பக்கம் எண் :

பெரியபுராணம்261

அண்டர்பிரான் றிருநாம மஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுட்புக்கார்.                39
 
     (இ-ள்) கண்ட...ஏந்திக்கொண்டு - கண்ட அந்தச் சடைத்தலையினை மணிகள்
அழுத்தியதோர் பொற்கலத்தில் ஏந்திக்கொண்டு; திருமுடித்தாங்கி...வலங்கொள்வார் -
திருமுடியிலே தாங்கி, விளங்கும் தீயினைச்சுற்றி வலம் வருவாராகி;
அண்டர்பிரான்....ஏந்தி - தேவர்கள் பெருமானாம் சிவபிரானது திருநாமமாகிய
திருவைந்தெழுத்தினையும் எடுத்து ஓதிக்கொண்டு; மண்டு...உட்புக்கார் - செறிந்து
எழுகின்ற தீப்பிழம்பினுள்ளே மகிழ்ச்சி கொண்டருளி உள்ளே புகுந்தருளினர்.
 
     (வி-ரை) கண்ட - தலையிற் சடை தெரியக்கண்ட; இவர் சிவ நெறியுடையார்
எனக்கண்ட; அதனாற், பழியினைக்கண்ட; அதனாற் றீர்வு சிவநாம மோதித் தீப்புகுதலே
என்று கண்ட என்றிவ்வாறு பலவும் கொள்க. இத்துணையும் சடையினால் விளைவன
என்பார் கண்ட சடை என்றார்.
 
     கனகமணி....முடித்தாங்கி - பொற்கலத்தேந்தி முடியிற்றாங்குதல் சிவநெறி
அடையாளமாகிய சடையின் சிறப்புக்கருதியும், தீர்வு பெறும் வழிபாடு கருதியுமாம். முடி
- முடியின்கண் - ஏழாம் வேற்றுமைத் தொகை.
 
     குலவும் எரி - விளங்கும் செந்தீ; சிவாகாரமாக விளங்கிப் பழிபோக்கிச் சிவனை
அடைவிக்கும் தன்மையுடைய தீ; செந் தீ (3979).
 
     வலங்கொள்வார் - ஓதி - என்று கூட்டுக. வலங்கொள்வார் - முற்றெச்சம்.
 
     திருநாமம் அஞ்செழுத்தும் எடுத்து ஓதி - பெருங்காரியத்தினிற் புகும்போது
சிவநாம மஞ்செழுத்தோதிப் புகுதல் மரபு. “தழைத்த வஞ்செழுத் தோதினார்” (544)
என்பது முதலிய இடங்கள் பார்க்க. அஞ்செழுத்தே திருநாமமாவது என்க. “ஆலைப்
படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மஞ்செழுத்தி னாமத் தான்காண்”, “திருநாம
மஞ்செழுத்துஞ் செப்பாராகில்” (தேவா); எடுத்து - வாய்விட்டு உரக்கச் சொல்லி.
 
     மகிழ்ந்தருளி - மகிழ்ச்சியாவது சிவாபராதமாகிய பழியினீங்கித் தூய்மை ெபெறுதலாலாவது.
 
     திருநாமத் தஞ்செழுத்து - என்பதும் பாடம்.                     39
 
3981. புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய
மிக்கபெரு மங்கலதூ ரியம்விசும்பின் முழக்கெடுப்பச்
செக்கர்நெடுஞ் சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழற்கீ ழாராமை யமர்ந்திருந்தார்.          40
 
     (இ-ள்) புக்கபொழுது...பொழிந்திழிய - முன் கூறியவாறு தழற்பிழம்பினுள் நாயனார் புகுந்தபோது தெய்வப் பூ மழை நிலமுழுதும் நிறையப் பொழிய;மிக்க....முழக்கெடுப்ப - மிகுந்த பெரிய மங்கல வாத்திய ஓசைகள் ஆகாயத்தில் முழங்க; செக்கர்....அமர்ந்திருந்தார் - அந்திச் செவ்வானம் போன்ற நீண்ட சடைமுடியினையுடைய சிவபெருமானது அந்தப் பெருங்கருணையாகிய திருவடி நீழலின்கீழே நீங்காத நிலையில் எழுந்தருளியிருந்தனர்.
 
     (வி-ரை) அலர்மாரி - மங்கல தூரியம் இவை ஆகாயத்தில் எழுதல்
சிவனருன் வெளிப்பாடுகளின்போது நிகழ்வன.