மணங்கொள் கொம்பர் - மணம் - புன்னைப் பூக்களின் மணம். இனிய மணம் மிக்க நிலை; "மட்டிட்ட" (தேவா); ஓதிமம் - அன்னப் புட்கள். அணிநடைக் கழிந்து....நின்றலமருளும் - நுளைச்சியர் நடந்து வந்து இப்புட்களைத் துரத்தும் நிலைக்கு அஞ்சியிருத்தலை நடைக்கழிந்து அலமருதலாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணி. |
அலமருதல் - வருந்துதல்; இழி - இழிவாகிய; இழியல - இழியாதனவாகி, மருளும் என்பாருமுண்டு; பரத்தியர் மெல்லிய நடையினர் என்பது கருத்து. |
கணங்கள் - அசைநடை - என்பனவும் பாடங்கள். 7 |
| 3999. | வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவ ரொலியும் விலைப கர்ந்துமீன் குவைகொடுப் பவர்விளி யொலியுந் தலைசி றந்தவெள் வளைசொரி பவர்தழங் கொலியும் அலைநெ டுங்கட லதிரொலிக் கெதிரொலி யனைய. 8 |
(இ-ள்) வலை...வலிப்பவர் ஒலியும் - வலைகளின் நீண்ட தொடர்களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களது ஒலியும்; விலை...விளி ஒலியும் - விலையினை எடுத்துச் சொல்லி மீன் குவியல்களைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கும் விளித்தலாகிய ஒலியும்; தலை......தழங்கொலியும் - மிகச்சிறந்த வெள்ளிய சங்குகளைக் கொணர்ந்து குவிப்பவர்களின் மிக்க ஒலியும்; அலை...எதிரொலியனைய - அலைகளையுடைய நீண்ட கடலின் அதிர்க்கின்ற ஒலிக்கு எதிர் ஒலி போன்றுள்ளன. |
(வி-ரை) வலை தொடர் நெடுவடம் புடை வலிப்பவர் - கடல் வலைகள் மிகப் பெரியனவாயும் நீண்டும் உள்ளன; அவற்றைக் கரையில் இழுத்து நாடோறும் செம்மை செய்தல் பெரு வேலை. கொடுப்பவர் - நெய்தனிலமாக்களாகிய பெண்டிர். |
விலை.....விளி ஒலி - விலையிண எடுத்துக் கூறி மீன் கொள்வோரை அழைத்தல் பேரொலி தருவது. இது மீன் வாணிப வழக்கு; ஏனைப்பண்டங்களுக்கும் ஏற்ற பெற்றி அமைவதாயினும் விரைவிற் கெடும் இயல்பும், விரைவில் முடிக்க வேண்டிய அவசியமும் உடைய கடற்கரை மீன் வாணிபத்தில் இது மிகவும் வேண்டற்பாலது. |
வளை சொரிபவர் - பலவகைப் பெரிதும் சிறிதுமாகிய சங்கு வர்க்கங்களைக் கடலினின்றும் வாரிக் கொணர்ந்து சொரிதலினால் மிக்க ஒலி. |
எதிர் ஒலி - பிரதி விம்பமாகிய முழக்கு; அனைய - முன் கூறிய மூன்றும் கடல் ஒலி போன்றன. மிகுதிப்பாடு குறித்தது. தலை - உரிய இடங்களில் என்றலுமாம். |
| | 8 |
| 4000. | அனைய தாகிய வந்நுளைப் பாடியி லமர்ந்து மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார் புனையி ளம்பிறை முடியவ ரடித்தொண்டு புரியும் வினைவி ளங்கிய வதிபத்த ரெனநிகழ் மேலோர். 9 |
(இ-ள்) அனையதாகிய.....அமர்ந்து - முன் கூறிய அத்தன்மைத்தாகிய அந்த நுளைப்பாடியில் வாழ்ந்து; மனை....வந்தார் - இல்வாழ்க்கை வளங்களால் விளங்கும் நுளையர்களது குலத்தினில் அவதரித்தவர்; புனை...மேலோர் - இளம் பிறைச்சந்திரனைச் சூடிய முடியினை உடைய இறைவரது திருவடித் தொண்டு செய்யும் தொழிலில் விளங்கிய அதிபத்தர் என்று நிகழ்கின்ற மேன்மையினை உடையவர். |