| 3979. | அம்மாற்றங் கேட்டழியு மமைச்சரையு மிடரகற்றிக்` கைம்மாற்றுஞ் செயறாமே கடனாற்றுங் கருத்துடையார் செம்மார்க்கந் தலைநின்று செந்தீமுன் வளர்ப்பித்துப் பொய்ம்மாற்றுந் திருநீற்றுப் புனைகோலத் தினிற்பொலிந்தார். 38 |
(இ-ள்) அம்மாற்றம்....அகற்றி - அந்த மாற்றத்தினைக் கேட்டு மனமழிந்து நிற்கும் அமைச்சர்களையும் ஏற்றன சொல்லித் தேற்றி அவர்களது மனத்துன்பத்தினை நீக்கி; கை....கருத்துடையார் - பழியினை மாற்றும் செயலினைத் தாமே வகுத்துச் செய்யும் கருத்தினை உடையராகி; செம்மார்க்கம்...வளர்ப்பித்து - சிவனது நெறியிலே நிலைபெற்றுச் செந்தீயினை முன்னர் மூட்டி வளர்க்கச் செய்து; பொய் மாற்றும்....பொலிந்தார் - பொய்ந் நெறியினை மாற்றவல்ல திருநீற்றினைப் புனைந்த திருக்கோலத்தினிற் சிறந்து விளங்கினார். |
(வி-ரை) அம்மாற்றம் - தமது உயிர் துறந்து உலக வாழ்வினை மாற்றும் குறிப்பும், தம்மேல் நின்ற அரசாட்சியைத் தம் குமரன்பால் மாற்றும் குறிப்பு முடைய அச்சொல் என்பார் மாற்றம் என்ற சொல்லாற் கூறினார். |
அழியும் அமைச்சர் - இவர்பால் வைத்த பேரன்பினாலும், இவர் உயிர் நீக்கத் துணிந்த சிவாபராதமாகிய பழிக்குத் தாமும் ஒருவகையால் காரணர்களாய் நின்ற எண்ணத்தாலும் அமைச்சர்கள் மனமழிந்தனர் என்க. |
இடரகற்றி - ஏற்றன சொல்லி மனமழியும் துன்பத்தினைப் போக்கி. |
கைமாற்றும் செயல் தாமே கடனாற்றும் - கை - பழி, சிறுமை; மாற்றும் செயல் - தீர்வு; செயலை என இரண்டனுருபு விரிக்க; தாமே கடனாற்றும் - கடன் - கடமையாக. தாமே ஆற்றுதலாவது தம்மை நெறி நிறுத்துவோர் பிறரின்மையால், தமக்குத் தீர்வு தாமே வகுத்தலும் ஆற்றுதலும் செய்தல்; உலகில் வாழும் ஏனைய உயிர்களை நெறி நிறுத்துவோன் அரசன்; அரசனை நெறி நிறுத்துவோர் பிறரில்லை; அவன் நேரியனாயின் தனது நெறி வழுவியபோது அறிந்து தீர்வைத் தனக்குத்தானே ஆற்றிக்கொள்ளுதல் நீதி என்பது; மனுநீதிச் சோழர், பொற்கைப் பாண்டியர் பாண்டியன், நெடுஞ்செழியன் சரிதங்களும் அவ்வகைய பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன; தீர்வுகளுள் உயிர் தருதலின்மேல் ஒன்றுமில்லையாதலின் அதனையே துணிந்தார். |
செம்மார்க்கம் - செம்மை தரும் நெறி; சிவன் நெறி. |
பொய் மாற்றும் திருநீறு - பொய் என்பது ஈகண்டு நெறி வழுவியதால் வரும் எல்லாவகைத் தீமைகளையும் விளைவுகளையும் குறித்தது. பொய் - இறைவனொருவனே மெய் - சத்து - எனப் பெறுபவன்; உயிரைப்பற்றிய ஏனையவெல்லாம் பாசங்களாகிய பொய் - அசத்து - என்பர். “பாவ மறுப்பது நீறு”, “சுத்தம தாவது நீறு” என்பன முதலாக வரும் தீருநீற்றுப்பதிகம் பார்க்க. |
திருநீற்றுக் - கோலம் என்று கூட்டுக. புனைகோலம் - இக்கழுவாயின் பொருட்டுத் தீப்புகுமுன் அதற்குத் தகுதியாகும் பொருட்டு உடற்றூய்மையும் உயிர்த் தூய்மையும் தரும் திருநீற்றினைப் புனைந்து கொண்டார் என்பதாம். |
செந்தீ - தீப் பல வகையும் செய்யுமாதலின் இங்குச் செம்மை செய்யும் தீ என்பது குறிப்பு. 38 |
| 3980. | கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலனேந்திக் கொண்டுதிரு முடித்தாங்கிக் குலவுமெரி வலங்கொள்வார் |