சடை முடியார் - சிவனடையாளமாகிய சடை காரணமாக இச்சரிதம் நிகழ்ந்ததாகலின் இத்தன்மை பற்றிக் கூறி முடித்தருளினார். சிலம்பு அலம்பு - மறைகளாகிய நூபுரங்கள் ஒலிக்கும். |
அக்கருணைத் திருநிழல் - திருவருளே திருவடியாக உபசரித்துக் கூறப்படுதலின் அடிநிழல் என்பார் கருணைத் திருநிழல் என்றார்; தீப்புகுந்தாராதலின் வெம்மைதாக்காது நிழல்தரப் பெற்றார் என்றது கவிநயம். |
ஆராமை - மீளாத நிலை. இன்பமாய் நீங்காத நிலை, இரண்டற என்பாருமுண்டு. சேவடி - முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு என்றபடி, தூக்கிய திருவடி. 40 |
| 3982. | முரசங்கொள் கடற்றானை மூவேந்தர் தங்களின்முன் பிரசங்கொ ணறுந்தொடையற் புகழ்ச்சோழர் பெருமையினைப் பரசுங்குற் றேவலினா லவர்பாதம் பணிந்தேத்தி நரசிங்க முனையர்திற நாமறிந்த படியுரைப்பாம். 41 |
(இ-ள்) முரசங்கொள்...முன் - வெற்றி முரசுகள் ஒலிக்கின்ற கடல்போன்ற சேனைகளையுடைய முடி மன்னர்கள் மூவருள்ளும் முதன்மையாகிய; பிரசங்கொள்....குற்றேவலினால் - தேன் பொருந்திய மணமுடைய மாலையணிந்த புகழ்ச் சோழரது பெருமையினைப் போற்றும் குற்றேவலாகிய தொண்டு செய்யும் வகையினாலே; அவர்....ஏத்தி - அவரது திருவடிகளை வணங்கித் துதித்து அத்துணை வலிமையால்; நரசிங்க முனையர்....உரைப்பாம் - நரசிங்க முனையரைய நாயனாரது அடிமைத் திறத்தினை நாம் அறிந்த வகையினாலே இனிச் சொல்வோம். |
(வி-ரை) இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, ஆசிரியர், தமது மரபுப்படி, இனிச் சொல்லப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். இது கவிக்கூற்று. |
கடல்தாளை - பரப்பு, முழக்கு முதலிய பலவாற்றானும் கடல்போன்ற சேனை. |
மூவேந்தர் - சேர சோழ பாண்டியர் என்னும் முடி மன்னர்களாகிய தமிழ்ப் பெரு மன்னர்கள்; முன் - முதன்மை பெற்ற; பிரசம் - தேன். முரசம் - வெற்றி முரசு; அம் - சாரியை. |
பெருமையினைப் பரசும் குற்றேவலினால் - துதிக்கும் சிறுதொண்டு செய்யும் வகையால்; இதுவரை கூறியது அவரது பெருமைக்குப் போதாது; அஃது அதனைப் போற்றிய அளவில் அமையும் சிறு தொண்டேயாகும் என்பது; குற்றேவல் - சிறு தொண்டு. ஏவலினால் - தொண்டு செய்ததன் மூலம். ஏவலினால் - ஏத்தி என்க. தொடை - ஆத்திமாலை. |
ஏத்தி - உரைப்பாம் - என்க; ஏத்தி அத்துணை கொண்டு என்பதாம். |
திறம் -அடிமைத்திறம். 41 |
| _ _ _ _ _ |
சரிதச் சுருக்கம்: புகழ்ச்சோழ நாயனார் புராணம்:- பொன்மலைமேற்புலிக்குறி பொறித்து அதுவரை நாடு கொண்டு ஆளும் பழ மன்னர்கள் சோழர். அவர் இனிதாளும் சோழ நாட்டின் பழைய ஊராகிய உறையூர் அதன் சிறப்புடைய தலை நகரங்களுள் ஒன்று. அந்நகரில் இருந்து அரசுபுரிந்த அடலரசர் கோமான், அநபாயரின் வழி முதலாகிய புகழ்ச் சோழர் என்பவர். |