(வி-ரை) வந்தார் - மேலோர் - என்க; மேலோர் பெயர்ப் பயனிலை; மேலோர் - வந்தார் என்று கூட்டி முடிப்பதுமாம். |
அடித்தொண்டு புரியும் வினை - திருவடித் தொண்டில் செய்யப்படும் செயல். தொண்டு மனத்தாலும் செய்யப்படுமாதலின், இங்கு, அதனோடு, விளங்கிய செயலினாலும் தொண்டுபுரிபவர் என்றதாம்; அச்செயல், மேல் (4002) உரைக்கப்படும். |
அதிபத்தர் - காரணப் பெயர்; நிகழ்தலாவது அப்பெயர்க் காரணத்துக் கேற்றபடி ஒழுக்கத்தாலும் விளங்குதல். 9 |
| 4001. | ஆங்க வன்பர்தா நுளையர்தந் தலைவரா யவர்கள் ஏங்கு தெண்டிரைக் கடலிடைப் பலபட வியக்கிப் பாங்கு சூழ்வலை வளைத்துமீன் படுத்துமுன் குவிக்கும் ஓங்கு பல்வகை யுலப்பில வுடையரா யுயர்வார். 10 |
| 4002. | முட்டின் மீன்கொலைத் தொழில்வளத் தவர்வலை முகந்து பட்ட மீன்களி லொருதலை மீன்படுந் தோறும் “நட்ட மாடிய நம்பருக்” கெனநளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாதவன் புடனென்றும் விருப்பால். 11 |
4001. (இ-ள்) ஆங்கு...தலைவராய் - அந்த அதிபத்தர் என்னும் அன்பர் நுளையர்களின் தலைவராகி; அவர்கள்....இயக்கி - அவர்கள் சத்திக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறும் தொழில் செய்து; பாங்கு...படுத்து - பக்கங்களிலே சூழும் வலைகளை வளைத்து வீசி மீன்களைப் பிடித்துக் கொணர்ந்து; முன்குவிக்கும் ஓங்கு பல்வகை - முன் குவிக்கின்ற உயர்ந்த பலவகை மீன் குவைகள் அளவில்லாதவற்றையுடையவரா யுயர்ந்தவராகி, 10 |
4002. (இ-ள்) முட்டில்....மீன்களில் - குறைதலில்லாத மீன்களைப்படுத்து அக்கொலைத் தொழிலினது வளத்தையுடைய பரதவர் வலைகளால் வாரி எடுத்தலினாற் பட்ட மீன்களில்; ஒருதலை மீன் படும் தோறும் - ஒரு தலைமையாகிய மீன் படுந்தோறும்; நட்டமாடிய நம்பருக்கென - இஃது, ஐந்தொழிலருட் கூத்தாடும் ஐயருக்காகுக என்று; விடாத அன்புடன் - இடையறாத அன்பினாலே; விருப்பால் - விருப்பத்துடன்; நளிர் முந்நீர் என்றும் விட்டு வந்தனர் - குளிர்ந்த கடலினிடத்தில் நாடோறும் விடுத்துவந்தனர். |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4001. (வி-ரை) ஆங்கு - முன் கூறிய அத்தன்மையுடன்; அசையென்பாருமுண்டு. |
ஏங்குதல் - சத்தித்தல்; ஒலித்தல். தன் வளங்களைக் கொள்ளையிடுதல் பற்றி இரங்குதல் என்ற குறிப்புமாம். |
பலபட இயக்குதலாவது - மீன்படுத்தற்றொழிலின் பலவகைகளையும் செய்தல். பலபடவு - பல படகுகளை என்று கொண்டு, படகுகளைச் செலுத்தி என்றலுமாம். படகு - படவு - என வந்தது; படகியக்கி - என்று பாடங்கொள்வாரு முண்டு. |
அவர்கள் - தம் கீழுள்ள அக்குலத்தவராகிய அந்நுளையர்கள்; அவர்கள் - இயக்கிப் - படுத்துக் குவிக்கும் - பல்குவை என்க. குவை - மீன் குவியல்கள் “பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்” (73). |
முன்குவிக்கும் பல்குவை - அவ்வவரும் தமது தலைவர்க்குச் செலுத்தும் பகுதியாகிய குவியல்கள். |