வலை வளத் துணவினின் மலிந்த தன்மை வாழ் - வலை வாரிப்படுக்கும் மீன்களை உண்டும், அவற்றை விலைப்படுத்திப் பெறும் நிதியினைக் கொண்டும் வாழ்க்கை நடத்தும். |
“மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்” (1086) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. வலைவளத் துணவு - வலைவளத்தினை விற்றுவரும் ஊதியத்தால் வாழ்தல் பற்றி உரைக்க எழுந்தது மேல்வரும் பாட்டு; இத்தொழிலும் வாழ்வும் பற்றிக் கூறுவது இந்நாயனாரின் பண்பும் வரலாறும் பற்றி எடுத்தவகையாம். |
குடிமிடைந்தது - குடி நெருக்கமாக உள்ளது. |
நுளைப்பாடி - நுளையர் - பரதவர் - மீன்பிடிப்போர்; நுளையர் வாழும் சேரி; பாடி - இருப்பிடம்; இப்பாட்டும் மேல்வரும் மூன்று பாட்டுக்களும் இந்நுளைப்பாடியின் அரிய இயற்கை வரணனையாகிய தன்மைநவிற்சி யணிகள். 5 |
| 3997. | புயல ளப்பன வெனவலை புறம்பணை குரம்பை; யயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல்; வியல ளக்கரின் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள். 6 |
(இ-ள்) புயல்....குரம்பை அயல் - மேகங்களை அளவிட்டாற் போல வலைகள் புறம்பே உலரவைக்கப் பெற்ற சிறு குடில்களின் பக்கத்தில்; மீன் விலைப்பசும் பொனின் அடுக்கல் அளப்பன - மீன் விலைக்குக் கொள்வோர் கொணர்ந்த பசும் பொன்னின் குவியங்கள் அளவிடப்படுவன; வியல்....கயல் - விரிந்த கடலில் செலுத்தும் மீன்படகின் றொழிலினால் வாழும் பரதவர்கள் கொணர்ந்த கயல் மீன்களை; பரத்தியர் கருநெடுங் கண்கள் அளப்பன - (அக்கயல்களை அவரிடம் பெறும்) பரத்தியரது கரிய நீண்ட கண்கள் அவை இவ்வளவு விலைபெறும் என்பதனைக் காட்சியாலே அளந்து விடுவன. |
(வி-ரை) இப்பாட்டுச் சிறந்த தன்மை நவிற்சியின் சுவைபட விளங்குவது 1 |
புறம்பு வலை அணை குரம்பை என்க. பரதவர் வலைகளைத் தமது குடிசைகளின் புறம்பே நாளும் உலரவைக்கும் வழக்கம் குறிப்பிடப் பட்டது. |
புயல் அளப்பன என - பிரிந்து கவிந்த நீண்ட வலைகள் மேகங்கள் கவிந்து படிந்தாற் போன்றன. அளப்பில் - என்பதும் பாடம். |
அளத்தல் - ஈண்டுக் கவிதல்போல என்ற உவமப் பொருள்பட வந்தது; கடலிற்படியும் மேகங்கள் கடற்கரை விளிம்பில் உள்ள இக்குடிலி டங்களிலும் படர்ந்தனவோ என்னும்படி என்பதும் குறிப்பு. |
குரம்பை அயல் மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் அளப்பன என்க. இது மீன்கொள்வோர் பரதவர் குடில்களை அடுத்து முன்னதாகவே விலை கொடுத்துப் பெறுதற்குக் காத்திருக்கும் நிலையினை உணர்த்திற்று; பசும் பொனின் அடுக்கல் அளப்பன - மீன்களின் மிக்க விலை மதிப்பையும், பொன் நாணயம் வழங்கிய நிலையினையும் குறித்தது; அடுக்கல் அளத்தலாவது நாணயங்களை அடுக்கி எண்ணிக் கணக்கிட்டு அளவு காணுதல். வியல்.....கொணர்ந்த கயல் - திமில் வாழுநர் நள்ளிரவில் மீன் படகுகளைக் கொண்டு கடலின் நீண்டதூரம் சென்று மீன் பிடித்து அதிகாலையிற் கொணர்வர்; இப்படகுகள் பல மரக்கட்டைகளை பொருத்திக் கட்டப்படுதலால் கட்டுமரத் தோணி |
| ____________________ |
| 1 இதுபற்றி எனது சேக்கிழார் - 131 - 135 பக்கங்கள் பார்க்க. |