பக்கம் எண் :

பெரியபுராணம்279

செல்வங்களுடன் உள்ள குடிகள் நிறைதலாலும் ஆகிய தன்மை. “மெய்யொளியி
னிழற்காணு மாடியென” (1274).
 
     நிலம் பதினெட்டு - பதினெட்டு மொழிகள் வழங்கும் பதினெட்டுத் தேயங்கள்.
இத்தேயங்கள், சிங்களம் முதலாகத் தமிழகம் ஈறாகத் தமிழ் நூல்களிற் கூறப்பட்டவை.
மொழிகளும் அவ்வத் தேயங்களின் பெயராலே அறியப்படுவன.
 
     சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம்,
கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம்,
தமிழகம் என்பன. “பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்” (திருமந்திரம்).
 
     நிலம் பதினெட்டினும் நிறைந்த - பல பொருள் மாந்தர்கள் பெருகி -
இவர்கள் வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்து குழுமுவர்; தத்தம் நாட்டின் வாணிபப்
பொருள்களையும் கொணர்வர்; இந்நகர் கடல் துறைமுகப் பட்டினமாதலாலும், செல்வப்
பொருட் பண்டங்கள் நிறைதலாலும் வாணிபத்திற்காகப் பல திசைகளிலுமிருந்து மக்கள்
வந்து கூடுவர். “ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார், வேறுதிசை
யாடவர்கள் கூறவிசை தேரும்” (4); காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை
வார்துவலைமேல், வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில்; (10) என்று, (சாதாரி -
வேதவனம்) இதுபோன்ற கடற் றுறைமுகப் பட்டினமாகிய வேதாரண்யத்தினைப் பற்றி
ஆளுடைய பிள்ளையார் அருளியவை இங்கு நினைவு கூர்தற்பாலன.
 
     கோடி - எல்லை; கோடி நீள்தனம் - தனங்களின் எல்லை இது என்னும்படி
நீண்டதனம். கோடி - என்ற பேர் எண் குறித்ததென்றலுமாம். மண்டலம் - வளைவு.
பிறங்கலிற்சிறந்து - என்பதும் பாடம்.                                  4
 
3996. அந்நெ டுந்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பிற்
பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத் துணவினின் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி.                   5
 
     (இ-ள்) அந்நெடும்.....ஞாங்கர் - அந்த நீண்ட திரு நகரத்தின் பக்கத்தில்
அலைகளையுடைய கடலின் விளிம்பிலே பல நீண்ட அலைகளின் நுரை வந்து
தவழ்தற்கிடமாகிய பக்கங்களை அடுத்து; மன்னு...தன்மை - நிலைபெற்ற பழமையில்
வலைவீசி மீன்படுக்கும் தொழிலாற் பெறும் வளமுடைய மீன் உணவினில் பெருகிய
தன்மையாலே; வாழ்...நுளைப்பாடி - வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் மிடைந்துள்ளது
பெரிய பரதவர் சேரி.
 
     (வி-ரை) கடல் விளிம்பு - கடலின் கரையோரம்.
 
     திரை நுரைதவழ் பாங்கர் - கடலலைகள் கரையின் மோதிச் சிதறிப்
பரவும்போது அவ்வலைகளின் நுரை நெடுந்தூரம் சென்று கரையின் தரையிற்றவழும்.
ஞாங்கர் - அந்த அளவு எல்லையினை அடுத்துள்ள இடம்.
 
     தொன்மையாவது இப்பரதவர் இத்தொழிலையே உரிமையாக வழிவழி நீண்ட
காலமாகச் செய்து வாழ்வார் என்ற பழமையுரிமை.
 
     வலைவளம் - வளை வீசிப்படுக்கும் மீனாகிய வளம்; செல்வம்.