| என்க. அரச தண்டனையின் கருத்தும் இது; “திருந்தாரை வெல்லும்” என்ற வகைநூற் கருத்தும் காண்க; இனி, அடியாரை இகழ்ந்து ஏனை உலகரும் நரகம் புகாது இது கண்டு உலகம் உய்தற் பொருட்டு உலகவர்மேல் வைத்த அன்பு என்பதுமாம். “திருநீறு சார்ந்தாரை, ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாமை எண்ணுவார்” (3989) என்றதும் காண்க; இனிச், சிவன்பாலும் அடியார்பாலும் செறியவைத்த அன்பு என்றலுமாம்; உடலோடு அழியத்தக்க உடற்சார்பு உயிர்ச்சார்புகளாகிய மனைவி மக்கள் சுற்றம் இவர்களை ஒருவர் இகழ்ந்தால் கேட்கத் தரியாது பெருங்கலாம் விளைப்பது உலகியலுட் காணப்படும் உண்மை; அழியாது நீடிய உயிர்ச்சார்பாகிய சிவனையும் சிவனடியாரையும் இகழ்ந்தால் கேட்கத் தரியாது ஆவன செய்தல் அவர்பால் அன்புடையோர் செய்கை; வாளா இருப்பவர் அன்பில்லார்; சிவனன்பினாற் செய்யப்படுதலால் இது திருத்தொண்டு - திருப்பணி எனப்பட்டது. சிவனை இகழக்கேட்டால் அவரைத் தண்டனை செய்; அஃதியலாவிடில் சிவசிவ என்று காதைப் பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றுவிடு என்பது சிவாகம விதி. “இறைவி கேளா, வஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி, யெஞ்சலின் முதியோன் போகா னேகுவன் யானே யென்னாப், பஞ்சடி சேப்ப வாண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள்” (கந்தபு - தவங்காண் படலம் 28) என்றபடி, முதியோராய் வந்த இறைவர் சிவனைப் பழித்துக் கூறிய சொற்கேட்ட பார்வதியம்மையார் இவ்வொழுக்கத்தை நயந்து உலகறிவுறுத்திய வரலாறு இங்குக் கருதத் தக்கது. |
| ஓங்குசீர் - முன் கூறியவாறு பலவாற்றாலும் அன்பின் முதிர்ந்த திறலுடைய சிறப்பு. 4 |
| 4043. | அன்ன தாகிய வாண்மைத் திருப்பணி மன்னு பேருல கத்தில் வலியுடன் பன்னெ டும்பெரு நாள்பரி வாற்செய்து சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர். 5 |
(இ-ள்) அன்னது.....திருப்பணி - அத்தன்மைத்தாகிய ஆண்மையினையுடைய திருத்தொண்டின்; மன்னு...செய்து - நிலைபெற்ற பெரிய உலகத்தில் வலிமையுடனே பற்பல பெருங்காலம் அன்புடன் செய்து வந்து; சென்னி....ஆற்றினர் - தலையிற் கங்கையாற்றினைத் தாங்கிய இறைவரது செம்மைநெறித் திருத்தொண்டினைச் செய்துவந்தனர். |
(வி-ரை) அன்னது - முன்பாட்டிற்கூறிய அந்தத் தன்மையுடைய; முன்னறி சுட்டு; ஆகிய - ஆக்கப்பாடுடைய; ஆண்மை - வீரத்தினாலும் திறமையினாலும் வரும் பண்பு. ஆண்மைத் திருப்பணி - வீரத்தொண்டு, |
வலியுடன் - பெருந்திறமையாலன்றி யியலாமை பற்றி வலியுடன் என்றார். |
பன்னெடும் பெருநாள் - பற்பல காலங்கள். |
பரிவால் - அன்பினாலே; இகல் முதலாகிய தீக்குணம் காரணமன்றிப் பரிவினாலே; “அன்புடன்” (4042) என முன் கூறியது ஒவ்வொரு செயலின் பண்பும், இங்குக் கூறியது அவ்வாறு பலகாலம் தொடர்ந்து செய்யும் தன்மையும் பற்றியன. |
சென்னி ஆற்றினர் - சென்னி - சிரம்; ஆற்றினர் - கங்கையாற்றினை உடையவர். செந்நெறி - செம்மை தரும் நெறி; சிவநெறி. |