதியாலும், அவலமிகுதியால் நேர்ந்த துன்பமிகுதியாலும்
வந்த கண்ணீர். புண்டரிகக் கண் - உவமைத்தொகை;                   34
 
     3976. (வி-ரை) துன்பமிகுதியில் நிகழ்ந்த மனநிலையும் சொற்சோர்வும் கூறியபடி.
இது தமக்குள்ளே எண்ணிச் சொல்லியது.
 
     முரசு - போர்முரசு; வெற்றிமுரசென்பாருமுண்டு.
 
     முனைமுருக்குதல் - மூண்டபோரினிற் பகைவரை அழித்தல்.
 
     ஒன்றுஒழிய - ஒன்று மட்டும் பெற்றேனேயன்றி,
 
     சாலஅழகிது - தம்மைத்தாமே இகழ்ந்த இகழ்ச்சிக்குறிப்பு மொழி.
 
     நெறிபுரந்து - நெறியினிற் சோர்வுபடாமற் காத்து. புரந்துயான் - புரந்தியான்
என வந்தது குற்றியலிகரம்.
 
     ஒன்றாமல் - நன்மை பொருந்தாமல்; ஒன்றுதல் - பொருந்துதல். திருநீற்று
நெறியினிற் பொருந்தாமல் அதனைப் பகைத்தோர் தன்மையுட்பட்டு; ஒன்றார் போல.
 
     அயர்வார் - முற்றெச்சம்; அயர்வார் - என்றார் என வரும் பாட்டுடன் முடிக்க.
 
     ஒன்றாமல் - என்பதும் பாடம்.                                 35
 
     3977. (வி-ரை) தார்தாங்கி - தார் - தற்காத்தலின் போர்த்துறைக்குரிய காஞ்சி
- நொச்சி முதலிய போர்மாலை. (3960 - 3969).
 
     கடன் - தம்அரசனுக்குச் செய்யவேண்டிய சோற்றுக்கடன் (3964).