பக்கம் எண் :

பெரியபுராணம்273

     தடநாகம் - பெரிய யானை; தனம் - பல்வகைச் செல்வங்கள்; கலம் - மரக்கலம்
- கப்பல்; சேரும் - துறைமுகத்துச் சேர்தற்கிடமாகிய. இக்கருத்தை மேல் (3994)
விரித்தல் காண்க.
 

     கடனாகை - கடற்கரையில் உள்ள நாகப்பட்டினம். முதனூலில் இச்சிறப்புப்
பற்றிப் போற்றுதல் குறிப்பு:
     கடனாகை - ஆகை - ஆகுதல்; தொழிற்பெயர்.
 

     கடனாகைக் கடன் - கடனாகச் செய்யும் திருத்தொண்டாகும் செய்கையின்
அழகு; தொண்டின் அழகாவது தொண்டு செய்தலிற் சலியாத மன இன்ப மாண்பு.
கடன் - தொண்டினெறியினைக் கடமையாக மேற்கொள்ளுதல்.
 

     இப்பாட்டுக் கவிக்கூற்று; இதனால் ஆசிரியர் தம் நியதியின்படி இதுவரை
கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி மேல்வருஞ் சரிதத்துக்குத் தோற்றுவாய்
செய்கின்றார்.                                                     9
 
     சரிதச்சுருக்கம் :- நரசிங்கமுனையரைய நாயனார்: தேடாத பெருவளத்திற்
சிறந்தது திருமுனைப்பாடி நாடு என்பது. இந்நாட்டினை அரசுபுரிகின்ற
முனையரையர் என்னும் குறுநிலமன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர்.
அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே
அரும்பேறென அடைவாராயினர்; சிவன் கோயிலின் சிவச்செல்வங்களைப் பெருக்கிக்
காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர்; சிவநெறித் திருத்தொண்டுகளைக்
கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்துவந்தார்.
 
     திருவாதிரை நாடொறும் சிவபெருமானுக்கு
ியமமாக விசேடபூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும்
நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுதும் அளித்து வழிபட்டுவந்தார். ஒரு
திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மானநிலை யழிதன்மை வரும் காமக்குறி
மலர்ந்த ஊனநிகழ் மேனியராகி”ய ஒருவரும் திருநீறணிந்து போந்தனர். அவர்
நிலையினைக்கண்டு மருங்கிருந்தார் இகழ்ந்து எண்ணி ஒதுங்கினர்.
 
     நரசிங்கர் அது கண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினர். திருநீறு
சார்ந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் எண்ணினார்; அவரைத் தொழுது
அவருக்கு இரட்டிப் பொன் (200 பொன்) கொடுத்து உபசரித்து விடைகொடுத்தருளினர்.
 
     இவ்வகையே திருத்தொண்டி னெறியினில் அன்புடன் செயலாற்றி இறைவரது
திருவடிநீழலில் சேர்ந்து மீளாதநிலை பெற்றனர்.
 
     கற்பனை: 1. தேடியடைய வேண்டாது இயல்பிலே வளந்தரும் நாடே
சிறப்புடையது. (3983)
 
     2. அரசர்க்கு உலகியல் நெறி, அரன்றிருத் தொண்டுநெறி என இரண்டு
கடமைகள் உண்டு. (3984)
 
     3. உலகியல் நெறியில் குடிகளையும் ஏனை உயிர்களையும் காவல்புரிவது அரசர்
கடமை. இதனைப் பகைவரை வென்று தீங்ககலச் செய்வதனால் அரசர் கடன்
ஆற்றுவர். (3984)
 
     4. திருத்தொண்டு நெறியினை அடியார் திருவடிச் சார்பினாலும் அரன்கோயிற்
பணிகளைச் சோர்வுபடாது உயிரினும் சிறந்ததாகக் காத்துப் பெருக்குதலாலும் அரசர்
புரிவது கடன். (3984)