புடைமை. கொண்ட - அடிமை - ஏவல் - கொண்ட என்றகுறிப்புமாம். என்னை? இவரது நாட்டில் இன்றைக்கும் பருவந்தவறாது மழை பெய்யவும், அம்மழையினுதவிகொண்டே (அணை - ஏரி - கால் - முதலியவற்றினுதவியின்றி) மேட்டு நிலங்களினும் நெல் முதலியவை விளையக் காணலாம் என்பது; கொடையினைச் செய்து அதற்காகக் காரினை விலைக்குக் கொண்ட என்பதும் குறிப்பு; “காரா னிகர்க்க வரியகொடைக் கையார்” (3803) என்று ஆசிரியர் இதனை விரித்தனர்; “பருவக் கொண்மூப்படியென” என்ற திருமுகப் பாசுரமும் காண்க. கழறிற் றறிவார் - இப்பெயர்க் காரணம் “யாவும் யாருங் கழறினவும் அறியு முணர்வும்” (3761) என்று ஆசிரியர் விரிப்பது காண்க. உம்மையின் பொருள் முன் விரிக்கப்பட்டது. |
| வகை:- மன்னர் பிரானெதிர்...வருதலும் - அரசர் பெருமானாக முடிசூடி வருபவரின் எதிரே வண்ணான் உவர் மண்ணினால் உடல் ஊறிய தன்மையினால் திருநீறு பூசியது போல விளங்கிச் சிவனடியார் போல வருதலும்; தாள் வணங்க - அவரது திருவடிகளில் வணங்க; என்னபிரான்! அடிவண்ணான் என - (அவன்) எனது பெருமானே! அடியேன் அடிவண்ணான் என்று சொல்ல; அடிச்சேரன் என்னும்....சேரலனே. அதற் குத்தரமாக அடியேன் அடிச்சேரன் என்று சொல்லும் ஆற்றலுடைய தென்னர் பெருமான், கழறிற்றறிவார் என்று சொல்லப்பெறும் சேரலரேயாவர். 44 |
சேரற்கு - சேரமன்னருக்கு; தென்னாவலர்....வீரற்கு - தென் நாவலூர் பெருமானாகிய நம்பிகளுக்குச் சிவபெருமான் அளித்தருளிய பெரிய மதமுடைய வெள்ளை யானையின் முன்னே செல்லும்படி தனது பந்தியில் உள்ளதொரு குதிரையினைச் செலுத்திய வீரருக்கு; கருப்புவில்....சூரற்கு - கரும்புவில்லை உடைய வீரனாகிய காமனை வெற்றிகொண்ட சூரராகிய மன்னவருக்கு; எனதுள்ளம்...தொண்டுபட்டே - தொண்டு பூண்ட அதனாலே எனதுள்ளமே நீ நல்லதொரு காரியத்தைச் செய்தாய். 45 |
மன்னர்பிரான் எதிர் - மன்னர் பிரானாக முடிசூடிச் செல்கின்றபோது (3764); உவர் ஊறிய - உவர்மண் ஊறியதனால்; நீற்றன்ன (பிரான்) தமர் - நீறு பூசிய அடியவர் போல - அத்தோற்றம்போல; உவர்மண் ஊறிய வெண்மை திருநீறுபோலத் தோன்றுதல் பக்குவமுடையாரது கண்ணுக்கு அமைவது; முத்தின் ஒளியினை வெண்ணீற்றொளியாகக் கண்டு போற்றினர் ஆளுடைய பிள்ளையார். “வெண்ணீற் றொளி போற்றி” (2114); பக்குவ மில்லாத மாக்களுக்கு நீற்றொளியும் உவர் மண்ணாகவும் சுண்ணாம்பாகவும் புலப்படும்; என்ன - என்னுடைய; அகரம் ஆறனுருபு; பிரான் - பிரானே! விளி வேற்றுமை (3766); தென்னர் - தென் - அழகு; தென்னர் - அழகிய சேரநாட்டவர். |
சேரற்கு - வீரற்கு - சூரற்கு - வீரரும் சூரரும்ஆகிய சேரருக்கு என்க; உள்ளம் - உள்ளமே; விளிவேற்றுமை; உள்ளமே! தொண்டுபட்டே இன்று நன்று செய்தாய் - என்று கூட்டுக; தொண்டுபட்டே - தொண்டு பட்டதனால்; ஏகாரம் தேற்றம்; நன்று - நல்ல செயல்; தென்நாவலர் பெருமான் - திருநாவலூரர்; நம்பி ஆரூரர்; தென் - அழகு; நாவலர் - நாவலூரர்; நாவின் வன்மை குறித்ததென்றலுமாம். பெருமாற்கு - பெருமானுக்காக; பெருமாற்கு அளித்த என்க; நான்காம் வேற்றுமை கொடை பொருளில் வந்தது. கரி முன்பு - கரியின் முன்பு; பந்தி - குதிரைப் பந்தியில் உள்ள; இவுளி - குதிரை; கரிமுன்பு - இவுளி வைத்தலாவது - கரியின் முன்னே குதிரையைச் செலுத்துதல்; பாரம் - பெருமைத் திறமை; சிவனளித்த |