உரைத்தலுமாம்; வேண்டிய வளங்களை எல்லாம் வேண்டும்படியே தருதலால் இவ்வாறு உவமித்தார், கொடியின் பயன் மலராதல்போல் நாட்டின் பயன் இந்நகர மென்பதாம். “நிலவு மெண்ணி றலங்களும் நீடொளி, யிலகு தண்டளி ராக வெழுந்ததோர், உலகமென்னு மொளிமணி வல்லிமேன், மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை” (13) என்ற கருத்து ஈண்டு வைத்து நோக்கற்பாலது. கற்பகத் தருவிற் படரும் அழகிய கொடி என்றலுமாம். |
நன்மை சான்றது - நன்மையால் மிக்கது; சாலுதல் - நிறைதல். திருநகரம் - சிவச்சார்பு பற்றிய சிறந்த வளமே ஈண்டுக் கருதத் தக்கது, பிறவல்ல; என்பார், திரு என்ற அடைமொழி புணர்த்தி ஓதினார்; திரு - சிவச் செல்வம் பட்டினம் - கடற்கரை ஊரின் பொதுப்பெயர். பட்டணம் என்னும் வடசொல்லுடன் இது மயங்கற்பாற்றன்று. 1 |
| 3993. | தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த தேம லர்க்குழன் மாதர்பந் தாடுதெற் றிகள்சூழ் காமர் பொற்சுடர் மாளிகைக் கருங்கடன் முகந்த மாமு கிற்குல மலையென வேறுவ மருங்கு. 2 |
(இ-ள்) தாம நித்திலம்....மாளிகை - முத்துமாலைகளின் கோவைகள் சரிந்திடத், தேன் பொருந்திய மலர்களைச் சூடிய சரிந்த குழலையுடைய பெண்கள் பந்தாடுகின்ற மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன்னொளி மின்னும் மாளிகைகளை; மலையென - இவை மலை என்று மயங்கி; கருங்கடன் முகந்த மாமுகிற்குலம் - கரிய கடல்நீரை - உட்கொண்ட கரிய மேகக் கூட்டங்கள்; மருங்கு ஏறுவ - பக்கத்தில் மேல் ஏறுவன. |
(வி-ரை) மாளிகை - மலையென - முகிற்குலம் - ஏறுவ என்று கூட்டுக; மாளிகைகளில் முகில் ஏறுவன என்பதாம்; மாளிகைகள் முகிற் குலத்தால் ஏறப்பெறுவன என்றலுமாம். |
நித்திலத் தாமக்கோவை - தாமம் - மாலைபோல அமைத்த; தாமம் - ஒளி என்றலுமாம். நித்திலம் - முத்து; இங்குக் கடல்படு முத்துக்களைக் குறித்து; கடற்கரையாதலின் அவை இங்கு எளிதிற் பெறக் கூடியவையாதலால்; சரிந்திட - ஆடும் என்க. |
சரிந்த - குழல் - மாதர் என்று கூட்டுக. சரிதல் - தொங்குதல்; தெற்றி - மேடை. |
சரிந்தீட - சரிந்த - இரண்டு சரிவுகளும் பந்தாடுதலால் ஒருங்கு நிகழ்ந்தன என்பதாம். |
காமர் - அழகிய; விரும்பத்தக்க; பொற்சுடர் - மாளிகையில் அங்கங்கும் இயற்றிய பொன்வேலைப்பாட்டின் விளக்கம். |
மாளிகை மலையென - மாளிகைகளை இவை மலையே என்று மயங்கி; மலையில் ஏறுதல்போல என்றலுமாம். மாளிகைகளின் உயர்ச்சி குறித்தது. கடற்கரையில் இருந்தலால் இக்காட்சி உண்மைக் காட்சியாம் மருங்கு என்றது மருங்கிருத்தலால் என இக்கருத்துப்பட நின்றது. |
மாமுகில் - மா - கரிய; “மாமிடற் றம்பலவன்” (திருக்கோவை 102); “மா முகடி” (குறள் - 617). |