பக்கம் எண் :

பெரியபுராணம்281

எனப்படும்; தோணி கரைதட்டினபின் அதனை மணலில் ஈர்த்து நுளையன்
கரைசேர்த்துக் கயறுகளையும் வலையினையும் தன்னையும் ஒழுங்கு செய்து கொள்ள
வேண்டும்; அத்தோணியில் ஒரு கூடையில் அவன் படுத்த மீன்களை வைத்திருப்பான்;
கூடையில் அடங்காத அளவு பெரு மீன்கள் அகப்பட்டுவிடின் அவற்றைத் தோணியில்
வெளியிடத்தில் சேமித்துக் கொணர்வன்; நுளைச்சி அலைகடல் நீர் விளிம்புக்குள்
எத்துணை தூரம் சேமமாய்ச் செல்ல முடியுமோ அத்துணை தூரம் சென்று
தோணியிலிருந்தவாறே அம்மீன்களை வாங்கிக்கொண்டு விலைப்பொருட்டு வேகமாய்க்
கொண்டு கரை சேர்ந்து பாகுபடுத்தி விற்கத் தொடங்குவாள்; விற்பனைநிலைபரத்தியின்
தொழிலாதலால் அவ்வந்நாளும் பரதவன் கொணரும் மீன்களின் மதிப்பினைப்
படகிலிருந்தவாறே கண்ணுக் கெட்டிய தூரத்தே தனது கண்பார்வையால் நிச்சயித்து
அளந்து விடுவாள்; இத்துணைச் செய்திகள் எல்லாம் புலப்பட“வியலளக்கரின்
விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த,கயலளப்பன பரத்தியர்கருநெடுங்கண்கள்”
என்றார். இப்பாட்டின் தன்மை நவிற்சியணிச்சுவை இச்செயலை அதிகாலையிற்
கடற்கரை சென்று நேரிற் கண்டார்க்கே நன்கு புலப்படும். அடியேன் அவ்வாறு
கண்டுள்ளேன். கண்கள் கயல்போன்றன என்ற உவமை நயம்பட உரைப்பார் பலர்.
அவர்கள் “வியல்.....கொணர்ந்தகயல்” என்றதன் உள்ளுறை குறிப்பினையும், ஈண்டுப்
பரத்தியர் கண்களுக்குக் கூறிய சிறப்பினையும் உணர்ந்திலர்.
 
     அளக்கர் - கடல்; வியல் - விரிந்த; திமில் வாழ்நர் - திமில் செலுத்தி
மீன்பிடித்தற் றொழிலால் தம் வாழ்க்கையினை நடத்துவோர். பரதவர்; திமில் -
மீன்பிடிக்கும் படகு (கட்டுமரத்தோணி).                                  6
 
3998. உணங்கல் மீன்கவர் வுறுநசைக் குருகுட னணைந்த
கணங்கொ ளோதிமங் கருஞ்சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சிய ரணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின் றிழியல மருளும்.               7
 
     (இ-ள்) உணங்கல்.....அணைந்த - உலர்தலையுடைய மீன்களைக் கவரும்

ஆசையினையுடைய பறவைகளுடனே கூட வந்த; கணங்கொள்...அழிந்து - கூட்டமாகிய
அன்னங்கள் வளைகின்ற நுண்ணிய இடையினையுடைய நுளைச்சியரது அழகிய
நடைக்கு அழிந்து, கரிய கொம்புகளை யுடைய புன்னையங் காட்டிலே;
மணங்கொள்...அலமருளும் - மணமுடைய அப்புன்னைமரக் கொம்புகளிலே
பக்கத்தினின்றும் இழியாதவையாகி மருண்டிருக்கும்.
 

     (வி-ரை) உணங்கல் - வாடி உலர்ந்த; மீன் கவர் நசைக் குருகுடன் -
(மீன்விற்கும் பெண்கள் ஏமாந்த சமயம் பார்த்து) மீன்களைக் கவரும் நோக்கத்துடன்
உள்ள பறவைகள். உணங்கல் - காய்தல்.
 
     உடன் அணைந்த ஓதிமம் - ஓதிமம் மீன் கவர்தற்கு வராவிடினும் அவ்வாசை
கொண்ட குருகுகளுடன் இனம் பற்றி அணைந்தன; ஆயினும் ‘தீயாரோடிணங்கி
யிருப்பதும் தீது’ என்றபடி அத் தீய எண்ணமுடைய குருகுகளுடன் அணைந்தமையால்
அலமந்தன என்ற குறிப்புப்படக் கூறினமை காண்க. கணங்கொள் - கூட்டமாகிய;
கருஞ்சினைப் புன்னையங்கானல் - கருமை - மிக்க பசுமை கருமையாக் காணுநிலை
புன்னையங்கானல் - நெய்தற்கரு; “மட்டிட்ட புன்னையங் கானல்” (தேவா). தேவார
ஆட்சி போற்றப்பட்டது.