4013. | மற்றப் பதியி னிடைவாழும் வணிகர் குலத்து வந்துதித்தார் கற்றைச் சடையார் கழற்காத லுடனே வளர்ந்த கருத்துடையார் அற்றைக் கன்று தூங்கானை மாடத் தமர்ந்தா ரடித்தொண்டு பற்றிப் பணிசெய் கலிக்கம்ப ரென்பார் மற்றோர் பற்றில்லார். 2 |
(இ-ள்) மற்றப் பதியினிடை.....உதித்தார் - மற்று அத்திருப்பதியினில் வாழ்வு பெறுகின்ற வணிகர் குலத்திலே வந்து அவதரித்தார்; கற்றை....கருத்துடையார் - கற்றையாகிய சடையினையுடைய சிவபெருமானது திருவடிகளில் கொண்ட பெருவிருப்பம் தமதுடலின் வளர்ச்சியினுடனே வளரும் கருத்தினை உடையவர்; அற்றைக்கு......என்பார் - அவ்வந்நாளும் அப்பதியில் திருத்தூங்கானை மாடத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவரது திருவடித் தொண்டு பற்றிப் பணிசெய்யும் கலிக்கம்பர் என்று சொல்லப்படுவர்; மற்றோர் பற்றில்லார் - சிவனடிப் பற்றேயன்றி வேறு ஒரு பற்றுமில்லாதவர். |
(வி-ரை) உதித்தாரும் - கருத்துடையாரும், என்பாரு மாவர்; அவர்பற்றில்லார் என்று முடிக்க. காதல் உடனே வளரும் கருத்து - பிறந்தபோதே கழற்காதலுடன் பிறந்தார். இவர் வளரக் காதலுடைய கருத்து உடன் வளர்ந்தது. |
அற்றைக்கன்று - அன்றைக்கு - என்பது எதுகை நோக்கி அற்றைக்கு - என நின்றது, அற்றைக்கன்று - ஒவ்வொரு நாளும். அற்றைக்கென்று என்று பாடங்கொண்டு, அற்றைக்கு - மறுமைக்கு உறுதுணையாக என்பாருமுண்டு. |
தூங்கானைமாடம் - இப்பதியி்ல் உள்ள கோயிலின் பெயர். தலவிசேடம் பார்க்க. |
அடித்தொண்டு பற்றி - தொண்டினையே உரிய பற்றாகப் பற்றிக்கொண்டு; பிரிநிலை ஏகாரம் தொக்கது. மற்றோர் பற்றில்லார் - என எதிர்மறையாலும் மேல்விரித்தல் காண்க. “பற்றுக பற்றற்றான் பற்றினை” (குறள்); “முதல்வன் பாதமே பற்றா நின்றாரை” (பிள். தேவா); “மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன்” (தேவா - நம்பி) 2 |
4014. | ஆன வன்பர் தாமென்று மரனா ரன்பர்க் கமுதுசெய மேன்மை விளங்கும் போனகமும் விரும்பு கறிநெய் தயிர்தீம்பால் தேனி னினிய கனிகட்டி திருந்த வமுது செய்வித்தே ஏனை நிதியம் வேண்டுவன வெல்லா மின்ப முறவளிப்பார். 3 |
4015. | அன்ன வகையாற் றிருத்தொண்டு புரியு நாளி லங்கொருநாள் மன்னு மனையி லமுதுசெய வந்த தொண்டர் தமையெல்லாம் தொன்மை முறையே யமுதுசெயத் தொடங்கு விப்பா ரவர்தம்மை முன்ன ரழைத்துத் திருவடிக ளெல்லாம் விளக்க முயல்கின்றார், 4 |
4016. | திருந்து மனையார் மனையெல்லாந் திகழ விளக்கிப் போனகமும் பொருந்து சுவையிற் கறியமுதும் புனிதத் தண்ணீ ருடன்மற்றும் அருந்து மியல்பி லுள்ளனவு மமைத்துக் கரக நீரளிக்க விரும்பு கணவர்பெருந்தவர்தாளெல்லாம்விளக்கும் பொழுதின்கண், |
4017. | முன்பு தமக்குப் பணிசெய்யுந் தமரா யேவல் முனிந்துபோய் என்பு மரபு மணிந்தபிரா னடியா ராகி யங்கெய்தும் |