பக்கம் எண் :

பெரியபுராணம்275


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

43. அதிபத்த நாயனார் புராணம்
_ _ _ _ _

தொகை

    
“விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தர்க் கடியேன்”

- திருத்தொண்டத்தொகை - (7)    

வகை

“திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்

புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (52)

விரி

3992. மன்னி நீடிய செங்கதி ரவன்வழி மரபின்
தொன்மை யாமுதற் சோழர்தந் திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகப்பட் டினத்திரு நகரம்.                       1
 
     புராணம்: இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், எட்டாவது
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கத்திலே, நான்காவது அதிபத்த நாயனார் புராணங்
கூறத் தொடங்குகின்றார். அதிபத்த நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
 
     தொகை: விரிந்து செல்லுகின்ற அலைகள் சூழ்கின்ற கடற்கரையின்கண் உள்ள
நாகப்பட்டினத்தில் அவதரித்த அதிபத்த நாயனார்க்கு நான் அடியேனாவேன்.
 
     விரிதிரை சூழ்கடல் - விரி - காற்றின் செயலாற் சிறிதாய் எழுந்து மேலோங்கி
வந்து கரையினிற் பரவும்; கடல் (நாகை) - கடற் கரையின்கண் உள்ள. நாகை -
நாகப்பட்டினம்; நாகம் - ஆதிசேடன் பூசித்த பதியாதலிற் போந்த பெயர்; கடல்
(நாகை)
- இது இப்பட்டினத்தின் செல்வ வளத்துக்குக் காரணமாதலுடன், இந்நாயனார்
மீன்படுக்கும் பரதவர் குலத்தவராய் அத்தொழிலின்கண்னே நின்று சிவனை நினைந்து
திருத்தொண்டு செய்து பேறடைந்தாராகும் குறிப்பும் உடைமையால் இத்தன்மை பற்றிப்
போற்றினார். இதனையே மேற்கொண்டு விரிநூலுள், ஆசிரியர், முன்னரும் (3991),
மேலும் (3994) விரித்தல் காண்க.
 
     ஊரும், பேரும், வரலாறு நிகழ்தற் கேதுவாகிய குறிப்பும் தொகைநூல் பேசிற்று.