பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்284

     உயர்வார் - உயர்தல் - உலகநிலைச் செல்வ வளங்களால் உயர்தல்.
உயர்வாராகி; முற்றெச்சம் - உயர்வார் - விட்டுவந்தனர் - என மேல்வரும்
பாட்டுடன் முடிக்க. உயர்வார் - அவர்தம் குலத்தளவிலன்றிச் சிவனன்பின்றிறத்தில்
மேம்படுகின்றாராய் என்ற குறிப்புமுடையது.                              10
 
     4002. (வி-ரை) முட்டில் மீன் - கடலின் மீன்களுக்கு எப்போதும் குறைவில்லை
யாதலின் முட்டில் என்றார்.
 
     கொலைத் தொழில் - மீன்களை நீரினின்றும் வலைப்படுத்துப் பிடித்து
எடுத்தலேயின்றி அவற்றைக் கொல்லுதல் இல்லை; அவை தாமாக இறந்துபடுகின்றன;
ஆதலின் கொலைப் பழியாகிய பாவச் செயலில்லை யாதலின் அவற்றை உண்ணலாம்
என்னும் புத்த சமணக் கொள்கைகளை மறுத்துக் கூறியவாறு; அவற்றை நீரினின்றும்
எடுத்தலே கொலை செய்தலாகும் என்பது முன்னரும் “பரிவுறத் தடிந்த பன்மீன்” (73)
என்றார். வளம் - செல்வம் “வளம்பட வேண்டாதயார்” (நாலடி.)
 
     பட்ட - படுத்த; அகப்படுத்த; தலைமீன் - தலைமையாகிய - உயர்ந்த - சிறந்த;
தமது பொருள்களுட் சிறந்தவற்றையே சிவனுக்காக்குதல் வேண்டும் என்பது சிவாகம
விதி; அரிவாட்டாய நாயனார் வரலாறு முதலியவை காண்க. “விரும்பின கொடுக்கை
பரம்பரற்கென்று” (11 - திருமுறை - இடைமருது - மு - கோ - 28).
 
     நம்பருக்கென - நம்பருக்கு இது ஆகுக என்று நிவேதித்து.
 
     படுதோறும் - மீன்படுத்த நாட்களிளெல்லாம்; என்றும் - நாடோறும்;
விட்டுவந்தனர் - விடாத - முரண் அணி; அன்புடன் - தலைமீன் -
விட்டுவந்தனர்
- என்று கூட்டுக.
 
     வலை - வலையினால்; முகந்து - முகக்க; முகத்தலால்; முகத்தல் - பிடித்தல் -
கவர்தல்.
 
4003.     வாகு சேர்வலை நாளொன்றின் மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கெனவிடு மியல்பால்
ஆகு நாள்களி லனேகநா ளடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையிற் படவிட்டு வந்தார்.
                   12
 
     (இ-ள்) வாகு...வரினும் - ஒழுங்காகிய வலையிலே ஒருநாளில் ஒரு
மீனேவந்தாலும்; ஏகநாயகர்.....ஆகுநாள்களில் - முழு முதல்வராகிய இறைவரது
திருவடிக்கு என்று விடுகின்ற இயல்பாலாகிய நாட்களில்; அனேக நாள்...பட - அனேக
நாட்கள் தொடர்ந்து ஒரு மீனே மேகம் படியும் கடலிற் கிடைக்க; விட்டுவந்தார் -
அதனை இறைவனுக்கென்று கடலில் விட்டு இவ்வாறொழுகி வந்தனர்.
 
     (வி-ரை) வாகுசேர் வலை - வாகு - ஒழுங்கு; அழகு; வலை - வலையில்;
மீன் ஒன்று - ஒரு மீனே. மாகு - என்பது பாடமாயின் வலையிற் சேர்த்தும் மணிகள்
என்க. மாகு - வலையின் பரியாயப் பெயர்களுள் ஒன்றுமாம். தேற்றேகாரம் தொக்கது;
பிரிநிலையுமாம். மகாஜாலப் பிரயோகத்தில் வரும்ஞானவலையில் 51 அக்கரங்களையும்
அவ்வலையின் மணிகளாகக் கூறப்பட்டிருத்தலும் அறிக - (ந. சிவப்பிரகாசக்
குருக்களையா அவர்களின் குறிப்பு).
 
     இயல்பாலாகு நாள்களில் - இவ்வியல்பால் ஒழுகிய நாளிலே.
 
     அடுத்த அனேக நாள் ஒரு மீனே - பட - என்க; அடுத்து - தொடர்ச்சியாக;
பட - கிடைக்க.
 
     விட்டு வந்தார் - இறைவருக்காகுக என்று கடலில் மீனை விட்டு இவ்வாறொழுகி வந்தனர்.
 
     அடுத்தடுத் தொருமீன் - என்பனவும் பாடம்.                      12