பக்கம் எண் :

பெரியபுராணம்263

     அவர் தமது தோள் வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தம்
ஆணையின்கீழ் அடங்கி நடக்கச் செங்கோலாட்சி புரிந்தனர். சிவாலயங்களிலெல்லாம்
பூசனை விளங்கச் செய்வித்தும் அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும்
திருநீற்று நெறியினைப் பாலித்தனர்.
 
     கொங்கரும் குடபுல மன்னவர்களும் திறைகொணரத் தமது மரபின் தலைநகராகிய
கருவூரில் வந்து அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள்
கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறைகொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச்
செயலுரிமைத் தொழிலருளினர். அவ்வாறு திறைகொணரா மன்னர் உளராகில்
தெரிந்துரைப்பீர் என்று அமைச்சர்க்குக் கட்டளையிட்டனர்.
 
     கொங்கரும் குடபுல மன்னவர்களும் திறைகொணரத் தமது மரபின் தலைநகராகிய
கருவூரில் வந்து அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள்
கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறைகொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச்
செயலுரிமைத் தொழிலருளினர். அவ்வாறு திறைகொணரா மன்னர் உளராகில்
தெரிந்துரைப்பீர் என்று அமைச்சர்க்குக் கட்டளையிட்டனர்.

 

     இந்நாள்களில், அளந்த திறைகொணராது முரண்பட்ட அதிகன் என்பவன்
அணித்தாகிய மலையரணத்துள்ளான் என்று அமைச்சர் அரசர்க்கு அறிவித்தனர். படை
எழுந்து அவ்வரணினை அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளையிட்டனர்.
அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ் வலிய அரணை முற்றுகையிட்டு
அழித்து அதிகனது சேனையினையும் வென்றனர். அதிகன் தப்பிக் கானகத்துள்
ஓடிவிட்டான். அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்றும் யானை, குதிரை
முதலியவற்றையும், போர்ச்சின்னமாகப், பொருதற்ற தலைக்குவியல்களையும் அரசன்
 முன் கொண்டுவந்தனர்.
 
     அவ்வாறு கொணர்ந்த தலைக்குவியலுள், அரசர், ஒருதலையிற் புன்சடை
கண்டனர்; கண்டு நடுங்கிக் கண்ணீர் வார்ந்து தாம் திருநீற்று நெறி புரந்து அரசளித்தது
சால அழகிது! என்று தம்மையே இகழ்ந்து கொண்டனர்; தமது குமரனைத் தொண்டின்
வழி நிற்ப வென்றி முடிசூட்டும்படி அமைச்சர்க்குக் கட்டளையிட்டருளினர்; தமக்கு
நேர்ந்த சிவாபராதமாகிய பழிக்குத் தீர்வு தாமே வகுப்பாராகிச் செந்தீமுன்
வளர்ப்பித்தனர்; பொய்ம்மாற்றும் தீருநீற்றுக் கோலம் புனைந்தனர்; அச்சடைத்
தலையினைப் பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக் கொண்டு, எரியை வலங்கொள்வார்
திருவைத்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட் புகுந்தருளி இறைவரது
கருணைத் திருவடிநிழற்கீழ் நீங்காது அமர்ந்திருந்தனர்.
 

________

     கற்பனை: 1. ஓர் அரசனது மரபின் மேன்மை அவனது மரபின் முன்னோர்களால்
விளங்குவதன்றியும், அவன்வழித் தோன்றல்களாய்ப் பின்வரும் அரசர்
மேன்மையினாலும் அறியப்படும் (3949).
 
     2. மன்னனது அரசாட்சியின் உயர்வானது மன்பதைகளின் உட லுடைமைகளைக்
காத்தளித்தலால்மட்டுமேயன்றி அவர்களது உயிர்க்குறுதி பயக்கும் செயல்களாலுமாம்.
 
     3. உயிர்க்குறுதி பயத்தல், சிவாலயப் பூசை, சிவனடியார் பூசை
என்பனவற்றாலாவது.