பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்292


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
 

44. கலிக்கம்ப நாயனார் புராணம்

தொகை
 

“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன்
      கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை (7)
 

வகை
 

“பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத் தானவன் றாள்கழுவ

வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விட, மனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே”

     - திருத்தொண்டர் திருவந்தாதி - (53)
 

விரி
 

4012. உரிமை யொழுக்கந் தலைநின்ற வுயர்தொன் மரபி னீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிக டழைத்து வளரும் தன்மையதாய்
வருமஞ் சுறையு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவிற்
பெருமை யுலகு பெறவிளங்கு மேல்பாற் பெண்ணா கடமூதூர்.         1
 
     புராணம்; இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, எட்டாவது
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கத்துள், ஐந்தாவது கலிக்கம்ப நாயனார் புராணங்
கூறத்தொடங்குகின்றார். கலிக்கம்ப நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும்பகுதி.
 
     தொகை: மனைவியினது கையினைத் தடிந்த, வரிவில் ஏந்திய கலிக்கம்ப
நாயனாரின் அடியார்க்கும் நான் அடியேனாவேன்.
 
     கைதடிந்த - மனைவியினது கையினை வெட்டிய; மனைவியினது என்பது சரித
வரலாற்றினின்றும், வகைநூல் விரிநூல்களினின்றும் வருவிக்கப்பட்டது. வரிசிலையான்
- விற்பிடித்த வீரனாகிய; வரிசிலை - வரிந்து கட்டப்பட்ட வில்லை.
 
     வகை: பொய்யை.....ஆட்பட்டு - பொய்யினை நீக்கி நமது புண்ணியராகிய
சிவபெருமானுக்கு ஆளாகி; தன்னடியான்...கழுவ - தமது அடியவன் சைவ
தவவேடந்தாங்கி வரத் தாம் அவரது கால்களைக் கழுவுதற்கு; வையத்தவர்.... நீர்
வாராவிட - உலகியல் நிலையின் உலகமக்களின் முன்னே வெள்கி மனைவி நீர்
வார்க்காது விட; மனைவி ....தடிந்தவன் - மனைவியினது கையைத் தடிந்தவர்;
பெண்ணாகடத்துக் கலிக்கம்பனே - பெண்ணாகடத்தில் வாழும் கலிக்கம்பரே. யாவர்.