| 3994. | பெருமை யிற்செறி பேரொலி பிறங்கலி னிறைந்து திரும கட்குவாழ் சேர்விட மாதலின் யாவுந் தருத லிற்கட றன்னினும் பெரிதெனத் திரைபோற் கரிப ரித்தொகை மணிதுகில் சொரிவதாங் கலத்தால் 3 |
(இ-ள்) பெருமையில்...பிறங்கலின் - பெருமையினாலே செறிவுடையபெரிய ஓசை விளங்குதலாலும்; நிறைந்து...ஆதலின் - நிறைந்து இலக்குமி வாழும் உறையுளாதலாலும்; யாவும் தருதலில் - வேண்டும் பொருள்களை எல்லாம் தருதலாலும்; கடல்.....பெரிதென - கடலிலும் பெரிதென்று சொல்லும்படி விளங்கி; திரைபோல்....கலத்தால் - அலைபோல் யானைகள், குதிரைத் தொகைகள், மணிகள், துகில்கள் என்பனவாதிய பொருள்களை மரக்கலங்களாற் கொணர்ந்து சொரிவதாம். (அத்திருநகரம்). |
(வி-ரை) பெருமையிற் செறி பேரொலி - பெருமை - நற்பண்பினையும், பேர் ஒலி - என்றது அளவினையும் குறித்தன. பெருமையில் - மை - மேகம் என்று கொண்டு, மேகங்களினின்றும் எழும் என்றுரைப்பாருமுண்டு. |
கடல் தன்னிலும் பெரிதென - பெருமுழக்கம், திருமகள் சேர்விடம், யாவும் தருதல் - என்ற இம்மூன்று தன்மைகள் கடலினிடத்தும் அதன் கரையில் உள்ள இந்நகரிடத்தும் உள்ளன; ஆயின் இவை இந்நகரில் ஒருங்கே மிகுதியும் எளிதிற் பெறும்படி சிறக்க உள்ளன; ஆதலில் இதுகடலினும் பெரிது என்று சொல்லும்படி என்க. |
திரைபோல...சொரிவதாம் - பெரிதென்பதற்குரிய காரணங் கற்பித்தவாறு; திரைபோல் - கரி முதலியவற்றை அடுத்தடுத்து மேன்மேல் வாணிகமுறையில் கொணர்ந்து சொரியும் நிலை கடலுக்கில்லை என்பது குறிப்பு. |
கரி....துகில் - இவை வேற்று நாடுகளினின்றும் வாணிகத் துறையில் இங்குக் கொண்டுவரப்படுவன. “இறக்குமதி” என்பது. இந்நாள்மரபு. கடற் றுறைமுக வாணிபச் சிறப்புப் பற்றி நகர்வளங் கூறியவாறு; சொரிவது - சொரியப் பெறுவது. |
பிறங்கலிற் சிறந்து - என்பதும் பாடம். 3 |
| 3995. | நீடு தொல்புகழ் நிலம்பதி னெட்டினு நிறைந்த பீடு தங்கிய பலபொருண் மாந்தர்கள் பெருகிக் கோடி நீடனக் குடியுடன் குவலயங் காணும் ஆடி மண்டலம் போல்வதவ் வணிகிளர் மூதூர். 4 |
(இ-ள்) நீடு.....பெருகி - நீடியவையாகிய புகழினையுடைய பதினெட்டு நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கைக்கொண்ட மக்களும் சார்ந்து பெருகி நிகழ்வதனாலும்; கோடி....குடியுடன் - கோடியளவினும் பெருகிய செல்வக்குடி மக்களுடன் பொலிவதனாலும்; அவ்வணிகிளர் மூதூர் - அந்த அழகு மிகுந்த பழயநகரம்; குவலயம்....போல்வது - இவ்வுலக முழுவதும் தனக்குள் பிரதிபிம்பமாக அடங்கக் காணப்படும் கண்ணாடி மண்டலம்போல்வதாகும். |
(வி-ரை) மூதூர் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது என்று கூட்டுக. குவலயம் காணும் - உலக முழுதும் உள்ளடங்கப் பிரதிபிம்பமாகப் பார்க்கக்கூடிய; குவலய முழுதும் காணவுள்ள நிலையாவது 18 நிலங்களின் மக்களும் பொருள்களும் பெருகுவதாலும், இந்நகரினும் இதுவே செல்வத்தின் எல்லை எண்ணக்கூடிய பெருஞ் |