| கோலம் மேனி எங்கும் விளங்கும்படி யிருந்த நிலையினைக் கண்டு; அவற்கு...பொன் இட்டு - அன்று அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து; அவனி...திறமே - உலகில் விளக்கும் மகுடம் தரித்த நரசிங்க முனையரையரது திறத்தினையே; புகழும்படி எம்பரமே? - புகழும் தன்மையானது எமது அளவில் அடங்குமோ? (அடங்காது); திறமே - புகழும்படி என்று கூட்டுக. பூட்டுவிற் பொருள்கோள்; பரம் - பாரம் என்பது பரம்என நின்றது; ஏ எதிர்மறை; பாரம் - வல்லமை - தகுதி; தவர் - சிவனடியார்; தவமாவது அடியார் திருவேடம் தாங்குதலும் திருத்தொண்டுமாம்; பொன்னிடுவோன் - ஆதிரை நாடோறும் அடியாரைப் பூசித்து நூறு பொன்தரும் நியமமுடையோன் (3986); இடுதல் - தருதல்; இகழும்படி - கண்டோர் இகழும்படியாக; மடவார்....நிகழும்படி - மடவார் புனைகோலமாவன நகக்குறி, நோய் முதலியன என்பர். “நிகழ்காமக் குறிமலர்ந்த, ஊனநிகழ்மேனி” (3987) என்பது விரிநூல். மீக்கூர்ந்த பொருந்தாக் காமத்தால் விளையும் கேடுகளின் ஊனங்களாகிய அடையாளங்கள் என்பது குறிப்புப் போலும்; படி கண்டு - படியினைக் கண்டு; இரட்டிபொன் - நியமமாகத்தரும் நூறு பொன்னினை இரட்டித்து இருநூறாக்கிய பொன். அவனிதிகழ்தலாவது உலகில் அடிமைப்பண்பின் உண்மைத்திறம் விளங்குதல். திறம் - உயர்ந்த பண்பு; உறைப்பு. பேரும் அடிமைப் பண்பும் வரலாறும் வகைநூல் வகுத்துரைத்தது. இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டு கொள்க. |
| விரி: 3983. (இ-ள்) கோடாத......அரசளித்து - செங்கோல் நீதி பிறழாத நெறியில் விளங்கும் குறுநிலமன்னர் மரபில் வந்து அரசு செய்து; மாடாக....மனங்கொள்வார் - பெருஞ் செல்வமாகத் திருநீலகண்டருடைய திருநீற்றினையே மனத்திற் கொள்பவர்; தேடாத...காவலனார் - தேடிப்பெற வேண்டாது இயல்பிலே பெருவளங்களிற் சிறந்த திருமுனைப்பாடி நாட்டினை ஆளும் அரசர்; நரசிங்கமுனையரையர் - நரசிங்கமுனையரைய ரென்னும் பெயருடையவர். |
| (வி-ரை) கோடாதநெறி - செங்கோல் நீதிநெறி பிறழாத நிலை. |
| முடிமரபு - பேரரசாகிய முடிமன்னரின் கீழிருந்து அரசுபுரியும் குறுநிலமன்னர் மரபு; முடிசூடுமுரிமையில்லாதோர். |
மாடு - பெருஞ்செல்வம்; திருநீறே - ஏகாரம் பிரிநிலை; திருநீறே செல்வமாவது; ஏனையவை செல்வமல்ல என்பது; மனங்கொள்ளுதல் - துணிதல், உறுதி கொள்ளுதல்; திருநீற்றின் முன் ஏனையவற்றைப் பொருளாக வைத்தெண்ணாத நிலையின் வரும் இவர் சரித வரலாறு குறிக்க. |
தேடாத பெருவளத்தில்...நாடு - தேடாத - நாடியடைய வேண்டாத; பெருவளம் - தன் இயல்பில் நாடுதரும் வளங்கள். “ஏர் இனப்பண்ணை...எவ்வுலகும், வனப்பெண்ண வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும்” (1268) என்பதாதியாக இந்நாட்டு இயற்கை வளங்களை முன்னர் உரைத்தாராதலிற் தேடாத பெருவளம் என்ற மட்டில் இங்குக் கூறியமைந்தார். “நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல, நாட வளந்தரு நாடு” (குறள்) என்ற கருத்தினை இங்கு வைத்துக் காண்க. எமது மாதவச் சிவஞான முனிவர் “நாடிய பொருள் கைகூடும்” என்ற கம்பனிராமாயண முதற் செய்யுட் பகுதிக்கு ஆசங்கை யுரைத்த வழி இக்கருத்தினை எடுத்தாண்டமை காண்க. பிறநாடுகளிற் றேடி யடைதற்கரிய வளமுமாம். |
நாடாளுங் காவலனார் - இந்நரசிங்க முனையரையர் ஆளுடையர் நம்பிகள் காலத்திருந்தவர் என்பதும், நம்பிகளைத் தமது அன்பு மகனாராக எடுத்து வளர்த்தவர் என்பதும் கருதப்படும்; அதனைக் குறிக்க நாடாளும் என்றார்; அரையர் - அரசர். |